விஜய்க்குதான் முதலிடம்? உதயநிதிக்கு 3ஆவது இடம்தான்..! ஆர்.கே கணிப்பு: அது எப்படி?
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தன் மகனை துணை முதல்வராக முன்னிறுத்தியது தவறான அரசியல் கணக்கு என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் பேசிய பிறகு அவரது பேச்சைப் பற்றிப் பலர் விளக்க உரை எழுதி வருகிறார்கள். அவர் சொன்ன குட்டிக்கதைக்கு ஒரு பக்கம் விடை தேடுகிறார்கள். இன்னொரு பக்கம் விசிக பாயாசம் மற்றும் பாசிசம் பற்றிய விஜய் பேச்சை டிகோட் செய்து வருகிறது. பாஜக இதை மாநாடு வெற்றி தேர்தல் வெற்றி எல்லாம் சாத்தியமில்லை என்கிறது. திமுக இது சினிமா ஷூட்டிங் என்கிறது. ஆனால், இதை எல்லாம் கடந்து சுமார் 3 லட்சத்திற்கும் மேலான இளைஞர்கள் விஜய் பக்கம் நிற்கிறார்கள். விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டுக்கு வரமுடியாமல் 20கிமீட்டர் தூரம் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றுள்ளன. மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநாட்டுக்கு வந்த லட்சக்கணக்கானவர்கள் அனைவரும் இளைஞர்கள்தான். திமுக, அதிமுகவில் இந்தளவுக்கு இளைஞர்கள் இல்லை. இதைப் பற்றி எல்லாம் அலசி ஆராய்ந்து பேசியுள்ளார் பத்திரிகையாளர் ஆர்.ராதாகிருஷ்ணன். அவர் விஜய்யின் பலம் என்ன என்பதைப் பற்றி விளக்கி இருக்கிறார். ஆர்.கே. அளித்துள்ள பேட்டியில், “இந்த மாநாட்டில் 45 நிமிடங்கள் மேல் மேடையில் தொடர்ந்து பேசியதே பெரிய ஆச்சரியம்தான். சினிமா அரசியல் செய்பவர்கள் பலர் மேடையில் தடுமாறுவார்கள். விஜய் தெளிவாக அவரது ரசிகர்களுக்குப் புரியும்படி பேசினார். உடனே பலரும் பாசிசமும் பாயாசமும் ஒன்றா? சிறுப்பிள்ளை தனமாகப் பேசுகிறார் என்கிறார்கள். அது அவரது ரசிகர்களுக்குப் புரிகின்ற அளவுக்கு எளிமையாகச் சொல்லி இருக்கிறார். அது ரசிகர்களிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது.
விஜய் வருகையால் அதிமுக மட்டுமே பாதிப்பு என்பதுபோல் பேசுகிறார்கள். அது என்ன லாஜிக் என்றே புரியவில்லை. கட்டாயம் இரண்டு பக்கம் இருந்து ஓட்டுகள் பிரிய வாய்ப்புகள் உள்ளன. அதுதான் உண்மை. ஒரே தரப்பு மட்டுமே பாதிக்கும் என்ற வாதம் சரியல்ல. பாஜகவையும் அவர் எதிர்க்கிறார். அதேபோல் திமுகவையும் விஜய் எதிர்க்கிறார். அது ஏனென்றால்? திமுகதான் ஆளும் கட்சி. அதை விமர்சிக்காமல் இருக்கவே முடியாது.
அதிமுக இப்போது எதிர்க்கட்சி. அதை விமர்சிக்கும் தேவை விஜய்க்கு இல்லை. அத்துடன் அது இரண்டாவது பெரிய கட்சியாக இருந்தாலும் அது நலிந்துபோய் உள்ளது. பாஜகவை விமர்சிக்கும் விஜய், காங்கிரஸ் ஊழலை விமர்சிக்கவில்லை. அதுவும் இப்போது ஆளும் கட்சியில்லை. அதற்கான தேவை இப்போதைக்குத் தேவையில்லை. இதுதான் லாஜிக்.
விஜய் தன் கட்சியின் கொள்கைகளில் பல விசயங்களை எடுத்துப் போட்டு அவியல் மாதிரி செய்துள்ளார். அவர் கட்சியில் கழகம் என்பது உள்ளது. ஆனால், திராவிடம் என்பது இல்லை. கொடியில் சிவப்பு இருக்கிறது. ஆனால், கருப்பு கிடையாது. எனவே அவர் பெரிதாக புதிய கொள்கைகள் எதையும் சொல்லவில்லை. அதற்காக சாத்தியமும் குறைவுதான். ஊழலை மட்டுமே பேசி வாக்கு பெறுவது கடினம். அதற்காக அந்த வாதம் எடுபடாது என்றும் சொல்ல முடியாது. இன்னும் ஒரு வருடம் தேர்தலுக்கு இருக்கிறது. அதுவரை விஜய் செயல்பாடு என்ன? அவர் இப்படியே மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் போட்டுவிட்டுப் போய்விடுவாரா? அல்லது களத்திற்கு வந்து செயல்படுவாரா? இந்த விஷயங்கள் முக்கியம்.
அதிமுக பலவீனமாக இருக்கிறது என்பதால் உடனே விஜய் வந்துவிடமாட்டார். இப்போதுவரை அதிமுக கட்சி ரீதியாக வலுவாகவே உள்ளது. எடப்பாடியைவிட்டு யாரும் விஜய்யிடம் போய்விடவில்லை. தளவாய் சுந்தரத்தைக் கட்சியைவிட்டு நீக்கிவிட்டார்கள். மசெ பதவியிலிருந்து எடப்பாடி தூக்கிவிட்டார். அப்படி இருந்தும் தைரியமாக அவர் பாஜகவில் போய்ச் சேர்ந்துவிடவில்லை. அக்கட்சி பலமாகவே உள்ளது. கடந்த மூன்று தேர்தலாக எடப்பாடி வெற்றிபெறவில்லை. அது ஒரு முக்கிய விசயம்தான். அதற்காக அதிமுகவினர் எல்லாம் விஜய் பக்கம் போய்விடுவார்கள் எனச் சொல்ல முடியாது.
அண்ணாமலை பற்றி சில மாதங்களாக மக்கள் மறந்துவிட்டனர். அவர் குறிப்பிட்ட தூரம் வந்தார். அதற்கு மேல் பாஜகவினால் வரமுடியவில்லை. அங்கே ஒரு தேக்கம் உள்ளது. அவர் இனிமேல் வந்து பழைய நிலையை மீண்டு மீட்டு எடுக்கவேண்டும். விஜய் கட்சியில் நிறைய இளைஞர்கள் உள்ளனர். அதிமுக, திமுகவில் அது இல்லை. ஸ்டாலின் தன் மகனுக்கு 100 மார்க் போடுகிறேன் என்றால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதுவரை குறைந்த அளவில் இளைஞர்களின் வாக்கைச் சீமானும் அண்ணாமலையும் ஈர்த்தார்கள். இப்போது அதைவிட பலமாக விஜய் வந்துள்ளார். 2026 விஜய் மற்றும் உதயநிதி, சீமான், அண்ணாமலை என்றே போகும்.
இன்றைய அளவில் தமிழ்நாட்டில் டாப் 10 பட்டியல் போட்டால் பத்து இடங்களில் ஸ்டாலின் இருக்கிறார். அப்படியான நிலையில் அவர் மகனை முன்னிறுத்துகிறார். அது அவர் செய்த தவறு. இதுவரை உதயநிதி பெரிய அளவில் சாதிக்கவில்லை என்பதுதான் உண்மை. சீனியர் அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன் இருக்கும்போது மழை தொடர்பான ஆய்வுக் கூட்டங்களில் உதயநிதி தலைமைத் தாங்குகிறார். அது எப்படிச் சரியாகும்?
அண்ணாமலை நான் அடி மட்டத்திலிருந்து ஐபிஎஸ் படித்து வந்தவன் என்கிறார். அதேபோல் விஜய் பேசும்போது கீழே இருந்து விமர்சனங்களை வாங்கி வளர்ந்தவன் என்கிறார். உதயநிதி சில்வர் ஸ்பூன் பேபி என்பதை அவர் மறமுமாகச் சொல்கிறார். அப்படிப் பார்த்தால் விஜய், உதயநிதி, அண்ணாமலை ஆகிய போட்டியில் விஜய்க்குத்தான் முதல் இடம். உதயநிதிக்கு 3வது இடம்தான்”என்றார்
தொடர்ந்து பேசிய ஆர்.கே, “விஜய்க்கு உள்ள பலம் அவர் தனது அப்பா கட்சி தொடங்கிய போது எதிர்த்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அவர் குடும்பத்திற்குக் கட்டுப்பட்டவராக இல்லை. விஜயகாந்த் குடும்பத்துக்குக் கட்டுப்பட்டு இருந்தார். அது அவரது பலவீனம்” என்கிறார்.












Click it and Unblock the Notifications