வீட்டுக்குள்ளேயே இருக்காரு! 2 நிமிஷம் வெளியே வந்து பார்த்தால் விஜய்க்கு என்னவாம்? கொந்தளித்த ரசிகர்
சென்னை: ஒரு 2 நிமிஷம் வெளியே வந்து ரசிகர்களை பார்த்துட்டு போனால் விஜய்க்கு என்ன ஆகிடும் என அவருடைய பிறந்தநாளில் அவரை பார்ப்பதற்காக சேலத்தில் இருந்து வந்த ரசிகர் ஒருவர், விஜய் வந்து பார்க்காததால் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்து சேலத்தில் இருந்து வந்த விஜய் ரசிகர் ஐயப்பன் கூறுகையில், நான் சேலத்தில் இருந்து இரவு 11.30 மணிக்கு பைக்கிலேயே கிளம்பி இன்று காலை 6.30 மணிக்கு நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வந்தேன். அவரை பார்க்கவே முடியவில்லை. வெளியே வரவே இல்லை. இப்படியெல்லாம் செய்தால் ரசிகர்கள் மாறத்தான் செய்வார்கள்.
நான் என் வண்டியில் இருந்து விஜய்யின் போட்டோவை எடுக்கலாம் என நினைக்கிறேன். எனக்கு வெறுத்தே போய்விட்டது. இவருடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்லத்தானே இத்தனை தூரம் வந்திருக்கிறோம்.
ஒரு 2 நிமிடம் வெளியே வந்து பார்த்தால் விஜய்க்கு என்னவாகிவிடும். 12.30 மணிக்கு வந்து பார்ப்பார் என்றார்கள் வரவில்லை, சரி 1 மணிக்கு வருவார்னு சொன்னாங்க, அதுவும் வரவில்லை. அப்புறம் கேட்டால், காரில் கிளம்பி போய்விட்டார் என்றார்கள். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். காரில் யாருமே போகவில்லை.
அவர் வந்து எங்களை பார்க்க விரும்பவில்லை. 2026 இல் அவரை பார்க்க எங்களுக்கும் விருப்பமில்லை. தவெகவுக்கு ஓட்டு போட மாட்டேன். இதுவரை திமுக, அதிமுகவுக்கு போடலை, இப்ப தவெகவுக்கும் போடமாட்டேன். எப்போதும் போல் நோட்டாவுக்குத்தான் போடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது அங்கிருந்த விஜய் கட்சியின் மகளிரணியினர், "நீ ஒரு ஓட்டு போட்டுத்தான் அவர் ஜெயிக்க போறாரா, போ போ " என்றனர்.
விஜய்யின் 51 ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக காலை முதலே விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சியினரும், திரை பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். அது போல் விஜய் ரசிகர்களும் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்.
விஜய் பிறந்தநாளன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார். அது போல் ஒவ்வொரு மாவட்டங்களிலும் தவெகவினர் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
அது போல் சென்னை சாய்பாபா கோயிலில் விஜய்யின் தாய் ஷோபா, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார். அப்போது விஜய்யை வாழ்த்துங்கள் என்றார். அது போல் பல்வேறு கோயில்களில் விஜய்யின் பெயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.
பொதுவாக அரசியல்வாதியாக இருந்தாலும் சினிமா நடிகராக இருந்தாலும், அவருடைய பிறந்தநாளுக்கு எங்கிருந்தாலும் அவர் வீட்டுக்கு வந்து அவரை வாழ்த்த ரசிகர்களும் தொண்டர்களும் நினைப்பார்கள். இதற்காகவே ரஜினிகாந்த் உள்ளிட்டோர் ஊரில் இருந்தால் நிச்சயம் வெளியே வந்து ரசிகர்களை சந்தித்துவிட்டுத்தான் வீட்டிற்குள் செல்வார். அது போல் ரசிகர்களை சந்திக்க வேண்டும் என தாங்களும் விரும்புவதில் தவறில்லையே என ரசிகர்கள் கருதுகிறார்கள்.












Click it and Unblock the Notifications