விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை.. காரணம் வேற யாரும் இல்லை காங்கிரஸ் தான்.. அடுத்து என்ன?
சென்னை: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி, தமிழ்நாட்டில் தவெக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி என இணக்கமான சூழல் நிலவினாலும், 'காவிரி' என்று வந்துவிட்டால் இரு தரப்புமே தங்களின் மாநில உரிமையை அணுவளவும் விட்டுக்கொடுக்காது. இப்போது காவிரி விவகாரம் பெரிதாக வெடித்துள்ள நிலையில், பல முக்கியமான மாற்றங்கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!
கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகத் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகதாது அணைக்கான மாற்று வனப்பகுதிகளைக் கண்டறிந்துவிட்டதாகவும், விரைவில் புதிய திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துவிட்டுப் பூமி பூஜை போடப் போவதாகவும் அதிரடியாக அறிவித்திருந்தார். "இதற்குத் தமிழ்நாட்டிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியமே இல்லை" என்ற அவரது பேச்சு தமிழக அரசியல் வட்டாரங்களில் அனலைக் கிளப்பியது.

விஜய்யின் மௌனம்
சீமான் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தின் விஜய்யின் மௌனம் குறித்துக் கேள்வி எழுப்பினர். இந்தச் சூழலில் தான் இரு நாட்களுக்கு முன்பு சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் மற்றும் காவிரி சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் விஜய் ஒரு அவசர ஆலோசனையை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தின் போது, மேகதாது விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ள ஒரு புதிய பின்னடைவு குறித்து அதிகாரிகள் முதல்வருக்கு விளக்கினர். அதாவது கடந்த 2025 நவம்பரில் உச்ச நீதிமன்றம் மேகதாது அணைக்கான ஆரம்பக்கட்ட திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை மத்திய நீர்வள ஆணையம் கண்காணிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது.. இதனை எதிர்த்துத் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த 'மறுஆய்வு மனுவை' தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு நேற்று (மே 25) அடியோடு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
உரிமை உண்டு
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனக்கு ஒதுக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்த முழு உரிமை உண்டு. இறுதி திட்ட அறிக்கை தயாரான பிறகு, அது உச்ச நீதிமன்ற விதிகளுக்கு முரணாக இருந்தால் மட்டுமே தமிழக அரசு சட்டப்படி அணுகலாம்" என நீதிமன்றம் திட்டவட்டமாக கூறிவிட்டது. மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும், கர்நாடகா ஒருதலைப்பட்சமாக மேகதாதுவில் புதிய அணையை கட்டிவிட முடியாது என்பதில் விஜய் அரசு உறுதியாக உள்ளது.
தமிழக அரசு
காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் 2018 இறுதித் தீர்ப்பின்படி, கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதியின்றிப் புதிய நீர்த்தேக்கங்களைக் கர்நாடகா கட்ட முடியாது என்பதுதான் தமிழகத்தின் பிரதான வாதம். இந்தத் தீர்ப்புகளின் சாராம்சங்களை ஆராய்ந்து, கர்நாடகா மத்திய அரசிடம் டிபிஆர் தாக்கல் செய்ய முற்படும் போதே, அதனைத் தடுத்து நிறுத்த அடுத்தகட்ட 'மேல்முறையீடு' மற்றும் புதிய சட்டபூர்வமான நடவடிக்கைகளை அசுர வேகத்தில் எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ்
கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ்தான், தமிழ்நாட்டில் விஜய்யின் தவெக அரசு அமைய முக்கிய காரணமாக இருந்தது. மேலும், அமைச்சரவையிலும் பங்கெடுத்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மேகதாதுவை உள்ளூரில் எதிர்த்தாலும், கர்நாடக காங்கிரஸ் அரசு இதை 'பெங்களூரு குடிநீர்' பிரச்சினையாகப் பார்க்கிறது.
இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி, "கூட்டணிப் பாசத்திற்காக விஜய் காவிரியை விட்டுக் கொடுத்துவிடுவாரா?" என திமுக மற்றும் அதிமுக போன்ற பிரதான எதிர்க்கட்சிகள் டெல்டா மாவட்டங்களில் அரசியல் செய்கின்றன. இதனால்தான், கூட்டணிப் பூசலாக மாறாமல், அதேநேரம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் சமரசம் செய்யாமல் சட்ட ரீதியாகக் கர்நாடகாவை லாக் செய்ய விஜய் முயல்கிறார்.












Click it and Unblock the Notifications