பாஜக உறவை முறிக்கும் என்.ஆர்.காங்கிரஸ்.. ஜோஸ் மார்ட்டினால் வந்த சிக்கல்! விஜய்யுடன் சேரும் ரங்கசாமி?
புதுச்சேரி: லாட்டரி மார்ட்டின் மகன் ஜோஸ் மார்ட்டின் தொடங்கியுள்ள லட்சிய ஜனநாயகக் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்திருப்பதால், என்டிஏ கூட்டணியை முறித்துக் கொள்ள முதல்வர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பாஜக உடனான கூட்டணியில் இருந்து வெளியேறி விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளும் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
புதுச்சேரிக்கு ஏப்ரல் 29ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 22 நாட்களே இருக்கும் நிலையில், வேட்பாளர்கள் தேர்வில் அத்தனை கட்சிகளும் மும்முரம் காட்டி வருகின்றன. ஏற்கனவே புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி ஆட்சி நடந்து வரும் சூழலில், இந்த முறையும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக இணைந்தே தேர்தலை சந்திக்க உள்ளன.

பாஜகவுடன் ஏற்கனவே லாட்டரி மார்ட்டின் மகன் ஜோஸ் மார்ட்டின் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அமித்ஷா புதுச்சேரிக்கு வந்த போது, இந்தக் கூட்டணி உறுதியானது. ஆனால் புதுச்சேரியில் ஜோஸ் மார்ட்டின் கட்சி வளர்வதை முதல்வர் ரங்கசாமி விரும்பவில்லை. இதனால் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது.
அதேபோல் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் 14 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக ஏற்கனவே பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா அறிவித்துவிட்டார். ஆனால் ரங்கசாமியிடம் லட்சிய ஜனநாயகக் கட்சி கூட்டணியில் இணைந்திருப்பதாக பாஜகவின் நிர்வாகி நிர்மல் குமார் சுரானா கூறி இருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரங்கசாமி, லட்சிய ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்தால், நாங்கள் வெளியேறுவோம் என்று பாஜகவிடம் கூறி இருக்கிறார். இதனால் அமித்ஷா என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் பாஜகவுடன் முரண்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள ரங்கசாமி தீர்மானித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஒருவேளை கூட்டணி முறியும் பட்சத்தில் விஜய்யுடன் கூட்டணி அமைக்க ரங்கசாமி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனிடையே ரங்கசாமி தரப்பில் பாஜகவிடம், மாநில அந்தஸ்து வழங்கவும், லாட்டாரி அதிபர் மார்ட்டின் மகன் ஜோஸ் கட்சிக்கு சீட் தரக்கூடாது என்பதும் டிமாண்ட்டாக இருக்கிறது.
ஏற்கனவே என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் தவெக நெருக்கம் காட்டி வருகிறது. புஸ்ஸி ஆனந்த் மற்றும் ரங்கசாமி இருவரும் நெருங்கிய நண்பர்கள். விஜய் புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொண்ட போதும் கூட ரங்கசாமியை விமர்சிக்கவில்லை. இதனால் புதுச்சேரி அரசியலும் பரபரப்பாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications