2 ஆண்டுகள் காத்திருந்தும்.. கண்டுகொள்ளாத பாஜக தலைமை.. விஜயதரணிக்கு நயினார் கொடுத்த ட்விஸ்ட்!
சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு வந்த விஜயதரணிக்கு இம்முறையும் மாநில நிர்வாகிகள் பட்டியல் இடமில்லாதது பேசுபொருளாகி இருக்கிறது. இதன் மூலமாகத் தமிழக பாஜக நிர்வாகிகள் தரப்பில் விஜயதரணிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் பார்க்கப்படுகிறது. அதேபோல் நடிகர் சரத்குமாருக்கு தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக பாஜகவுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல் எல்.முருகன், அண்ணாமலை ஆகியோரின் ஆதரவாளர்களுக்கும் பொறுப்பு வழங்கி இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால், கோஷ்டி பூசலை குறைப்பதற்காக இப்படி அனைத்து தரப்புக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நடிகை குஷ்புவுக்கு தமிழக பாஜகவின் துணைத் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2021ல் பாஜகவின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிய கேடி ராகவனுக்கு மீண்டும் மாநிலப் பிரிவு அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சசிகலா புஷ்பா, எஸ்ஜி சூர்யா, வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட பலருக்கும் பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஆனால் சமத்துவ மக்கள் கட்சியைக் கலைத்துவிட்டு அதனை பாஜகவுடன் இணைத்த சரத் குமாருக்கு எந்தப் பொறுப்பும் அளிக்கப்படவில்லை. சரத்குமார் தேசிய அளவிலான பொறுப்பை எதிர்பார்ப்பதால், அவரை பாஜக தலைமை காத்திருக்க அறிவுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல் நடிகை மீனாவுக்கும் எந்த பொறுப்பும் அளிக்கப்படவில்லை.
அண்மையில் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கரை நடிகை மீனா சந்தித்திருந்தார். நடிகை மீனாவுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகனின் ஆதரவு இருப்பதால், விரைவில் தேசிய அளவிலான பொறுப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பாஜக தரப்பால் விஜயதரணி இதுவரை கண்டுகொள்ளப்படவில்லை.
சில நாட்களுக்கு முன்பாக கூட பாஜக தலைமை நிச்சயமாகப் பொறுப்பு வழங்கும் என்று கூறி இருந்தார். பாஜகவில் இணைவதற்காக எம்எல்ஏ பதவியையும் உதறிவிட்டு வந்தவருக்கு, இடைத்தேர்தலில் கூட வாய்ப்பு வழங்கவில்லை. இந்த நிலையில் புதிய நிர்வாகிகள் பட்டியலில் விஜயதரணி பெயர் இடம்பெறவில்லை. இதனால் விஜயதாரணி தரப்பு சோகத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே இதுபோல் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் குக செல்வம். ஆனால் அவருக்கு எந்தப் பொறுப்பையும் பாஜக வழங்காததால், வேறு வழியின்றி மீண்டும் அண்ணா அறிவாலயம் நோக்கி குக செல்வம் வந்தார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், அப்போதும் விஜயதரணிக்கு பொறுப்பு வழங்கப்படவில்லை என்றால், அவர் பாஜகவில் இருந்து விலக வாய்ப்புள்ளதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications