வெண்ணெய் பானையை உடைச்சு.. நெய்க்கு அலையும் விஜய்! லட்டு மாதிரி சான்ஸ்.. மிஸ்ஸாக்கிய அடிவருடிகள்!
சென்னை: தமிழகத்தை ஆளும் கட்சியான திமுகவும், ஆண்ட கட்சியான அதிமுகவும் 'ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்' என தேடித்தேடி பிற கட்சி பிரபலங்களை தூக்கி வருகிறது. மேலும் வாக்கு சதவீதம் இருக்கிறதோ? இல்லையோ? கூட்டணிக்கு வாருங்கள் என வெளிப்படையாக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் அமமுக, தேமுதிக, பாமக, ஓபிஎஸ் என லட்டு மாதிரி கிடைத்த கூட்டணி வாய்ப்புகளை விஜயின் அடிவருடிகள் உடைத்து விட்டார்கள் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்த தேர்தலில் நிச்சயம் விஜய் தனித்து தான் போட்டியிட வேண்டிய நிலை இருப்பதாகவும் சொல்கின்றனர்.
2026 சட்டசபைத் தேர்தலை மனதில் வைத்து, தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்கள் கூட்டணியை பலப்படுத்துவதில் தீவிரமாக இறங்கி விட்டன. குறிப்பாக அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரிய அரசியல் முகாம்களும், ஒரு ஓட்டு கூட வீணாகக் கூடாது என்ற நோக்குடன் களத்தில் இறங்கியுள்ளன.
லெட்டர்பேடு வைத்திருக்கும் சிறிய கட்சிகள் முதல் செல்வாக்குள்ள தனிநபர்கள் வரை அனைவரையும் தங்களுடன் இணைத்துக் கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கட்சி தாவல்கள் அரங்கேறி வருகின்றன.

திமுக அதிமுக கூட்டணி
அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்தும் பணியில் பாஜக மிக வேகமாக செயல்பட்டு வருகிறது. பிரதமர் தலைமையில் மதுராந்தகத்தில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட பிரச்சாரக் கூட்டம், அந்தக் கூட்டணிக்கு கிடைத்த முக்கியமான உளவியல் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் பல கட்சிகளை இணைத்துக் கொண்டு, அதே சூட்டுடன் தேர்தல் மேடைகளையும் அமைத்துக் காட்டிய பாஜக, அதிமுகவுக்கு தேவையான நம்பிக்கையையும் தந்துள்ளது. இதனால், கூட்டணி பலமானதாக இருப்பதாக அதிமுக தரப்பும் திருப்தியில் உள்ளது.
எடப்பாடி பழனிசாமி -டிடிவி தினகரன்
ஒருகாலத்தில் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று வெளிப்படையாகக் கூறி வந்த டிடிவி தினகரன், இன்று எடப்பாடியும் நானும் பங்காளிகள் என்று பேசும் நிலைக்கு வந்திருப்பதே, பாஜக மேற்கொண்ட சாமதான அரசியல் வியூகத்தின் வெற்றி தான் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இப்படியான சூழலில், பிரேமலதா, ஓ.பன்னீர்செல்வம், கிருஷ்ணசாமி போன்றவர்களையும் கூட்டணிக்குள் கொண்டு வருவதில், பாஜகவுக்கு பெரும் சவால் இருக்காது என்றே மதிப்பிடப்படுகிறது.
அமமுக அதிமுக கூட்டணி
வட மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு கொண்ட பாமகவும், டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் வாக்கு வங்கியை வைத்திருக்கும் அமமுகவும் அதிமுக அணியில் இடம் பெற்றிருப்பது, அந்தக் கூட்டணிக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. இதோடு, பூவை ஜெகன்மூர்த்தி, ஜான் பாண்டியன் போன்ற தலைவர்களை தங்கள் பக்கம் தக்க வைத்திருப்பதன் மூலம், பட்டியலின சமூக வாக்குகளையும் ஓரளவுக்கு உறுதி செய்துள்ளதாக பாஜக- அதிமுக நம்புகிறது.
திமுக கூட்டணி
மற்றொரு பக்கம், திமுகவும் நாம் பெரிய கட்சி என்ற மெத்தனத்தில் அமராமல், கூட்டணியை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. எஸ்டிபிஐ, தமிழர் தேசியக் கட்சி, வீர முத்தரையர் சங்கம் போன்ற அமைப்புகளை தங்கள் அணிக்குள் கொண்டு வந்ததன் மூலம், சமூக ரீதியான சமநிலையை திமுக கணக்கில் எடுத்துள்ளது. எம்ஜிஆர் காலம் தொடங்கி, முத்தரையர் சமூக வாக்குகள் பெரும்பாலும் அதிமுக பக்கம் இருந்த நிலையில், வீர முத்தரையர் சங்கத்தை திமுக தங்கள் பக்கம் இழுத்தது, ஒரு திட்டமிட்ட அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது. இதேபோல், பாமக (ராமதாஸ்), தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடனான பேச்சுவார்த்தைகளையும் திமுக தொடர்கிறது.
அதிமுக தலைவர்கள்
இதற்கிடையே, எதிர்க்கட்சிகளின் முகாம்களில் இருந்த செல்வாக்குள்ள தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்கும் பணியையும் திமுக அமைதியாக செய்து வருகிறது. அன்வர் ராஜா, மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், வைத்திலிங்கம், மாணிக்க ராஜா உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தது, அந்த முயற்சியின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல், அதிமுகவும் தங்களிடமிருந்து விலகிச் சென்ற சிலரை மீண்டும் கட்சிக்குள் இணைத்து, தங்களது பழைய வலிமையை மீட்டெடுக்க முயன்று வருகிறது.
மிஸ்ஸான வாய்ப்பு
இந்த நிலையில், இந்த இரு பெரிய கூட்டணிகளுக்கும் மாற்றாக வலுவான அரசியல் சக்தியாக மாறும் என எதிர்பார்க்கப்பட்ட தமிழக வெற்றி கழகம், தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தத் தவறியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அரசியல் அனுபவம் குறைவு, தெளிவான வழிகாட்டிகள் இல்லாமை போன்ற காரணங்களால், கூட்டணி அமைப்பதில் அந்தக் கட்சி தடுமாறி வருகிறது.
விஜய் அடிவருடிகள்
அமமுக, காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தவெக கூட்டணியை நோக்கி எதிர்பார்ப்புடன் இருந்தபோதும், அதை செயல்படுத்தும் வகையிலான முயற்சிகளில் அந்தக் கட்சி இறங்கியதாகத் தெரியவில்லை. மேலும், ஜனநாயகன் திரைப்பட விவகாரம் மற்றும் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணை போன்ற விஷயங்களில் விஜய்யை அரசியல் ரீதியாக முடக்குவதில் பாஜக தந்திரமாக செயல்பட்டதாகவும் பேசப்படுகிறது. மொத்தத்தில், பல வருட அனுபவம் கொண்ட அரசியல் வீரர்கள் தேர்தல் களத்துக்கு தயாராகி விட்ட நிலையில், புதிதாக அரசியலுக்கு வந்தவர், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க முடியாமல் தனித்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதே தற்போதைய அரசியல் கள எதார்த்தம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications