மார்கழி 12ல் மறைந்த விஜயகாந்த்.. ஆண்டாளின் 12வது பாசுர வரி அப்படியே பொருந்திப்போனதே!
சென்னை: கன்றின் பசித்த குரல் கேட்டதும் தானாக பால் சுரந்து பசியாற்றும் தாய் மாடு என்று ஆண்டாள் பாசுரத்தில் சொல்லப்பட்டுள்ளது அது போல! மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களும் கேப்டனும் பசித்த குரல்.. ஒலித்தாலே அந்த பசியைப் போக்கியவர் என்று இணையதளங்களில் பதிவிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மதுரையில் பிறந்து சினிமாவில் மிகச்சிறந்த நடிகராக வெற்றி பெற்று அரசியல் தலைவராகவும் பல லட்சக்கணக்கான தொண்டர்களை பெற்ற கேப்டன் விஜயகாந்த் இன்று உடல் நலக்குறைவினால் காலமானார். அவரைப் பற்றி பலரும் போற்றி புகழ்ந்து அவரது பெருமைகளை எடுத்துக்கூறி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பலரது பசியை போக்கியவர் விஜயகாந்த். படப்பிடிப்பு தளங்களில் ஹீரோவுக்கு என்ன சாப்பாடோ அதுவே லைட்மேன் உள்ளிட்ட கடைநிலை பணியாளர்களுக்கு தரப்பட வேண்டும் என்ற திட்டத்தை தனது படங்களின் படப்பிடிப்பின்போது கொண்டு வந்தவர். அது மட்டுமின்றி பணியாளர்கள் அனைவருடனும் சேர்ந்து சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்.
அரசியலில் இறங்கும் முன்பு இலவச திருமண மண்டபங்கள், ஏராளமான ஏழை ஜோடிகளுக்கு இலவசத் திருமணம், கேப்டன் ஸ்போர்ட்ஸ் அகாடமி, லிட்டில் ஃபிளவர் பார்வையற்றோர் பள்ளிகளுக்கு நன்கொடை, இலவச கணினிப் பயிற்சி மையம் என எண்ணிடலங்கா உதவிகளைச் செய்தவர்.
சுனாமி பேரிடர், குஜராத் பூகம்பம், கார்கில் போர் உள்ளிட்ட துயரங்களின்போது ஏராளமான நிவாரண உதவிகளை அனுப்பி உதவியவர் விஜயகாந்த். சினிமாவில் தனக்கென ஒரு பாதையையும் ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கி, அரசியலில் தனி முத்திரை பதித்த விஜயகாந்த்தின் மறைவு அவரது ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்துக்குமே பேரிழப்பு. அவர் மறைந்த தினமான இன்று மார்கழி 12. ஆண்டாள் பாசுரத்தில் உள்ள பாடலை குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார் வெங்கடேஷ்.
வள்ளல் விஜயகாந்த்.. ஆமா எப்போ பார்த்தாலும் விஜயகாந்த் சோறு போட்டார், பசி போக்கினார்னே சொல்லுங்க.. என்று அங்கலாய்க்கும் நபர்களை புறம் தள்ளுங்கள்! விஜயகாந்தை காட்டிலும் அதிக வருடங்கள் அன்னதானம் அளிப்பவர்கள் நாட்டில் நிறைய உண்டு! ஆனால் அவர்களுக்கும் கேப்டனுக்கும் உள்ள வித்யாசம் என்ன தெரியுமா?

கேப்டனின் அன்ன தானத்தில் அவரது முன்னாள் பசி அனுபவம் இருந்தது! அவரே நேரடியாக பாதிக்கப்பட்டு என்னைப் போல ஒருவன் பசியால் துவண்டுவிடக்கூடாது என்ற வைராக்கியத்தில் தொடங்கிய சேவை அது! அதிலும் கடமைக்கு ஏதோ ஒரு உணவளிக்காமல் பார்த்து பார்த்து பல வகை ருசியான உயர்ந்த.. உணவு வகைகளை பிறருக்குத் தந்தது தான் சிறப்பு!
மார்கழி 12 ஆம் தேதி கேப்டன் இறந்திருக்கிறார்! இந்த 12 வது நாள் திருப்பாவை பாசுரம் என்ன தெரியுமா "கனைத்து இளம் கன்றுக்கு கற்றெறுமை இரங்கி" அதாவது கன்றின் பசித்த குரல் கேட்டதும் தானாக பால் சுரந்து பசியாற்றும் தாய் மாடு போலன்னு! கேப்டனும் பசித்த குரல்.. ஒலித்தாலே அந்த பசியைப் போக்கியவர்!.
தன்னிடம் இருப்பதை பிறருக்கு கொடுப்பவன் கொடையாளி, தன்னிடம் இருப்பதிலேயே சிறந்ததை பிறருக்கு கொடுப்பவன் வள்ளல்! அதனால் தான் பசியாறிய பல வயிறுகள் மனம் குளிர்ந்து அவரை வாழ்த்துகின்றன! ஆமாம் ஏன் திடீர்னு கேப்டனுக்கு ஆண்டாள் பாசுர உதாரணம்? "கேப்டனின் குழுமங்களின் பெயரே ஆண்டாள் - அழகர் தானே" என்று பதிவிட்டுள்ளார் வெங்கடேஷ்.












Click it and Unblock the Notifications