கரையுதே கதர் கட்சி? ஆஃபர்களை அள்ளித் தெளிக்கும் விஜய்! டெல்லி மனதை கரைய வைக்கும் மாஜி தலைகள்?
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் வருகைக்கு பிறகு ஆளும் திமுக, எதிர்கட்சியான அதிமுக என இரு கட்சிகளுக்குமே நெருக்கடி அதிகரித்துள்ளது. தவெக அள்ளித் தரும் ஆஃபர்களை வைத்து இரு கட்சிகளின் கூட்டணியில் அதிக சீட்டு கேட்டு சில கட்சிகள் அடம்பிடித்து வருகின்றன. சிறிய கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் கட்சி விஜயுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என இரண்டாம் கட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
கரூர் சம்பவத்தை அரசியல் ரீதியாக பயன்படுத்தக்கூடாது என்ற கோரிக்கைகள் எழுந்தாலும், நடைமுறையில் அது முழுமையாக அரசியலாக மாறிவிட்டது. இந்த விவகாரத்தில் தற்போது அரசியல் கட்சிகளிடையே முக்கியமான விவாதம் ஒன்று தான்.. அது "விஜய்க்கு ஆதரவா? அல்லது எதிர்ப்பா?" என்பதுதான்.
சில கட்சிகள் திமுக அரசை குறிவைத்து விமர்சனம் செய்வதன் மூலம் அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இன்னும் சில கட்சிகள், விஜயுடன் நல்லுறவு பேணினால் எதிர்கால தேர்தலில் கூட்டணியில் சேரலாம் என்ற நோக்கில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றன.

கரூர் சம்பவம்
கடந்த இரு வாரங்களாகவே இதைச் சுற்றி கட்சித் தலைமையகங்களில் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. சட்டரீதியாக அழுத்தம் அதிகரித்துள்ள இந்த நேரத்தில், பாஜகவும் அதிமுகவும் விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளன. விஜய் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி சிந்தித்தாலும், பாஜக குறித்து அவர் முன்னர் கடுமையாக விமர்சித்தது காரணமாக அந்த வழியில் சற்று தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. அதிமுகவுடன் மட்டும் கூட்டணி அமைப்பது, பாஜக உடனல்ல என்று கூறி சமாளிக்கலாம் என்ற ஆலோசனைகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
விஜய் கூட்டணி
ஆனால் விஜயின் தயக்கம் காரணமாக, பாஜகவும் தன் ஆதரவைப் பற்றி மறுபரிசீலனை செய்யலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸுடன் கூட்டணி அமைப்பது குறித்தும் விஜய் தீவிரமாக யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்துப் பல கட்சித் தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனும் உரையாடல் நடைபெற்றதாக தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காங்கிரஸின் சில மூத்த தலைவர்கள் விஜயுடன் கூட்டணி அமைப்பது குறித்து நேரடியாக தேசிய தலைமையகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் ஆஃபர்
விஜய் பக்கம் இருந்து காங்கிரஸுக்கு குறைந்தபட்சம் 60 சட்டமன்ற இடங்கள், துணை முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சரவையில் பங்கு போன்ற ஆஃபர்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. இதனால், திமுக கூட்டணியில் இருந்தால் காங்கிரஸுக்கு குறைந்த இடங்களே கிடைக்கும், ஆனால் விஜயிடம் கூட்டணி வைத்தால் அதிக இடங்கள் கிடைக்கும் என தேசிய தலைமை இடம் பேசி வருகின்றனர் காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள். பொதுவெளியில் இது தொடர்பாக பேசவும் ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த வகையில் கேஎஸ் அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பிரியங்கா காந்தி
மேலும் நடிகர் விஜயின் கூட்டணியை காட்டி திமுக தலைமைக்கு நெருக்கடி ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ராகுல் காந்திக்கும் இதே தகவல் கடத்தப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் திமுக தலைமையோ ராகுல் காந்தியின் ஆதரவு தங்களுக்கு தான் இருக்கிறது, இதெல்லாம் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை எனக் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர்கள் பேசி வருவதாக சொல்லப்படுகிறது.
திமுக கூட்டணி
தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பது தான் சிறந்த தேர்வாக இருக்கும், கரூர் சம்பவத்துக்கு பிறகும் கூட விஜய் மீது பெரிய அளவில் மக்களிடையே அதிருப்தி இல்லை. சிலர் திமுகவ தான் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் விஜயுடன் கூட்டணி சேரலாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் பேசி வருகிறார்கள். விஜயுடன் கூட்டணி இல்லாவிட்டாலும், அவரை ஒரு காரணமாக காட்டி திமுகவிடம் கூடுதல் சீட்டுகளை கேட்டு பெற வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications