மறுபடியும் மொதல்ல இருந்தா..மனு கொடுத்தே டயர்ட் ஆன செங்கோட்டையன்! ஈரோடு விஜயம்.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வரும் 16ஆம் தேதி ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பவளத்தாம்பாளையத்தை தவிர்த்து வேறு இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தி இருந்தனர். இதை அடுத்து டோல்கேட் அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அங்கும் இடவசதி இல்லை என சொல்ப்படும் நிலையில், பள்ளி ஒன்றின் உள்ளரங்கில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கரூர் சம்பவத்துக்கு பிறகு மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்பி இருக்கிறார். காஞ்சிபுரத்தில் உள்ளரங்கில் மக்களை சந்தித்து நிலையில் வழக்கம்போல் பொது இடங்களில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. நாளை புதுச்சேரியில் நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்கிறார். இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் வரக்கூடாது, கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் வரக்கூடாது என தமிழக வெற்றிக் கழக தலைமையும் தொண்டர்களை அறிவுறுத்தியுள்ளது.

விஜய் ஈரோடு பிரச்சாரம்
இந்த நிலையில் தமிழகத்தில் கரூர் சம்பவத்திற்கு பிறகு பொதுவெளியில் மக்களை சந்திக்கிறார் விஜய். சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலக்கப்பட்ட செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். அவரது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்தில் அதிமுகவுக்கு தான் செல்வாக்கு இருப்பதை நிரூபிக்க விரும்பிய எடப்பாடி பழனிச்சாமி அங்கு பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு போட்டியாக செங்கோட்டையன் அங்கு பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தை நடத்த இருக்கிறார்.
செங்கோட்டையன்
இதை அடுத்து வரும் 11ஆம் தேதி விஜய் ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரான செங்கோட்டையன் கடந்த வாரம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு மனு கொடுத்தார். தொடர்ந்து மாவட்ட எஸ்பி அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது. இதற்கிடையே ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள பவளத்தான்பாளையம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
போலீஸ் அனுமதி பிரச்சனை
அனுமதி கிடைத்தவுடன் அங்கு பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும், சாலை வலத்துக்க் அனுமதி இல்லை என செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்த நிலையில் விஜய் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்ட இடத்தில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகளும், இடப்பற்றாக்குறை இருப்பதால் அங்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதை அடுத்து பெருந்துறை அருகேயும் பவளத்தம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கூட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டது. இதற்கிடையே தற்போது புதிய இடத்தை தேர்வு செய்து தமிழக வெற்றிக் கழகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
தவெக கூட்டம் இடமாற்றம்
அதாவது விஜயம்பாளையம் டோல்கேட் அருகே உள்ள இடத்தில் விஜயின் பொதுக்கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் அதற்கான ஏற்பாடுகளை தமிழக வெற்றிக் கழகத்தினர் தொடங்க உள்ளனர். செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த பிறகு அவரது சொந்த மாவட்டத்தில் நடக்கும் பொதுக்கூட்டம் என்பதால் மிகப் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்து வருகிறார். குறைந்தது 50,000 பேர் வரை இந்த கூட்டத்துக்கு திரட்டுவர திட்டமிட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளரங்கில் விஜய்
இந்நிலையில் தற்போது மனு அளித்திருக்கும் இடமும் இட பற்றாக்குறை மிகுந்த இடம் என சொல்லப்படுகிறது. மேலும் அருகிலேயே நெடுஞ்சாலையும் இருப்பதால் விபத்து அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரத்தை போலவே ஈரோட்டிலும் உள்ளரங்கில் விஜயின் நிகழ்ச்சியை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே சொல்லப்பட்ட பவளத்தம்பாளையம் அருகே இருக்கும் தனியார் பள்ளியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications