அடக்கி வாசிக்கும் விஜய்; அமைதி காக்கும் படக்குழு; 1100 ஸ்கிரீனிங் ! ‘கோட்’ எதிர்பார்ப்பு எப்படி?
சென்னை: விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'கோட்' திரைப்படத்திற்கு எந்தளவுக்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது என்பதைப் பற்றிய தகவல்களை திருப்பூர் சுப்பிரமணியம் பகிர்ந்துகொண்டுள்ளார்.
நடிகர் விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வர உள்ளது. இதனை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி இருக்கிறார். அஜித்தை வைத்து 'மங்காத்தா' போன்ற மெகா ஹிட்டை கொடுத்தவர். அதுமட்டுமல்லாமல் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு வெளியாகப் போகும் முதல் திரைப்படம் என்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை அடுத்து ஒரு படம் மட்டுமே விஜய் நடிக்க முடிவு செய்துள்ளார். அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் இருக்கிறார்.

தவெக தொடங்கிய பிறகு வெளியாகும் படம் என்பதால் திரையரங்குகளில் கட்சியின் கொடி உச்சத்தில் பறக்கும். அரசியல் ரீதியாக பல பஞ்ச் வசனங்கள் இருந்தால், அது மேலும் சர்ச்சையை உண்டாக்கும். கடந்த 'லியோ'வுடன் ஒப்பிடும்போது, 'கோட்' படம் பற்றிய செய்திகளைப் படக்குழு கொஞ்சம் அடக்கியே வாசிக்கிறது. அதற்குக் காரணம், அரசியல் ரீதியாக ஏதேனும் நெருக்கடி வந்துவிடக்கூடாது என்பதால் அமைதியாக இருக்கும்படி பட புரமோஷன் குழுவை விஜய் கேட்டுக் கொண்டுள்ளார் என தகவல் கசிகிறது. கூடவே அரசியல் கட்சிகள் சமயம் பார்த்துக் காத்திருப்பதால், சைலண்ட் ஆகவே ரிலீஸ் செய்யலாம் என்று தயாரிப்பு தரப்பும் முடிவு எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் 'கோட்' மட்டுமல்லாமல் இந்த ஆண்டில் எதிர்பார்த்து வசூல் ரீதியாக பிளாப் ஆன படங்கள் பற்றி பல தகவல்களை திருப்பூர் சுப்பிரமணியம் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் விரிவாகப் பேசியுள்ளார். தமிழ்த் திரை உலகில் பல அதிரடி கருத்துகளை வெளிப்படையாகப் போட்டு உடைப்பவர் திருப்பூர் சுப்பிரமணியம். அவர் 'கோட்' பற்றி என்ன சொல்கிறார்? "இந்த 2024 ஆம் ஆண்டு அதிகமாக எதிர்பார்த்த பல படங்கள் நல்ல வசூலைக் கொடுக்கவில்லை. அதேவேளையில் நாங்கள் எதிர்பார்க்காத சில படங்கள் நல்ல வசூலைக் கொடுத்துள்ளன. குறிப்பாகச் சொன்னால், 'மகாராஜா', 'கருடன்' , 'வாழை' என சில படங்கள் நல்ல வருமானத்தைத் தந்துள்ளது. இந்த மாதிரியான படங்கள் ஓடுவதுதான் நல்லது. பெரிய நடிகர்களை வைத்து 300. 400 கோடி செலவில் எடுக்கப்படும் படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கலாம். மக்களுக்கு அவை நல்ல மனநிறைவைக் கொடுத்தனவா? என்றால் இல்லை என்றே சொல்வேன்.
கூடவே 300 கோடி பட்ஜெட் படம் என்றால், அதில் 250 கோடி நடிகர், நடிகை, டெக்னிஷனுக்கே சம்பளமாகப் போய்விடுகிறது போய்விடுகிறது. 80% பணத்தை இவர்களே பகிர்ந்துகொள்கிறார்கள். அப்புறம் எங்கே நல்ல கதை அம்சம் உள்ள படத்தைக் கொடுக்கப் போகிறார்கள்?
'கேப்டன் மில்லர்', 'அயலான்', 'இந்தியன் 2', 'தங்கலான்' போன்ற படங்களின் பட்ஜெட் என்ன என்பது எனக்குத் தெரியாது. இவை எல்லாம் பிரம்மாண்டமான படங்கள் என்ற முத்திரையோடு வெளியே வந்தன. இதில் எந்தப் படமும் பட்ஜெட் அளவுக்கு வசூல் செய்யவே இல்லை. 100 கோடி வசூல் என போஸ்டரில் போடுகிறார்கள். 250 கோடி செலவில் படத்தை எடுத்துவிட்டு 100 வசூல் எனப் போடுவதில் என்ன பெருமை இருக்கிறது? ஓடிடியில் படங்களைக் கடந்த 6 மாதங்களாக வாங்குவதே இல்லை. 'அரண்மனை 4' அதிக வசூல் செய்த படம். மிகப் பெரிய ஹிட். அப்படி இருந்தும் ஓடிடியில் அந்தப் படம் நல்ல விலைக்கு வாங்கப்படவில்லை. தியேட்டரில் படம் நன்றாக ஓடினால் வாங்குவதாக ஓடிடி நிறுவனங்கள் கூறின. அவர்கள் தரும் பணத்தை வைத்து நடிகர்களுக்கே சம்பளமே தரமுடியாத நிலைதான் உள்ளது.
பெரிய நடிகர்கள் 10 பேர் இருக்கிறார்கள். இவர்கள் ஒரு படத்தில் ஒரு வருஷம் நடிக்கிறார்கள். அப்படி என்ன மகாபாரதமா எடுக்கிறார்கள்? இவ்வளவு நாட்கள் படப்பிடிப்பு நடந்தால் என்ன இலாபம் வரும்?" என்றவர் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கும் விஜய்யின் 'கோட்' பற்றிய எதிர்பார்ப்பு எப்படி உள்ளது என்பதைப் பற்றிப் பேசினார். அவர் தொடர்ந்து பேசுகையில், "வரும் ஞாயிற்றுக் கிழமையிலிருந்து முன்பதிவு தொடங்கும் என நினைக்கிறேன். 'லியோ' வெளியான போது அதன் இயக்குநர் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அப்படி ஒரு எதிர்பார்ப்பு வெங்கட் பிரபுக்கு இல்லை. ஒரு காலத்தில் 'மங்காத்தா' போன்ற ஹிட் கொடுத்தவர் அவர். ஒருவேளை படம் வெளியான பிறகு எதுவும் நடக்கலாம்.
ஒரு விதத்தில் 'கோட்' படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இல்லாதது நல்லதுதான். பெரிய ஆர்வத்தோடு போய் படத்தைப் பார்த்துவிட்டு, அதில் ஒன்றுமில்லை என்றால் காலி. தமிழ்நாட்டில் உள்ள 98% தியேட்டர்களில் 'லியோ' வெளியானது. அதே அளவு 'கோட்' திரையிடப்படும். அதில் குறை இருக்க வாய்ப்பே இல்லை. தமிழ்நாட்டில் மொத்தம் 1168 திரையரங்குகள் உள்ளன. அதில் 'கோட்' 1100 திரையரங்கங்களில் திரையிடப்படும். போட்டிக்கு வேறு படங்கள் இல்லை என்றால் இத்தனை திரையிடல் சாத்தியம். 'வேட்டையன்', 'கங்குவா' ஆகிய படங்களும் தனித்தனியாக வந்தால் இதேபோல் 1100 தியேட்டர்களில் திரையிடப்படும். மிகப்பெரிய பட்ஜெட் படங்கள் அதிக அளவில் திரையிடப்பட வேண்டும். அப்படி என்றால்தான் இலாபம் வரும். ஒரு வேளை தீபாவளி போன்ற பண்டிகையை மனதில் வைத்து ஒரே நேரத்தில் 2 பெரிய படங்கள் வெளியானால் தலா 500 திரையிடல்தான் கிடைக்கும். பாதி 'கட்' ஆகும். அதனால் வசூல் பாதிக்கத்தானே செய்யும் . இதை உணர்ந்துதான் தயாரிப்பாளர் முடிவு எடுப்பார்" என்கிறார்.












Click it and Unblock the Notifications