நாக்கை துறுத்தினேனா? அம்மாவை பார்த்தா? அமைச்சர் சொன்ன அந்த கெட்ட வார்த்தை.. கலங்கிய விஜயகாந்த்
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பார்த்து நாக்கை துறுத்தவில்லை என விஜயகாந்த் கூறியதை ராதாரவி தற்போது கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு தேமுதிகவை தொடங்கி அடுத்த ஆண்டே சட்டசபை தேர்தலை சந்தித்தவர். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் தொண்டர்களை களமிறக்கினார். விருத்தாசலத்தில் விஜயகாந்தே களமிறங்கினார்.

தேர்தல் முடிவுகள் வந்த நிலையில் போட்டியிட்ட தேமுதிகவினரில் விஜயகாந்த் மட்டும் வென்றார். அதுவும் எதிர்க்கட்சிகளை தோற்கடித்து வென்றார். அப்போது தேமுதிக எடுத்த வாக்குச் சதவீதம் 8.38 சதவீதம் ஆகும். அது போல் 2009 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இடங்களில் கூட தேமுதிக வெல்லாவிட்டாலும் அக்கட்சி பெற்ற வாக்கு சதவீதம் 10.3 ஆக இருந்தது.
புதிதாக தொடங்கப்பட்ட இந்த கட்சிக்கு இந்த வாக்கு சதவீதம் பெரும் சாதனையாகும். இதனால் தேமுதிகவுடன் அதிமுக 2011 சட்டசபை தேர்தலுக்காக கூட்டணி அமைத்தது. அந்த தேர்தலில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 29 இடங்களில் வென்றது. விஜயகாந்த் தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தார். திமுகவை புறந்தள்ளிவிட்டு எதிர்க்கட்சித் தலைவரானார்.
இந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததுமே ஜெயலலிதா மின் கட்டணத்தை உயர்த்தும் மசோதாவை சட்டசபையில் கொண்டு வந்தார். இதற்கு கூட்டணி கட்சியில் இருந்த விஜயகாந்த் கடுமையாக எதிர்த்தார். அப்போது நடந்த வாக்குவாதத்தின் போது விஜயகாந்த், ஜெயலலிதாவை பார்த்து நாக்கை துறுத்தியாகவே ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இப்படிப்பட்ட நிலையில் இந்த சம்பவம் குறித்து இதுகுறித்து ராதாரவி ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: விஜயகாந்த், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பார்த்து நாக்கை துறுத்தியதாக பேசப்பட்டதை அடுத்து நான் அன்றைய தினமே விஜயகாந்தை சந்தித்தேன். அவரிடம் விஜிம்மா என்ன நடந்தது என கேட்டேன்.
அதற்கு விஜயகாந்த் , "அந்தம்மா (ஜெயலலிதா) மேல எனக்கு ரொம்ப மரியாதைடா, என்னை இவ்ளோ தூரம் கொண்டாந்ததே அம்மாதான். அந்த அம்மாவை பார்த்து நான் நாக்கை துறுத்தலைடா. நான் நாக்கை துறுத்தியதை குளோஸ் அப்பில் எடுத்துட்டாங்க. அந்த அம்மா அமைச்சரவையில் இருந்த ஒரு அமைச்சர் என் குடும்பத்தை இழுத்து பேசினார்.
அந்த கோபத்தில்தான் நான் அமைச்சரை பார்த்து நாக்கை துறுத்தினேன். அம்மாவை பார்த்து இல்லைடா" என்றார். விஜி தைரியசாலி, அந்த இடத்தில் விட்டிருந்தால் டேபிள் மேல் ஏறி போய் அந்த அமைச்சரை அடித்திருப்பார். மற்றவர்களை போல் சட்ட திட்டத்தை எல்லாம் பார்க்க மாட்டார். அவர் அது மாதிரி ஆளு! என ராதாரவி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications