2026ல் தவெக போட்டியிடும் சின்னம் இதுதான்? டிக் அடித்து லாக் செய்த விஜய்! ஞாபகம் வச்சிக்கிறதும் ஈஸி!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சின்னத்தை அதன் தலைவர் விஜய் தேர்வு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த சின்னத்தை இனி வரும் தேர்தல் பிரச்சாரங்கள், கரூரில் பாதிக்கப்பட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பிரபலப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என சொல்லப்பட்ட தகவல் கரூர் சம்பவத்திற்கு பிறகு பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் நடந்தது முதல் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் முடங்கிவிட்டது. விஜய்யும் வெளியே தலைகாட்டவில்லை. அதன் நிர்வாகிகளும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு தற்போதுதான் மெல்ல மெல்ல வெளியே வருகிறார்கள்.
கரூர் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற விஜய் முயற்சித்து வருகிறார். இந்த சந்திப்புக்கு பிறகு, விட்டு போன தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்க முயற்சித்து வருகிறார். தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி நெருங்கி வருவதால் புதிதாக களம் காணும் விஜய் தனது கட்சிக்கான சின்னத்தை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறாராம்.
நாடு முழுக்க எந்தெந்த மாநிலங்களில் சட்டசபை பதவிக்காலம் முடிகிறதோ அங்கெல்லாம் தேர்தலை, தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தங்களுக்கான பொதுச் சின்னத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் வெளியானது.
வாக்கு சதவீதம், சட்டசபை உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகள் விதிமுறைகளுக்குள்பட்டு அப்படியே இருக்கும். தேர்தலில் வெற்றி பெறக் கூடிய கட்சிகள் மட்டும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறும். இப்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அந்தந்த கட்சிகள் விரும்பும் சின்னமே நிரந்தரமாக வழங்கப்படும்.
அப்படித்தான் திமுகவுக்கு உதயசூரியனும் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னமும் தேமுதிகவுக்கு முரசு சின்னமும், பாமகவிற்கு மாம்பழச்சின்னமும் பாஜகவிற்கு தாமரை சின்னமும், காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும் உள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் நாம் தமிழர் கட்சியும் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்று பானை, விவசாயி சின்னங்களை நிரந்தரமாக பெற்றுக் கொண்டன. தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிட்ட அளவு வாக்கு சதவீதம் பெறும் கட்சிகளோ வெற்றி பெறும் கட்சிகளோதான் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படும்.
இந்த நிலையில் கரூர் சம்பவத்தை சொல்லி தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் போட்ட வழக்கின் போது அக்கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்பது தெரியவந்தது. அதாவது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது வேறு அங்கீகாரம் என்பது வேறு. அந்த வகையில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தங்களுக்கான பொதுச் சின்னத்தை கேட்டு நவம்பர் 11 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தால் 184 சின்னங்கள் பட்டியலிடப்படும். தங்களுக்கு தேவையான சின்னங்களை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஒரு கட்சி குறைந்தபட்சம் 5 முதல் 10 சின்னங்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
இதனால் விஜய் மக்கள் மனதில் எளிதில் பதியும் சின்னங்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளாராம். அதன்படி கப்பல், விசில், ஆட்டோ உள்ளிட்ட சின்னங்களை கேட்டு விண்ணப்பிக்கவுள்ளாராம். இதையே நவம்பர் 12 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருப்பதால் தேர்தல் ஆணையம் கொடுக்கும் சின்னத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த என்ன செய்யலாம் என்பது குறித்தும் விஜய் ஆலோசித்துள்ளாராம்.












Click it and Unblock the Notifications