"தயவு செஞ்சு ஒற்றுமையா இருங்க!" மேடையிலேயே புலம்பிய விஜய்.. உட்கட்சி பூசலால் தவிக்கும் தவெக! பின்னணி
சென்னை: இன்று தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய் (TVK Vijay), தயவு செய்து ஒற்றுமையாக இருங்கள் என நிர்வாகிகளிடம் பேசியிருந்தார். கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் இருப்பதையே இது காட்டுவதாகப் பலரும் குறிப்பிட்டனர். இதற்கிடையே மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷியாம் இது தொடர்பாகச் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலையொட்டி இன்று தவெக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நிர்வாகிகளிடம் "தயவு செய்து கொஞ்சம் ஒற்றுமையாக இருங்கள்" என்று பேசியிருந்தார்.

உட்கட்சிப் பூசல்?
தவெகவில் உட்கட்சிப் பூசல் இருப்பதாகக் கட்சி சில காலமாகவே தகவல் வெளியாகி வந்த நிலையில், அதை உறுதி செய்யும் விதமாகவே விஜய்யின் இந்த பேச்சு அமைந்துள்ளது. அதற்கு முன்பு பேசிய புஸ்ஸி ஆனந்தும் கூட ஒற்றுமையாக இருக்கச் சொல்லியே பேசியிருந்தார். இதற்கிடையே மூத்த பத்திரிக்கையாளர் தராசு ஷியாம் இது குறித்து சில தகவல்களைக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சன் நியூஸ் சேனலுக்கு பேட்டி அளித்த அவர், "இது சினிமா ஸ்டைல் பேச்சு.. அதற்கு மேல் இதில் முக்கியத்துவம் இல்லை. விசில் சின்னம் கிடைத்த பிறகு நடக்கும் செயல்வீரர் கூட்டம் என்பதால் கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்த அக்கட்சியின் தலைவர் பேசியுள்ளார். ஆழ்ந்த அரசியல் ஞானமோ தெளிவோ அவரிடம் நான் எதிர்பார்க்கவும் இல்லை. அப்படியொரு பேச்சும் இதில் இல்லை. கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்தவே தீய சக்தி - அடிமை சக்தி, உறுதி மொழி எடுங்கள் எனப் பேசியிருக்கிறார்.
மக்கள் எப்படி நம்புவார்கள்
தமிழக நலன்களைப் பாதுகாப்பாரா என்பதே தேர்தலில் மக்களின் அடிப்படை கேள்வியாக இருக்கும். மாநில நலன், மொழி உரிமை, பெண் உரிமை, மாநிலத்தின் ஒட்டுமொத்த நலன்களைப் பாதுகாக்கும் திறன் உள்ளதா, சமூக நீதி உள்ளிட்ட தத்துவங்களைச் சுற்றிய தமிழக அரசியலைக் கடந்த 100 ஆண்டுகளாக இருந்துள்ளது. அவர் சினிமாவில் ஒரு வெற்றிகரமாக இருந்தாலும் இதை எல்லாம் பாதுகாப்பார் என்பதை மக்கள் எப்படி நம்புவார்கள்.
இதற்கு அண்ணாவை வேறு உதாரணமாகக் காட்டுகிறார். அண்ணா 1949ல் கட்சி தொடங்கினார். பல கட்டங்களைத் தாண்டி 1967ல் தான் ஆட்சியைப் பிடித்தார். 1949க்கு முன்பே பெரியாரிடம் பல ஆண்டுகள் அரசியல் பயின்றார். அப்போதே அவருக்கு மிகப் பெரிய செல்வாக்கும் இருந்தார்.
அண்ணா
அப்போதும் கூட 1949ல் தனிக்கட்சி ஆரம்பித்து மெல்ல மெல்ல வளர்ந்து, 1952 தேர்தலில் நிற்கவில்லை.. 1957ல் முதல் தேர்தல்.. 1962ல் பாதிக் கூட்டணி. 1967ல் காங்கிரஸுக்கு எதிராக முழுக் கூட்டணி என்பதே வரலாறு. எடுத்தவுடன் கட்சியை ஆரம்பித்து உடனடியாகத் தேர்தலில் போட்டியிட்டு முதல்வராவது என்பது சினிமாவில் மட்டுமே சாத்தியம். இந்தச் சினிமா ஸ்டைலை தான் அவர் அரசியல் கூட்டத்திலும் கையாள்கிறார். அதைத் தாண்டி அவரது பேச்சில் எதுவும் இல்லை" என்றார்.
உட்கட்சிப் பூசல்
ஒற்றுமை தொடர்பாக விஜய்யின் பேச்சுக்கு அவர், "விஜய் மட்டும் இல்லை.. அவருக்கு முன்பு பேசிய ஆனந்த்தும் அதைத் தான் சொன்னார்.. அதற்கு முன்பு பேசியவர்களும் அதைத் தான் சொன்னார்கள். கட்சியில் ஏதோ ஒற்றுமை குறைபாடு இருக்கிறது.. அது விஜய்யின் கவனத்திற்குப் போய் இருக்கிறது என்றே புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் செய்வது கிட்டத்தட்ட ரசிகர் மன்ற பாலிடிக்ஸ் போல தான். ஒரு ஊரில் ஒரு ஹீரோவுக்கு ரசிகர் மன்றம் இருக்கும். அங்குப் பிடிக்காதவர் இன்னொரு ரசிகர் மன்றத்தை அதே ஊரில் தொடங்குவார். அதுபோலத் தான் இவர்களும் செயல்படுகிறார்கள்" என்றார்.
பின்னணி
தூத்துக்குடியைச் சேர்ந்த தவெக மகளிர் அஜிதா ஆக்னலுக்கு, கட்சிப் பொறுப்பு வழங்கப்படவில்லை. தவெக ஆலோசனைக் கூட்டத்தில் கட்சிப் பொறுப்பு கேட்டு விஜய்யின் காரை கூட மறித்திருந்தார். ஆனாலும், விஜய்யிடம் இருந்து ரெஸ்பான்ஸ் வராததால் அவர் மனமுடைந்து தற்கொலை முயற்சி செய்தார். அதேபோல சில மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளைத் தேர்வு செய்வதிலும் தாமதம் ஏற்பட்டிருந்தது. கடந்தாண்டு ஜனவரி மாதம் தான் நிர்வாகிகள் அறிவிப்பு தொடங்கியது. குறிப்பாக சென்னை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உட்கட்சிப் பூசல் காரணமாகவே மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
நிர்வாகிகள் நியமனம் இப்போது முடிந்தாலும் கூட மாவட்டச் செயலாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க நிர்வாகிகள் மறுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் செய்தி தவெக தலைமைக்குப் போனதாலேயே விஜய் மட்டுமின்றி புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் என நான்கு பேரும் ஒற்றுமையாக இருங்கள் எனப் புலம்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications