நல்லகண்ணுவை தோற்கடிச்சது யாரு சினிமாக்காரனா? ஆவேசமாக பேசிய விஜய்! மீண்டும் பரவும் வீடியோ
சென்னை: வாழ்நாள் போராளி நல்லகண்ணு நேற்று உயிரிழந்தார். வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்காக போராடிய நல்லகண்ணு 3 முறை தேர்தலில் போட்டியிட்டார். எனினும் அவர் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் நல்லகண்ணுவை தோற்கடித்தது சினிமாக்காரன் இல்லை.. அரசியல்வாதி தான் என விஜய் பேசிய வீடியோ டிரெண்ட் ஆகி வருகிறது.
சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (வயது 101) நேற்று காலமானார். எளிமையின் அடையாளமாகவும் நேர்மையானவராகவும் தன் வாழ்நாள் முழுக்க கொள்கை தவறமால் வசித்து வந்த நல்லகண்ணு, வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

3 முறை போட்டியிட்டு தோல்வி
நல்லகண்ணு வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தார். ஆனால், இவருக்கு தேர்தல் அரசியலில் என்னமோ கிடைத்தது தோல்விதான். 1967 மற்றும் 1977ஆம் ஆண்டுகளில் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். பின்னர் 1999ஆம் ஆண்டு கோவை மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டார்.
கோவை மக்களவை தேர்தலில் சிபி ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். நவீன கக்கனகாவும் நேர்மையின் சிகரமாகவும் திகழ்ந்த நல்லகண்னுவிற்கு தேர்தல் அரசியலில் மக்கள் தோல்வியை கொடுத்தாலும், தோல்வி அவரை அரசியல் பணியில் இருந்து விலக்கவில்லை.
விஜய் பேச்சை டிரெண்ட் செய்த ரசிகர்கள்
தேர்தல் வெற்றி இல்லாவிட்டாலும் சமூகப் போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு மக்களுடன் இணைந்திருந்தார். "தோற்றது நல்லகண்ணு இல்லை.. மக்கள்தான்" என்று சமூக வலைத்தளங்களில் பலரும் நேற்று முதல் பதிவிட்டு வருவதை பார்க்க முடிகிறது. இதற்கிடையே மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய், நல்லகண்ணு குறித்து பேசியதும் வைரல் ஆகி வருகிறது. அவரது ரசிகர்கள், தொண்டர்கள் இந்த பேச்சினை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
தோற்கடித்தது சினிமாகாரன் இல்லை
மதுரை மாநாட்டில் விஜய் நல்லகண்ணு பற்றி பேசியதாவது:- நல்லகண்ணுவை தோற்கடித்தது சினிமா காரன் இல்லை.. அரசியல்வாதி.. இப்படிப்பட்ட நல்ல தலைவர்களை எதிர்த்து நின்னு தோற்கடிக்கனும்னு அந்த எண்ணத்தை உருவாக்குனது சினிமாகாரன் இல்லை. அரசியல்வாதி.. அதனால்தான் எல்லா அரசியல்வாதியும் அறிவாளியும் இல்லை.. முட்டாளும் இல்லை.
சும்மா சினிமாகாரன், சினிமகாரன்னு சொல்லிட்டு.. அம்பேத்கார் அவர்களை தோற்கடிச்சது சினிமா காரன் இல்லை.. அரசியல்வாதி.. காமராஜரை விருதுநகரில் தோற்கடிச்சது சினிமாகாரன் இல்லை.. அரசியல்வாதி.." என்று விஜய் பெசினார். விஜய்யின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
6 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
நீண்ட நெடிய அரசியல் பயணத்திற்கும் பொதுவாழ்க்கைக்கும் சொந்தக்காரரான நல்லகண்ணு, கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்துள்ளார். அப்போது 1999 ஆம் ஆண்டு கோவை லோக்சபா தொகுதியில் களமிறங்கினார்.
நல்லகண்ணுவை எதிர்த்து பாஜக சார்பில் தற்போது துணை குடியரசு தலைவராக இருக்கும் சிபி ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார்.. இந்த தேர்தலில் 43.02 சதவீத வாக்குகள் நல்லகண்ணு பெற்றார். சிபி ராதாகிருஷ்ணண் 49.21 சதவித வாக்குகள் பெற்றார். இதனால், 6 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
உழைப்பவன் நிலம் உழுபவருக்கே
தேர்தல் அரசியலில் தோல்வி அடைந்தாலும் மக்களுக்கான தனது போராட்டத்தை நல்லகண்ணு கைவிடவில்லை. உழைப்பவன் நிலம் உழுபவருக்கே என போராட்டத்தை தொடங்கி தாமிரபரணி மணல் கொள்ளையை தடுப்பது வரை தொடர்ந்து மக்களுக்கான போரட்டங்களில் நல்லகண்னு ஈடுபட்டார்.
அப்படிப்பட்ட மகத்தான தலைவருக்கு தேர்தலில் தோல்வி கிடைத்ததற்கு அவர் வருத்தப்பட்டு இருக்க மாட்டார்.. மக்கள்தான் இதை நினைத்து காலத்திற்கு வருத்தப்படுவார்கள் என்று வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications