பதவியேற்கும் முன்பே சிஸ்டமை ‘க்ளீன்’ செய்த விஜய்.. நேரு ஸ்டேடியம் ‘சுத்தமோ சுத்தம்’.. ஒண்ணா ரெண்டா?
சென்னை: தமிழக முதலமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்பே சிஸ்டத்தை 'க்ளீன்' செய்துவிட்டார் தவெக தலைவர் விஜய். சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியம், இதற்கு மேல் சுத்தப்படுத்தவே முடியாது என்ற அளவுக்கு 4 நாட்களாக க்ளீனோ க்ளீன் செய்யப்பட்டு வருகிறது.
நடைப்பெற்று முடிந்த 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்த தேர்தலில் திமுக, 59 இடங்களில் வெற்றி பெற்று எதிர்கட்சியாக மாறியுள்ளது. அதிமுக, 47 இடங்களில் வெற்றி பெற்று 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டசபையில் 107 தவெக உறுப்பினர்களுடன் 5 காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு என 112 உறுப்பினர்களுடன் தவெக ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது. மே 7 ஆம் தேதி முதலமைச்சராக விஜய் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் பரவின.
சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவி ஏற்பு விழாவிற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. சுத்தப்படுத்தும் பணிகள், மேடைகள் அமைக்கும் பணிகள், விஐபி விருந்தினர்களுக்கு இருக்கைகள் அமைக்கும் பணிகள், மக்கள் அமர்ந்து பார்க்கும் வகையிலான இருக்கைகள், எல்இடி திரையமைக்கும் பணிகள் என அனைத்து பணிகளும் தீவிரமான நடைபெற்று வந்தன.
ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரிய நிலையில் அவரை ஆளுநர் அர்லேகர் அழைக்கவில்லை. மேலும் அவருக்கு பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட கான்வாய் வாகனங்களும் வாபஸ் பெறப்பட்டுவிட்டன. மெஜாரிட்டிக்கான 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லாததால் தவெக ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்படவில்லை என ஆளுநர் அர்லேகர் தெரிவித்தார்.
இதையடுத்து, நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்த பதவியேற்பு விழா ஏற்பாடுகள் அப்படியே நிறுத்தப்பட்டன. தொடர்ந்து, 118 மெஜாரிட்டி எண்ணைப் பெற தவெக போராடி வந்தது. நேற்று, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவைப் பெற்றார் விஜய். விசிக, ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகளும் ஆதரவு அளிப்பதாக கூறியதால் 120 நம்பர் வந்துவிட்டது எனக் கூறி மீண்டும் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இதையடுத்து, நேரு ஸ்டேடியத்தில் இன்று காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறும் எனக் கூறப்பட்டது. நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழாவுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. எனினும், நள்ளிரவு வரை ஆட்சியமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்கப்படாததால் நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்பு விழா பணிகள் நிறுத்தப்பட்டு பூட்டு போடப்பட்டது.
இந்நிலையில், மெஜாரிட்டிக்கு தேவையான ஆதரவைப் பெற மீண்டும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது தவெக. விசிக தலைவர் திருமாவளவன் இன்று கட்சியினருடன் மீண்டும் ஆலோசனை நடத்தி தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். மேலும், இந்திய முஸ்லீம் லீக் கட்சியும் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளது.
இதன் மூலம், தவெகவுக்கு 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு உள்ளது. அனைத்துக் கட்சி ஆதரவு கடிதங்களுடன் தவெக விஜய் இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்திக்கச் சென்றார். ஆளுநர் நேரம் ஒதுக்காத நிலையில் மீண்டும் திரும்பிச் சென்றார். பின்னர், ஆளுநர் சந்திக்க அழைத்ததும் யூ-டர்ன் போட்டு மீண்டும் ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். நாளை பிற்பகலில் பதவியேற்க விஜய் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நாளை பிற்பகல் 3.15 மணிக்கு தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்க உள்ளார். விஜய்யுடன் சேர்ந்து 9 அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும், ஆளுநர் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தால் தான் உறுதிப்படுத்தப்படும்.
ஆளுநர் அர்லேகரை 4வது முறையாக இன்று சந்தித்துள்ளார் தவெக தலைவர் விஜய். ஒவ்வொரு முறை விஜய், ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும்போதும், நேரு உள்விளையாட்டு அரங்கில், பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நடைபெறும், பின்னர் ஆளுநர் அழைக்காததால் பணிகள் நிறுத்தப்படுவதும் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், மீண்டும் தவெக தலைவர் விஜய்யின் பதவி ஏற்பு விழாவுக்காக நேரு உள்விளையாட்டு அரங்கம் தயாராகி வருகிறது. மெஜாரிட்டியுடன் விஜய் ஆளுநரை சந்தித்த நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில், பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பதவியேற்பு விழாவுக்காக பல முறை சுத்தப்படுத்தி, சுத்தப்படுத்தி, நேரு ஸ்டேடியம் மிக சுத்தமான ஸ்டேடியமாக மாறிவிட்டது. இதற்கு மேல் சுத்தப்படுத்தவே முடியாது என்ற அளவுக்கு 4 நாட்களாக க்ளீனோ க்ளீன் செய்யப்பட்டு விட்டது நேரு ஸ்டேடியம்.
இப்போது மீண்டும் சுத்தப்படுத்தப்பட்டு, ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. ஆட்சிக்கு வந்து, சிஸ்டமை சுத்தம் செய்கிறாரோ இல்லையோ, தவெக தலைவர் விஜய்யின் தயவால் நேரு ஸ்டேடியம் கடந்த 3 நாட்களாக பல முறை சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications