டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி விஜய் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளார். இதனால் தேர்தல் முடியும் வரை அவரது திரைப்படங்களை திரையரங்குகள் மற்றும் தொலைக்காட்சிகளில் திரையிட தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சன பட்நாயக்கிற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதனால் விஜய் திரைப்படத்துக்கு தமிழகத்தில் தடை வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் அவரது கட்சி களமிறங்க உள்ளது. நடிகர் விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இன்னொரு தொகுதியிலும் விஜய் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படியான சூழலில் தான் வரும் 27 ம் தேதி சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் விஜய் பங்கேற்று சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட உள்ளார். இந்நிலையில் தான் தற்போது விஜய்க்கு எதிராக காங்கிரஸ் கட்சி கிளம்பி உள்ளது.

காங்கிரஸ் கடிதம்
விஜய் சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளதால் அவரது திரைப்படத்தை தியேட்டர் மற்றும் டிவியில கூட போடக்கூடாது என காங்கிரஸ் கட்சிக்கு போர்க்கொடி உயர்த்தி உள்ளது.
இதுதொடர்பாக மதுரை தெற்கு தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் செய்யது பாபு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
விஜய் படத்துக்கு தடை போடுங்க
விதிமுறையின் அடிப்படையில் வரும் சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய் அவரது தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகிறார். விஜய் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். எனவே தேர்தல் முடியும் வரை அவர் நடித்த திரைப்படங்களை திரையிடுவதற்கும், புதிதாக வரும் ஜனநாயகன் படத்தை திரையிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும்.
விளம்பர பதாகைகள்
இந்த படத்தின் டிரைலர் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கங்களிலும் ஓடிக்கொண்டிருக்கிறது. விரைவில் திரைக்கு வருமென அனைத்து திரையரங்குகளிலும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. அதையும் தேர்தல் முடியும் வரை தடை செய்ய வேண்டும்.
டிவியில் கூட போடக்கூடாது
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் விஜய் நடித்த படம் திரையிட தடை விதிக்க வேண்டும். விஜய் படம் போட்ட விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற டவடிக்கை எடுக்க வேண்டுமான காங்கிரஸ் சார்பில் கேட்டு கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.
இந்த கடிதம் இன்று தான் எழுதப்பட்டுள்ளது. தற்போது வரை இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் தேர்தல் முடியும் வரை விஜய் திரைப்படத்துக்கு தடை விதிக்கப்பட உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications