ஜூனியருக்கு பதவி! 1999ம் ஆண்டு முதல் எம்.பி. தேர்தலில் வாய்ப்பு கேட்டும் மறுப்பு.. விஜயதாரணி பேட்டி
சென்னை: 1999ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸில் கேட்டு வருகிறேன். ஆனால் கிடைக்கவில்லை என பாஜகவில் இணைந்த விஜயதாரணி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
விளவங்கோடு எம்பியும் சட்டசபை காங்கிரஸ் கட்சியின் கொறடாவுமான விஜயதாரணி இன்றைய தினம் மத்திய அமைச்சர் எல். முருகன் தலைமையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அவரை பாராட்டிய எல். முருகன் , அக்கா விஜயதாரணி என அழைத்து நெகிழ வைத்தார்.

நீண்ட நாட்களாக விஜயதாரணி பாஜகவுக்கு செல்வார் என கூறப்பட்டு வந்த நிலையில் தொடர்ந்து மறுப்பதும் பிறகு அது குறித்த பேச்சு எழுவதுமாக இருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு வாய்ப்பு இல்லை: காங்கிரஸில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து டெல்லியில் விஜயதாரணி செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறுகையில் காங்கிரஸ் கட்சியில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அங்கு பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தலைமை பதவிகள் என்றால் பெண்களுக்கு வாய்ப்பே கொடுக்க மாட்டார்கள்.
ஜூனியருக்கு பதவி: நான் 3 முறை தொடர்ந்து எம்எல்ஏவாக இருப்பதும் சட்டசபை கொறடாவாக ரொம்ப நாளாகவே இருந்திருக்கிறேன். சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டும் கூட எனக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. சட்டசபை கட்சித் தலைவர் பொறுப்பை என்னைவிட ஜூனியருக்குத்தான் கொடுத்துள்ளனர்.
1999ஆம் ஆண்டு முதல் கேட்டேன்: சென்ற முறை எம்பி தேர்தலுக்கு நான் வாய்ப்பு கேட்டேன். 1999ஆம் ஆண்டு முதல் எம்பி சீட்டு கேட்டேன். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. கடந்த முறை சட்டசபை தேர்தலும் நாடாளுமன்ற இடைத் தேர்தலும் வந்த போது கூட நான் இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன்.
2024 லும் கிடைக்காது: ஆனால் அப்போதும் மறுக்கப்பட்டுவிட்டது. அது போல் இந்த முறையும் எம்பி தேர்தல் 2024 இல் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா என தெரியவில்லை. காங்கிரஸில் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே இல்லை. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் நிறைய பணிகள் நடைபெறவில்லை.
பாஜக முயற்சி: எந்த எம்பிக்களும் செயல்படாத நிலை உள்ளது. ஏற்கெனவே இருந்தவர்களும் எதையும் செய்யவில்லை. மத்தியில் ஆளும் கட்சியுடன் இணையும் போது நிலுவையில் உள்ள பணிகளை செய்ய முடியும். மீனவர்கள் அடிக்கடி காங்கிரஸ் ஆட்சியில் கொல்லப்பட்டு வந்தனர். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர்கள் கொலை செய்யப்படுவது குறைந்துள்ளது.
மீனவர் பிரச்சினை குறைந்தது: மீனவர் பிரச்சினைக்கு பாஜக எடுத்த முயற்சி என்பது மிகவும் பெரியது. அகில இந்திய அளவில் ரேஷன் திட்டங்கள் எல்லா மாநிலங்களிலும் போய் சேர்ந்துள்ளது. தமிழகம், மேற்கு வங்கத்தில் இந்த திட்டங்களை ஏற்க மறுக்கிறார்கள். நாட்டை வழி நடத்தக் கூடிய தலைவராக மோடி உள்ளார். அவரது தலைமையில் பெண்களுக்கான இடஒதுக்கீடு, முத்தலாக் சட்டம், இஸ்லாமிய பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளிட்ட சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
முத்தலாக்: இஸ்லாமிய பெண்களின் வாக்குகள் மொத்தமாக பாஜகவுக்கு கிடைக்கத்தான் வாய்ப்பிருக்கிறது. மோடி ஜி அவர்கள் தலைமையில் இந்தியா இயங்க வேண்டும் என்பதற்காக நான் பாஜகவில் இணைந்தேன். பெண்களுக்கு அதிக வாய்ப்பு தரும் கட்சியாக பாஜக உள்ளது. அண்ணாமலையின் யாத்திரை நல்ல முறையில் உள்ளது. பாஜகவுக்கு தமிழகத்தில் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது.
வாய்ப்பு கொடுத்தால்: கட்சியில் எனது ராஜினாமாவை கொடுத்துள்ளேன். எல்லா பதவிகளில் இருந்தும் விலகியுள்ளேன் என்றார். அப்போது அவரிடம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உங்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக பாஜக வாக்குறுதி அளித்துள்ளதா என்ற கேள்விக்கு கட்சித் தலைமை முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றார்.












Click it and Unblock the Notifications