கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.. உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு தவெக கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான இந்தி மொழியை திணிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஒன்றிய அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக இந்தியை மாற்றுவதே லட்சியம் என்ற தன் கருத்தை உள்துறை அமைச்சர் திரும்ப பெற வேண்டும் என்றும், தமிழக வெற்றி கழக தலைவரின் ஒப்புதலோடு வலியுறுத்துகிறேன் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "இந்தி மொழி நாளையொட்டி தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர், "இந்திய நாட்டின் மொழிகள் மற்றும் பேச்சு வழக்குகளுக்கு இடையே ஒரு பாலமாக இந்தி செயல்படுகிறது. இந்தி மொழி வெறும் தகவல் தொடர்பு ஊடகமாக மட்டுமல்லாமல், தொழில்நுட்பம், அறிவியல், நீதி மற்றும் நிர்வாகத்தின் அச்சாணியாக மாறுவதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள். நாட்டின் குடிமக்களை ஒன்றிணைப்பதில் இந்தி முக்கிய பங்கு வகிக்கிறது அனைத்து மொழிகளையும் இணைத்து வளர்ந்த மொழியியல் ரீதியாக தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதில் இந்தி தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Amit Shah TVK Vijay

பாஜகவின் சர்வாதிகார போக்கு

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டிருக்கும் ஒரு தேசத்தில், 22 அலுவல் மொழிகளை கொண்டிருக்கும் அரசு நிர்வாகத்தில் ஒற்றை மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பது சர்வாதிகார போக்காகும். ஒன்றிய அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக இந்தியை மாற்றுவது லட்சியம் என்று கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். பாஜக முதன் முதலில் ஆட்சியமைத்ததிலிருந்து ஒரே நாடு ஒரே ரேஷன், ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பன்முகத்தன்மை கொண்ட நாட்டை ஒற்றை தலைமையில் சுருக்க முயல்கிறது.

இந்தியை திணிக்க முயற்சி

இந்த வரிசையில் தான் இப்போது ஒரே நாடு ஒரே மொழி என்று இந்தியை திணிக்க முயல்கிறார்கள். ஒன்றிய அரசு கொண்டுவந்த தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தி, கொல்லைப்புறம் வழியாக இந்தியை திணிக்க ஒன்றிய பாஜக அரசு முயன்றது. யார் வேண்டுமானாலும் எந்த மொழியை வேண்டுமானாலும் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் படிக்கலாம். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், வலுக்கட்டாயமாக திணிப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும்.

இந்தி திணிப்பு தோல்வி

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கை என்பதுதான் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கையும் கூட. இதனை எங்கள் பொதுக்குழுவிலும், செயற்குழுவிலும் தீர்மானமாகவே நிறைவேற்றி இருக்கிறோம். இந்தியை திணிப்பதில் ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து தோல்வி கண்ட போதிலும், விடாமல் இந்தியை திணிக்கும் முயன்று வருகிறது. ஒன்றிய அரசின் நிர்வாகத்தில் அலுவல் மொழியாக, 22 மொழிகள் இருக்கும்போது இந்தியை மட்டும் தொழில்நுட்பம் அறிவியல், நீதி, கல்வி மற்றும் நிர்வாகத்தின் அச்சாணியாக மாற்ற நினைப்பது ஏதேச்சாதிகாரப் போக்கு.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள்

ஒன்றியத்தை ஆளும் அரசானது, நாட்டில் உள்ள அத்தனை மதத்தினரையும், மொழியினரையும், மாநிலத்தவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். இதுவே நாட்டின் ஒட்டுமொத்த பகுதிகளும் வளர்ச்சி அடைவதற்கான வழியாகும். இந்தி பேசாத மாநிலங்கள், பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்கள் என்று பிரித்துப் பார்ப்பதும், ஒற்றை மொழிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானவை.

கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது

எனவே கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான இந்தி மொழியை திணிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஒன்றிய அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக இந்தியை மாற்றுவதே லட்சியம் என்ற தன் கருத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் திரும்ப பெற வேண்டும் என்றும், தமிழக வெற்றி கழக தலைவரின் ஒப்புதலோடு வலியுறுத்துகிறேன்" இவ்வாறு தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+