திமுக, நாயக பிம்பம், திராவிட கட்சிகள் மீதான அதிருப்தி.. விஜய் வெற்றிக்கு காரணமான அந்த 3 விஷயங்கள்!
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய வரலாற்றை படைத்திருக்கிறது. தவெக தொடங்கி 2 ஆண்டுகளில் விஜய் முதல்வர் நாற்காலியை எட்டி பிடித்துள்ளார். 70 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளன. விஜய்யின் இந்த அதிரி புதிரி வெற்றிக்கு 3 விஷயங்கள் காரணமாக அமைந்துள்ளன.
தமிழக சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 1.30 மணி நிலவரப்படி தவெக 104 தொகுதிகளிலும், திமுக 67 தொகுதிகளிலும், அதிமுக 63 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன. தமிழக வாக்காளர்களின் இந்த முடிவு அரசியல் கட்சியினருக்கு மட்டுமல்லாமல் செய்தியாளர்கள், கருத்துக்கணிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்புக்கும் அதிர்ச்சி தான்.

3 அம்சங்கள்
தவெக என்ற அரசியல் கட்சியை தொடங்கி வெறும் 2 ஆண்டுகளில் ஆட்சிக் கட்டியலில் விஜய் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார் விஜய். விஜய்யின் இந்த வெற்றிக்கு 3 அம்சங்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதாவது விஜய் மற்றும் அவரின் வியூக வகுப்பாளர்கள் தொடக்கம் முதலே இந்த 3 விஷயங்களில் தெளிவாக இருந்திருக்கின்றனர்.
முதல் விஷயம் என்னவென்றால், தவெகவை அரசியலில் பொசிசனிங் செய்வதில் கவனமாக இருந்துள்ளனர். தவெகவின் முதல் மாநாட்டிலேயே விஜய் திமுக மற்றும் பாஜகவே தங்களின் முதல் எதிரி என்பதை வெளிப்படையாக அறிவித்தார். அதற்கேற்ப ஒவ்வொரு மேடையிலும் முதல்வர் ஸ்டாலின் பெயரை நேரடியாக கூறி கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.
திமுகவே ஒரே எதிரி
முதல்வரை ஸ்டாலின் அங்கிள், ஸ்டாலின் சார் என்று கூறியது இன்ஸ்டாகிராம் இளைஞர்களுக்கு எளிதாக சென்று சேர்ந்தது. இதன் மூலமாக மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தாம்தான் என்பதை விஜய் நிரூபித்து கொண்டே இருந்தார். நாதக சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் விஜய் மற்றும் தவெகவை கடுமையாக விமர்சித்த போது, அவர்கள் பக்கம் விஜய் திரும்பவே இல்லை.
இன்னும் சொல்லப் போனால் நாதகவை விஜய் கண்டுகொள்ளவே இல்லை. அதேபோல் அதிமுகவின் பெயரை கூட விஜய் சொல்லாமல் இருந்தார். பாஜக கூட்டணி என்றும், மற்றும் பலர் கூட்டணி என்றும் கூறி விமர்சித்தார். அது அவருக்கு திமுகவின் எதிர்க்கும் திராணி தன்னிடம் மட்டுமே இருக்கிறது என்பதை மக்களிடம் நம்ப வைத்தது.
நாயக பிம்பம்
இன்னொரு பக்கம் பிம்ப அரசியலை விஜய் சாதகமாக பயன்படுத்தி கொண்டார். அதாவது சாமானிய மக்களின் அன்றாட பிரச்சனைகளை தட்டிக் கேட்கவோ, அதுதொடர்பாக பேசவோ விஜய் ஒருநாளும் முற்பட்டதே இல்லை. அன்றாடம் மக்களுடன் நெருங்கி பழகினாலோ, தெருவில் இறங்கி நடந்தாலோ, அந்த பிம்ப அரசியலுக்கு நிச்சயம் சிக்கல் தான். இதன் காரணமாகவே விஜய் ரோட்டில் இறங்கி நடக்கவே இல்லை.
ஒரு அவதாரத்தை போல், கடவுளை போல் விஜய்யை அவரது தொண்டர்கள் பார்க்க வேண்டும் என்பதில் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட வியூக வகுப்பாளர்கள் தீவிரமாக இருந்தனர். இந்த பிம்ப அரசியல் மூலமாகவே கரூர் போன்ற மிகப்பெரிய பிரச்சனையில் இருந்து விஜய்யால் வெளி வர முடிந்தது. கரூர் பிரச்சனையின் போது கூட அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை.
திராவிட கட்சிகள் மீதான அதிருப்தி
இதுவே மற்ற கட்சிகள் என்றால், அது அந்த கட்சிக்கு எதிரான அலையாகவே மாறி இருக்கும். கடைசி அம்சம் என்னவென்றால், திராவிட கட்சிகளுக்கு எதிரான மனநிலை தான். அதாவது காங்கிரஸ் கட்சியிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்றிய திமுக, திமுகவில் இருந்து பிரிந்து தொடங்கப்பட்ட அதிமுக ஆகிய கட்சிகளின் தொடர் ஆட்சியால் மக்கள் இயற்கையாகவே ஒரு அதிருப்தி மனநிலையில் இருந்தனர்.
இந்த அதிருப்தி மனநிலை சோசியல் மீடியாவில் உள்ளிட்டவற்றால் அதிகரித்து கொண்டே சென்றது. அதனை விஜய் சரியான நேரத்தில் அரசியல் களத்திற்கு வந்து அறுவடை செய்துள்ளார். கமல்ஹாசன், சீமான் போன்றோர் கடந்த சில ஆண்டுகளில் இந்த அதிருப்தி குரலை வெளிப்படுத்தி வந்துள்ளனர். திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் கொள்ளை, ஊழல், லஞ்சம் உள்ளிட்டவற்றால் நேரடியாகவே பலரும் பாதிக்கப்பட்டனர்.
அதேபோல் வாரிசு அரசியலுக்கு எதிரான குரலும் அதிகரித்தது. இன்னொரு பக்கம் புதியவர்களின் குரல்கள் சட்டசபையில் கேட்க வேண்டும் என்று மக்களும் நீண்ட நாட்களாகவே பேசி வந்தனர். இதனால் விஜய்யின் வருகை மக்களின் எண்ணவோட்டத்திற்கும் ஏதுவாக அமைந்தது. இதனால் தவெகவின் சைலண்ட் அலையை யாராலும் கணிக்க முடியவில்லை என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications