“வாழ்நாள் முழுவதும்.. நன்றிக் கடனாக இருப்பேன் என சொன்னவர் விஜய்! ஆனால்..” - கடம்பூர் ராஜூ விமர்சனம்
சென்னை: அதிமுக குறித்து விஜய் வைத்துள்ள விமர்சனங்களுக்கு, தற்போது பதிலடிகள் பறந்து வருகின்றன. அந்த வகையில், மெர்சல் திரைப்பட விவகாரத்தை குறிப்பிட்டு, அப்போது விஜய் என்ன சொன்னார்? என்பதை அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ சுட்டிக்காட்டி விஜய்யை விமர்சித்திருக்கிறார்.
நாதகவை போலவே, அதிமுகவும் விஜய்யை கூட்டணிக்கு பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருந்தது. ஆனால், விஜய் வரவில்லை. இப்படி இருக்கையில், அதிமுக மீது விமர்சனங்களை அடுக்க தொடங்கினார் விஜய். அக்கட்சியை ஊழல் கட்சி என்று சாடியிருந்தார்.

கடம்பூர் ராஜூ பேசியது என்ன?
இதற்கு தற்போது அதிமுக தலைவர்கள் பதிலடி கொடுக்க தொடங்கியிருக்கின்றனர். குறிப்பாக, கடந்த காலங்களில் ஜெயலலிதாவிடம் விஜய் எப்படி பணிந்து போனார்? என்பதை அதிமுக தலைவர்கள் நினைவூட்டி விஜய்யை அட்டாக் செய்து வருகின்றனர். நேற்று கோவில்பட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ,
மெர்சல் படம்
"மெர்சல் படம் ரிலீஸ் ஆவதில் பிரச்சனை வருகிறது. அப்போது நான்தான் அமைச்சராக இருந்தேன். எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தார். பொதுவாக திரைப்படங்கள் வெளியாக வேண்டும் எனில், அதில் விலங்குகள் எதுவும் துன்புறுத்தப்படவில்லை என்கிற சான்று கிடைக்க வேண்டும். அதில் ஒரு சிக்கல் வந்தது. எனவே அவர் எங்களிடம் வந்தார்.
சிக்கலில் விஜய்
அரை மணி நேரம் ஒரு மணி நேரம் கிடையாது. மொத்தமாக 3 மணி நேரம் இந்த விஷயத்தை பற்றி பேச அமர்ந்திருந்தார். அது தீபாவளி நேரம், படம் ரிலீஸ் ஆனால்தான் ரூ.140 கோடி வசூல் ஆகும் என்று கேட்டுக்கொண்டார். இதில் சிக்கல் இருந்தது. விலங்குகள் நல வாரியம் தொடர்பான அலுவலகம் சென்னையில் இருக்கிறது. அதன் நிர்வாகிகள் வியாழக்கிமை மட்டுமே கூடுவார்கள். அதில்தான் சான்று வழங்குவது தொடர்பாக முடிவெடுக்கப்படும்.
எடப்பாடி பழனிசாமி முயற்சி
ஆனால் புதன்கிழமை தீபாவளி, செவ்வாய்க்கிழமை திரைப்படம் ரிலீஸ் ஆக வேண்டும். விஜய் உதவி கேட்டு வந்திருந்தது ஞாயிற்றுக்கிழமையில். எப்படி இதை செய்வது? திரைப்படத்திற்கு எப்படி சான்று வழங்குவது? என யோசித்தோம். எடப்பாடி பழனிசாமி, விஜய் நம்மை தேடி வந்ததிருக்கிறார். அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறி முயற்சிகளை மேற்கொண்டார்.
ஒரே இரவில் முடிந்த பிரச்சனை
டெல்லியில் இதற்காக பேசினோம். அடுத்த நாள் திங்கட்கிழமை அதிகாரிகளை கூட்டினோம். அந்த கூட்டத்தில் திரைப்படத்திற்கு சான்று கிடைத்தது. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை திட்டமிட்டபடி திரைப்படம் வெளியானது. இப்படியாக மெர்சல் பட பிரச்சனையில் இரவோடு இரவாக அதிமுக ஆட்சி காலத்தில் தீர்வு காணப்பட்டது. அதற்காக வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடனோடு இருப்பேன் என்று கூறினார் விஜய். ஆனால், இன்று அதிமுக பெயரை சொல்லவே பயப்படுகிறார்" என்று விஜய் மீது பாய்ந்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications