விஜய்க்கு அடி மேல் அடி.. பதவியேற்பு விழா ஏற்பாடுகள் பாதியில் நிறுத்தம்! தவெகவினர் அப்செட்
சென்னை: விஜய் முதல்வராக பதவி ஏற்கும் விழாவானது சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுக்காததால் இந்த பணிகள் நிறுப்பட்டுள்ளன. இதனால் இன்று விஜய் பதவியேற்பு விழா நடக்காது என்றே தெரிகின்றது.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. திமுக 57 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாகியுள்ளது. ஆனால் தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காததால் அந்த கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தவித்து வருகிறது.

அழைப்பு விடுக்காத ஆளுநர்
விஜய்க்கு நேற்று காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவு தெரிவித்த நிலையில் தவெகவின் பலம் 112 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 5 எம்.எல்.ஏக்கள் ஆதரவு வேண்டும் என்ற சூழலில் மற்ற கட்சிகள் இதுவரை விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அதிமுகவும் விஜய்க்கு ஆதரவு அளிக்காது என கூறிவிட்டது. இதற்கு மத்தியில் தவெக தலைவர் விஜய் சென்னை கிண்டியில் ஆளுநர் ஆர்லேகரை சந்தித்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று நேரில் சந்தித்து ஆட்சி அமைப்பதற்காக உரிமை கோரினார். ஆனால் ஆளுநர் விஜய் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. விஜய் பதவி ஏற்கும் விழாவுக்கான ஏற்பாடுகள் சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் தீவிரமாக நடந்து வந்தன. இன்று காலை 11.30 மணிக்கு விஜய் பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்பட்டது.
பணிகள் பாதியில் நிறுத்தம்
இதற்காக அரங்கின் உள்ளே உள்ள இருக்கைகள் சீரமைக்கப்பட்டு. மின் விளக்குகள், அகன்ற திரை, ஒலிபெருக்கி என்று பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தன. இந்த நிலையில் பணிகள் அனைத்தும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்யை இதுவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததாலும், விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த கான்வாய் பாதுகாப்பு வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டதும் இதற்கான காரணமாக கூறப்படுகிறது.
விஜய் பெரும்பான்மையை காட்டினால் தான் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என்றும், விஜய் தவெக சார்பில் 107 + காங்கிரஸ் சார்பில் 5 என மொத்தம் 112 பேரின் ஆதரவு உள்ளதையே ஆளுநருக்கு வழங்கிய கடிதத்தில் கூறியதாகவும் இதனாலேயே ஆளுநர் விஜய்யை அழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க அதிமுக தலைமையில் திமுக ஆதரவுடன் ஆட்சி அமைய உள்ளதாகவும் நேற்று இரவு தகவல் பரவியது. இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
எனினும் திமுக நாங்கள் எதிர்க்கட்சியாகவே செயல்பட இருக்கிறோம். அதிமுகவுடன் பேச்சுவார்த்தை என்பதெல்லாம் உண்மையில்லை என்றும் விளக்கியுள்ளது. எப்படி ஆயினும், விஜய்க்கும் வேறு யாரும் இன்னும் ஆதரவு தெரிவிக்காததால் பெரும்பான்மையை காட்டி ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறார். விஜய்க்கு அடி மேல் அடி விழுந்து வரும் சூழலில் பதவியேற்பு விழா இன்று நடக்காமல் போனதால் தவெகவினர் அப்செட் அடைந்துள்ளனர்.
கருணாநிதிக்கு பிறகு விஜய் பதவியேற்கிறார்
விஜய் பதவியேற்பு விழா நடந்தால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகின. இதுதவிர முக்கிய பிரமுகர்களும் விழாவில் கலந்துகொள்ள உள்ளனர். கடைசியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வரும், திமுக தலைவரான கருணாநிதி கடந்த 2006-ம் ஆண்டு மே 13 ஆம் தேதி 5-வது முறையாக தமிழக முதல்வராக ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில்தான் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா கருணாநிதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கவர்னர் மாளிகைக்கு வெளியே நடைபெற்ற இந்த பதவியேற்பு விழா அப்போது முக்கியத்துவம் பெற்று இருந்தது. அதற்கு பிறகு தற்போது 20 ஆண்டுகள் கழித்து விஜய் இதே அரங்கில் முதல்வராக பொறுப்பு ஏற்க உள்ளார்.












Click it and Unblock the Notifications