பொங்கலை காரணம் காட்டி.. சிபிஐ விசாரணைக்கு லீவு போட்ட விஜய்! ஆனா பண்டிகையை கொண்டாடலயே!
சென்னை: கரூர் நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக, டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு விஜய் ஆஜராகியிருந்தார். பொங்கல் நெருக்கத்தில் ஆஜராகியிருந்த விஜய், பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி அடுத்தடுத்த விசாரணைக்கு நாட்களை தள்ளி போட்டிருந்தார். இப்படி இருக்கையில், விஜய் பொங்கல் பண்டிகையை கொண்டாடியது போலவே தெரியவில்லையே என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கடந்த 12ம் தேதி டெல்லிக்கு தனி விமானம் மூலம் சென்ற விஜய், சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியிருந்தார். சிபிஐ விசாரணை ஒருசில நாட்களில் முடியும் விவகாரம் கிடையாது.

உண்மை காரணம் என்ன?
விஜய்க்கும் இப்படித்தான் அடுத்தடுத்த நாட்களில் விசாரணைக்கு ஆஜராக சொல்லப்பட்டது. ஆனால் பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி, விசாரணையிலிருந்து கொஞ்ச நாட்களுக்கு விலக்கு கோரியிருந்தார். எல்லாம் ஓகேதான். பொங்கல் பண்டிகையை காரணம் காட்டிதானே விலக்கு கோரப்பட்டது. அப்படியெனில் விஜய் எங்கு பொங்கலை கொண்டாடினார்? அப்படியான எந்த புகைப்படமும் இன்னும் வெளியாகவில்லை. எனில், விலக்கு கோரியதற்கான உண்மையான காரணம் என்ன?
வாய் திறக்காத விஜய்
இது தவிர வேறு சில கேள்விகளும், சிபிஐ விசாரணை குறித்து எழுந்திருக்கின்றன. விஜய் டெல்லி சென்று இறங்கிய கொஞ்ச நேரத்தில், ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக உச்சநீதிமன்றம் பட்டியலிட்டது. மறுபுறம் ஜனநாயகன் திரைப்படம் முடக்கப்படுகிறது என்று காங்கிரஸின் மாநில தலைவர் தொடங்கி, ராகுல் காந்தி வரை குரல் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், விஜய் இதுவரை தனது கண்டனத்தையோ, கருத்தையோ வெளிப்படுத்தவில்லை.
ஜனநாயகனுக்கு ஆதரவான குரல்
இதெல்லாம் ஒரு பக்கம் நடந்துக்கொண்டிருந்தாலும், திமுகதான் திரைமறைவில் வேலை செய்து ஜனநாயகன் ரிலீஸை தள்ளி போட்டது என்று தவெகவினர் பேசி வருகின்றனர். பராசக்தி திரைப்படம் போட்டியின்றி வெளியாக வேண்டும், அது வெற்றிப்பெற வேண்டும் என்றுதான் இப்படியான வேலையை திமுக செய்வதாக பேசுகின்றனர். ஆனால், சென்சார் போர்டு விஷயத்தில் முதலமைச்சரே நேரடியாக தனது கண்டனத்தை பதிவிட்டிருக்கிறார். இது ஜனநாயகனுக்கு ஆதரவான குரல்தான்.
கேள்விக்கு என்ன பதில்?
இவ்வளவு அரசியல் நடந்துக்கொண்டிருக்கும்போது விஜய் என்னதான் செய்துக்கொண்டிருக்கிறார் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். தனது திரைப்படம் வெளியாவதற்கு குரல் கொடுக்கவில்லை, கண்டன இயக்கங்களை நடத்தவில்லை, பொங்கல் பண்டிகை என்று சொல்லி லீவு போட்டவர், பண்டிகையை கொண்டாடியதாகவும் தெரியவில்லை, என்னதான் செய்கிறார் விஜய் என்று நாலாப்புறமும் எழுந்த கேள்விகள் பனையூர் இல்லத்தின் வாசலுக்கு வெளியே காத்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications