காங்கிரஸிடம் கதறினேன்.. விஜய்யுடன் கைகோர்த்திருந்தால் ஸ்வீப் அடித்திருப்போம்.. பிரவீன் சக்ரவர்த்தி!
சென்னை: தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கைகோர்த்திருந்தால் மிகப்பெரிய ஸ்வீப் செய்திருக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வாய்ப்பை தவறிவிட்டுவிட்டதாக கூறிய பிரவீன் சக்ரவர்த்தி, இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி கூட்டத்தில் எச்சரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. மதியம் 2.30 மணி நிலவரப்படி தவெக 105 தொகுதிகளிலும், திமுக 69 தொகுதிகளிலும், அதிமுக 60 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. இது இரு பெரும் திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியினர் சோகத்தில் இருக்கின்றனர்.

ஏனென்றால் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று டெல்லி காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக இருந்தனர். காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியும் தவெக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார். பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட பலரும் தவெக சார்பு நிலைப்பாட்டில் இருந்தனர். அதனை வெளிப்படையாகவும் அறிவித்தனர்.
ஆனாலும் ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோரின் பிடிவாதம் காரணமாக திமுக உடனான கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்தது. தற்போது தவெக அதிக இடங்களில் வெற்றியை பெற்று வரும் சூழலில், காங்கிரஸ் கட்சி நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அதில் பிரவீன் சக்ரவர்த்தி பேசுகையில், விஜய்யுடன் கைகோர்க்கலாம் என்று காங்கிரஸ் மீட்டிங்கில் தொடர்ச்சியாக கூறினேன்.
தவெகவுடன் ராகுல் காந்தி கைகோர்த்திருந்தால், நிச்சயமாக 3ல் இரு பங்கு சீட்களை கூட்டணியாக நின்று வென்றிருப்போம். ஆனால் காங்கிரஸ் கட்சி அந்த சான்ஸை தவறவிட்டுவிட்டது. 2022 பஞ்சாப் தேர்தலை தான் தமிழ்நாடு தேர்தல் எனக்கு நினைவுப்படுத்தியது. மக்கள் அப்போது மாற்றம் வேண்டும் என்று கூறி கொண்டே இருந்தார்கள். அதே நிலைதான் தமிழ்நாட்டில் நிலவியது.
விஜய்க்கு ஏராளமான அழுத்தம் இருந்தது. அவரின் திரைப்படம் தடை செய்யப்பட்டது. அவருக்கு பிரச்சாரம் செய்ய அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் விஜய் அசையவில்லை. உறுதியாக நின்று போராடினார். தமிழ்நாட்டில் இளம் வாக்காளர்கள் பலரும் மாற்றம் வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். தேர்தலுக்கு பின்னான கூட்டணி பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications