கரூர் துயரம்.. சிபிஐ விசாரணைக்காக இன்று மாலையே டெல்லி புறப்படும் விஜய்.. தவெகவில் நடப்பது என்ன?
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் நாளை ஆஜராக இருக்கிறார். இதற்காக இன்று மாலையே விஜய் டெல்லிக்கு தனி விமானம் மூலமாக புறப்படுகிறார். தற்போது வீட்டிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு விஜய் புறப்பட்டிருக்கிறா்.
செப்டம்பர் 27ஆம் தேதி நடிகரும், தவெக தலைவருமான விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவின் கண்காணிப்பில் சிபிஐ விசாரித்து வருகிறது.

முதற்கட்டமாக சிபிஐ அதிகாரிகள் கரூரில் விசாரணை நடத்தினர். இதையடுத்து தவெக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோரை டெல்லிக்கு அழைத்து சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். சுமார் 20 மணி நேரம் வரை இவர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது.
அதில் சுமார் 15 மணி நேரம் வரை 4 பேரும் தனித்தனியாக சும்மா அமர வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ விசாரணைக்கு வருமாறு சம்மன் அளிக்கப்பட்டது. இதனால் ஜனவரி 12ஆம் தேதி தவெக தலைவர் விஜய் டெல்லி சென்று, சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினார். விஜய்யிடம் 7 மணி நேரம் வரை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து விஜய்யிடம் 2ஆம் நாள் விசாரணை நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதனால் டெல்லியிலேயே விஜய் அன்றிரவு தங்கி இருந்தார். இதன்பின் விஜய் தரப்பில் பொங்கல் விடுமுறை கொண்டாட்டங்கள் காரணமாக, மற்றொரு நாளில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகுவதாக கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது சிபிஐ தரப்பில் நிச்சயம் ஒருநாள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
இப்படியான நிபந்தனையுடன் விஜய் உடனான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் ஜனவரி 13ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் விஜய் சென்னை திரும்பினார். அன்றைய நாள் மாலை 7 மணியளவில் மீண்டும் சிபிஐ தரப்பில் ஜனவரி 19ஆம் தேதி விஜய் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அளிக்கப்பட்டது. இதனை தவெகவினரும் உறுதி செய்தனர்.
இந்த நிலையில் நாளை சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் ஆஜராக இருக்கிறார். இதற்காக இன்று மாலையே சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக விஜய் டெல்லிக்கு புறப்படுகிறார். இதனால் நாளைய விசாரணையில் விஜய்யிடம் என்ன கேட்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications