கேப்டன் பேர சொல்லியே எத்தனை நாள் கைதட்டு வாங்குவது? ட்ரெண்டுக்கு வாங்க ’இளைய கேப்டன்’ விஜய பிரபாகரன்
சென்னை: தேமுதிகவின் இளைஞர் அணி தலைவராகி இருக்கிறார் விஜய பிரபாகரன். அரசியல்வாதிகளில் நான்தான் முதன்முதலில் பேண்ட் சர்ட் போட்டேன் என பேசி இருப்பது சமூக வலைதளங்களில் கிண்டலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அம்மாவை மேடையில் அண்ணியார் என்பது, சிறிது நேரத்தில் மீண்டும் அம்மாவை கேட்டு சொல்கிறேன் என்பது என மாற்றி மாற்றி பேசி கிச்சு கிச்சு மூட்டி வருகிறார். ஏற்கனவே இவர் கேப்டனா ஓஹோ என பேசி ட்ரோல் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக அவதாரம் எடுத்தவர்களின் முக்கியமானவர் விஜயகாந்த். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு அடுத்து சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து எதிர்க்கட்சித் தலைவர் வரை உயர்ந்தவர். ஒரு சில காரணங்களால் அவர் அவர் நினைத்த உயரத்தை எட்ட முடியவில்லை.
ஆனாலும் மக்கள் மனதில் கேப்டன் என்ற சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அரசியலை தாண்டி விஜயகாந்த் எனும் மனிதரை பலருக்கும் பிடிக்கும். அதனால் தான் அவரது மரணத்திற்கு கூட தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் இரங்கல் எதிரொலித்தது.

அவரது மரணத்திற்கு பிறகு கட்சியின் தலைமை பொறுப்பை பெற்றிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். ஒவ்வொரு தேர்தலுக்கும் அணி மாறுவது தற்போது தேமுதிகவின் வழக்கமாக இருக்கிறது. அதிமுக, பாஜக, திமுக என ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில் தேமுதிக அடுத்த வாரிசாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறார் விஜய பிரபாகரன். கடந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தவர்.
இந்த நிலையில் தர்மபுரியில் நடைபெற்ற தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அப்போது விஜயகாந்தின் மோதிரத்தை அணிவித்து வாழ்த்து கூறினார் பிரேமலதா விஜயகாந்த். அப்போது பேசிய விஜய பிரபாகரன் அரசியல்வாதிகளிலேயே நான்தான் முதன்முதலில் பேண்ட் சர்ட் போட்டு அரசியல் செய்தவர் என கூறினார். அது மட்டும் அல்லாமல் இனி சத்ரியனாக இருக்கக் கூடாது, சாணக்கியனாக அரசியல் செய்ய வேண்டும். இனிமேல் தான் தேமுதிகவின் 2.0 எனக் கூறியிருந்தார்.
இதை வைத்தே அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும், மேடையில் அவரது தாயும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்ததை அண்ணியார் என கூறினார். அரசியல்வாதிகள் என்றாலும் உறவினர்கள் என்றாலும் மரியாதையான ஒரு வார்த்தை வைத்து பேசுவது வழக்கம்தான். உதாரணத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அவரது தந்தையான கருணாநிதி இருக்கும்போது தலைவர் என்று மட்டுமே அழைப்பார். தற்போது துணை முதலமைச்சர் ஆக இருக்கும் உதயநிதி அவர்கள் தந்தையாக இருந்தாலும் ஸ்டாலினை தந்தை என அழைக்காமல் தலைவர் என்று அழைப்பார் .
அந்த வகையில் பிரேமலதாவை பொதுச் செயலாளர் அல்லது கட்சியின் தலைவர் என்று கூட அழைக்கலாம். ஆனால் பெற்ற தாயை கட்சி பதவிக்காக அண்ணியார் என எப்படி அழைக்கலாம் என விமர்சனம் எழுந்திருக்கிறது. ஆனால் அப்படி சொல்லிவிட்டு சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து பல திட்டங்கள் இருக்கிறது 'அம்மாவிடம்' கேட்டுவிட்டு நான் சொல்கிறேன் நானாக சொன்னால் அது அதிக பிரசிங்கித்தனமாக இருக்கும் என பேசினார் விஜய பிரபாகரன்.
ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை அண்ணியார் அம்மா என மாற்றி மாற்றி பேசுவது ஏன்? வாரிசு அரசியல் என்று வந்தாகி விட்டது அம்மா என்று அழைக்கலாம் அல்லது வாரிசு அரசியல் அடையாளம் வேண்டாம் என்றால் அண்ணியார் என்று கூட அழைக்கலாம். எதற்கு இந்த குழப்பம் என கேள்வி எழுப்புகின்றனர் நெட்டிசன்கள்.
மேலும் அவரது பேச்சு இன்னும் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அரசியல்வாதிகளை போலவே இருக்கிறது என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது. இன்னமும் மாற்றம் வரும் மாற்றம் வரும் என சொல்லிக் கொண்டே இருந்தால் ஒன்றும் மாற்றம் வராது. இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்றவாறு தொண்டர்களை கவரும் வகையில் பேச வேண்டும். எதற்கெடுத்தாலும் ஆ.. ஊ என மேடையில் கத்துவது, கேப்டன் கேப்டன் என பேசியே எத்தனை நாள் தான் கைதட்டு வாங்குவது, நீங்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என விமர்சனத்தை விஜய பிரபாகரனை நோக்கி வைக்கின்றனர் அவரது கட்சியினர். இதற்கு விஜயபிரபாகரன் தான் பதில் சொல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications