TVK Vijay: 234 தொகுதிகளுக்கும் வொர்த்தான ஆள் இருக்காங்களா? வேட்பாளர் தேர்விலும் விஜய்க்கு குழப்பம்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு அரசியல் களம் அதிரத் தொடங்கிவிட்ட போதிலும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இன்னும் திசை தெரியாத கப்பலாகவே தத்தளித்து வருவதாகத் தகவல்கள் கசிகின்றன. கூட்டணி முடிவில் இழுபறி, கட்சிக்குள் கோஷ்டி மோதல் எனப் பலமுனைச் சிக்கல்களில் விஜய் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
கட்சித் தொடக்கம், பிரம்மாண்ட மாநாடு என ஆரம்பத்தில் வேகம் காட்டிய விஜய், கூட்டணிக்காக தன் பின்னால் பிற கட்சிகள் வரிசைகட்டி வரும் என்று நம்பினார். இதற்காகவே 'ஆட்சியில் பங்கு' என்ற கவர்ச்சிகரமான தூண்டிலையும் வீசினார்.

ஆனால், பிரதான கட்சிகளிடம் பேரம் பேச தவெகவை பிற கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன என்பதை கூட அவர் அறியவில்லை. இந்த நிலையில் தற்போது வரை எந்தவொரு வலுவான கட்சியும் தவெக பக்கம் தலைவைத்துக் கூடப் பார்க்கவில்லை. சசிகலா மற்றும் ராமதாஸ் ஆகியோரின் முடிவை மட்டுமே நம்பி தவெகவின் கூட்டணிக் கதவுகள் திறந்திருக்கின்றன.
இன்னொரு பக்கம், விஜய்யை எப்படியாவது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்க டெல்லி மேலிடம் தீவிரமாக முயன்று வருகிறது. 40 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி என்ற ஆஃபர்கள் தரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை ஏற்கலாம் என ஒரு தரப்பும், விஜய்யின் தனித்தன்மையை இது பாதிக்கும் என மற்றொரு தரப்பும் கட்சிக்குள் மல்லுக்கட்டி வருகின்றன. இந்த இரட்டை நிலைப்பாட்டால் விஜய் கடும் மன உளைச்சலில் இருப்பதாகத் தெரிகிறது.
கட்சிக்குள் ஜான் ஆரோக்கியராஜ், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் எனப் பல அதிகார மையங்கள் உருவெடுத்துள்ளன. இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வேட்பாளர் பட்டியலை விஜய்யிடம் நீட்ட, ஒருவரைப் பற்றி மற்றொருவர் புகார் வாசிப்பது எனத் தலைமையகமே போர்க்களமாக மாறியுள்ளது. இதனால் கள நிலவரம் புரியாமல், யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் விஜய் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, வேட்பாளர் சீட் ஒதுக்கீட்டில் சில முக்கிய புள்ளிகள் கோடிக்கணக்கில் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் ரசிகர் மன்ற காலத்திலிருந்து உழைத்த விசுவாசமான தொண்டர்கள் ஓரங்கட்டப்பட்டு, பணம் படைத்த புதுவரவுகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்காக மொத்தமாகத் தொகுதிகளை 'புக்' செய்யும் கலாச்சாரமும் கட்சிக்குள் நுழைந்துவிட்டது.
தற்போதைய நிலவரப்படி சுமார் 150 தொகுதிகளுக்கு மட்டுமே ஓரளவு செல்வாக்குள்ள வேட்பாளர்கள் கிடைத்துள்ளனர். மீதமுள்ள தொகுதிகளைக் கடைசி நேரத்தில் வரும் கூட்டணிக் கட்சிகளிடம் தள்ளிவிடலாம் என்ற பலவீனமான நம்பிக்கையில்தான் தவெக-வின் தேர்தல் வியூகம் நகர்ந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications