கூட்டத்தை நடத்த யோக்கிதை இல்லாதவர்கள் கட்சி நடத்த முடியுமா? விஜய்யை அட்டாக் செய்த அமைச்சர் அன்பரசன்
சென்னை: தனது கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கூட ஒழுங்காக செய்ய யோக்கியதை இல்லாதவர்கள் கட்சி நடத்த முடியுமா என்று அமைச்சர் அன்பரசன் விமர்சித்துள்ளார். சேலம் தவெக பொதுக்கூட்டத்தில் வடமாநிலத்தவர் உயிரிழந்த சம்பவம் விவாதமாகி இருக்கும் சூழலில், விஜய் மீது பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் தவெக தலைவர் விஜய் தலைமையில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. மதியம் 12.30 மணியளவில் தொடங்கிய கூட்டம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நடைபெற்றது. இதற்காக தவெக நிர்வாகிகள் காலை 10 மணிக்கு நடராஜன் தாளமுத்து மைதானத்தில் குவியத் தொடங்கினர். மைதானத்தில் மேற்கூரை கூட அமைக்கப்படவில்லை.

இதனால் கடுமையான வெயிலில் தவெக தொண்டர்கள் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் விஜய் பேசிக் கொண்டிருக்கும் போதே பலரும் மயங்கி விழுந்தனர். அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் தயாராக இருந்தது. ஆனால் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் வழியிலேயே மகாராஷ்டிராவைச் சேர்ந்த 37 வயதான சூரஜ் என்பவர் உயிரிழந்தார்.
இது தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த பின் மருத்துவமனை பக்கம் எந்த தவெக நிர்வாகியும் வரவில்லை. சிடிஆர் நிர்மல் குமார் மட்டும் செய்தியாளர்களை சந்தித்து வருத்தம் தெரிவித்தார். இதுவரை தவெக தலைவர் விஜய்யிடம் இருந்து ஒரு அறிக்கையோ, இரங்கல் பதிவோ கூட வெளியாகவில்லை. ஏற்கனவே கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.
அப்போது தவெகவினர் மவுனம் காத்தனர். விஜய்யும் கூட 3 நாட்களுக்கு பின்னர்தான் வீடியோ வெளியிட்டார். தவெக அலுவலகமே 15 நாட்கள் மூடப்பட்டது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், ராஜ் மோகன் உள்ளிட்டோர் தலைமறைவாகினர். தற்போது மீண்டும் அப்படியான சம்பவம் தவெக பொதுக்கூட்டத்தில் அரங்கேறி இருக்கிறது.
இதனால் பல்வேறு அரசியல் கட்சியினரும் தவெக தலைவர் விஜய் மீது விமர்சனம் வைத்து வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் அன்பரசன் பேசுகையில், அண்மையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பாக சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 49 தொகுதிகளில் இருந்து நிர்வாகிகள் மட்டும் திருவிடந்தைக்கு 1.75 லட்சம் பேர் வந்தார்கள்.
அந்த நிர்வாகிகளுக்கு இருக்கைகள் அமைக்கப்பட்டு, தண்ணீர், வாட்டர் பாட்டில், ஸ்நாக்ஸ், ஜூஸ் உள்ளிட்டவை வழங்கினோம். அதேபோல் 50 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைத்தோம். அந்த கூட்டத்திற்கு வந்தவர்கள் அனைவரும் பத்திரமாக வீட்டிற்கு சென்றுவிட்டனர். சில வண்டிகள் மணலில் சிக்கிவிட்டது. அதனையும் சரி செய்து கொடுத்தோம். இதுதான் திமுக..
இவ்வளவு பேர் வருகிறார்கள் என்றால், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அந்த மாவட்ட நிர்வாகிகளின் கட்சி. அதனை கூட ஒழுங்காக செய்ய யோக்கியதை இல்லையென்றால், கட்சி நடத்த முடியுமா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். விஜய்யின் கூட்டத்தில் தொடர்ச்சியாக இப்படியான பாதுகாப்பு குறைபாடுகள் நடந்து வருவது பல்வேறு பின்னடைவை உருவாக்கி இருக்கிறது.












Click it and Unblock the Notifications