1991-1996 ஜெயலலிதா முதல்முறையாக ஆட்சிக்கு வந்தபோது நடந்த அட்டகாசங்கள்.. ஒரு ரீவைண்ட்
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் மீண்டும் ஒரு நடிகர் நாடாள வந்திருக்கிறார். எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் முதல் தேர்தலில் களமிறங்கிய நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் வெற்றி பெற்றிருக்கிறார். அவரது கட்சி 100 தொகுதிகளுக்கும் மேல் முன்னிலை வகிக்கிறது. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்கலாம் என சொல்லப்படும் நிலையில், ஒரு திரை உலகப் பிரபலம் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை ஏற்கும் போது என்ன நடக்கும்? என்பதற்கான முக்கிய எடுத்துக்காட்டாக ஜெயலலிதாவை சுட்டிக் காட்டுகின்றனர். காரணம் அவரது முதல் ஆட்சி காலமான 1991-1996ல் நடந்த சம்பவங்கள் அதற்கு காரணம்..
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில், அரசியல் வரலாற்றில் இடம்பிடிக்கும் வகையில் புதிய திருப்பத்தை உருவாக்கியுள்ளது தமிழக வெற்றிக் கழகம். நடிகர் விஜய் தலைமையில் முதன்முறை தேர்தலை சந்தித்தது அந்தக் கட்சி.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், வாக்கு எண்ணிக்கையில் மிகப்பெரிய சாதனையை பதிவு செய்துள்ளது.
பிற்பகல் நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகம் 1.09 கோடி வாக்குகளை கடந்துள்ளது. இது ஒரு புதிய கட்சிஎனப் பார்க்கும் போது மிகவும் குறிப்பிடத்தக்க சாதனையாக பார்க்கப்படுகிறது.
இதுவரை தமிழக அரசியலில் திமுக, அதிமுக ஆகிய இரு பெரிய கட்சிகளே வாக்கு வங்கியில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இந்த முறை அந்த சாதனையை முறியடிக்கும் வகையில் தவெக முன்னேறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை தவெக பெற்றுள்ளது. இது அரசியல் வல்லுநர்களையே ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு பெரிய மாற்றமாக கருதப்படுகிறது. அதே நேரத்தில், திமுக 71.97 லட்சம் வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதிமுக 57 இடங்களில் முன்னிலை பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது. தொகுதி வாரியாக பார்க்கும் போது, தவெக 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. வரலாற்றுப் பார்வையில் கூட இது கவனிக்க வேண்டிய ஒன்று. 1977-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையில் அதிமுக முதல் முறையாக போட்டியிட்டு அதிக வாக்கு சதவீதத்தைப் பெற்றது ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தது. அதேபோல் தற்போது, புதிய அரசியல் மாற்றத்தை குறிக்கும் வகையில் தவெக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
அதே நேரத்தில் ஒரு திரை உலகப் பிரபலம் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை ஏற்கும் போது என்ன நடக்கும்? என்பதற்கான முக்கிய எடுத்துக்காட்டாக ஜெயலலிதாவை சுட்டிக் காட்டுகின்றனர். அதற்குக் காரணம் 1991 முதல் 1996 வரை நடந்த ஜெயலலிதாவின் ஆட்சி. 1991 சட்டசபை தேர்தல் மிகவும் அதிமுகவுக்கு சாதகமாக இருந்தது. ராஜீவ் காந்தி படுகொலைக்காக திமுக மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது.
அப்போது எழுந்த அனுதாப அலையால் அதிமுக காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 225 தொகுதிகளை கைப்பற்றியது. திமுக இரண்டு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று வரலாற்றிலேயே மிக மோசமான தோல்வியை சந்தித்தது. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதன் முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார். ஆனால் அந்த ஆட்சி தான் அதிமுக வரலாற்றில் மோசமான ஆட்சியாக பதிவானது.
ஆனால், 1991-1996 அந்த காலகட்டத்தில் ஆடம்பர அரசியல், ஊழல் குற்றச்சாட்டுகள், அதிகார மையம் உள்ளிட்டவை அதிமுகவின் மீது குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டன. அரசு சொத்துக்களை ஊழல் செய்து அபகரித்தது, சட்டம் ஒழுங்கு, அதிகார துஷ்பிரயோகம் என ஜெயலலிதாவுக்கு அடுத்தடுத்து சோதனைகள் வந்தன. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெரும் அளவுக்கு அந்த ஆட்சி காலத்தில் மோசமாக செயல்பட்டார் ஜெயலலிதா என சொல்லப்பட்டது.
1996 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸில் இருந்து பிரிந்த ஜிகே முப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை ஆரம்பித்து திமுகவுடன் கூட்டணி வைத்தார். போதாக்குறைக்கு ரஜினிகாந்த் திமுகவுக்கு ஆதரவளித்தார். "இனி மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனாலும் தமிழகத்தை காப்பாற்ற முடியாது" என்ற அவரது கூற்று அப்போது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த கருத்து சொல்லப்போனால் மக்களின் மனநிலையை பிரதிபலிப்பது போலவே இருந்தது.
தேர்தல் முடிவில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. மேலும் பல அதிமுகவின் அமைச்சர்கள் தோல்வியை தழுவினர். ஒன்பது முறை வெற்றி பெற்ற செங்கோட்டையன் அந்த தேர்தலில் தோல்வி அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த பழைய நினைவுகளை ஒப்பிடும் அரசியல் வல்லுனர்கள், புதிதாக ஆட்சி அமைக்கப் போகும் விஜய் எப்படி அதிகாரத்தை பயன்படுத்த போகிறார் என ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications