துபாயில் மருத்துவ சிகிச்சை முடிந்து சென்னை திரும்பினார் விஜயகாந்த் - தொண்டர்கள் உற்சாகம்
தேமுதிக தலைவா் விஜயகாந்த் துபாய் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினாா்.
சென்னை: மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றிருந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை முடிந்து சென்னை திரும்பியுள்ளார். விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுடன் இன்று அதிகாலை 2.30 மணிக்கு துபாயிலிருந்து வரும் எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னை திரும்பினார்.
Recommended Video
தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த போதே கட்சி தொடங்கியவர். தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றவர். அதிமுக உடன் கூட்டணி அமைத்து எதிர்கட்சித்தலைவரானார். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டது.
தைராய்டு பிரச்சினை, தொண்டையில் தொற்று, சிறுநீரகப் பிரச்சினை உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். பேச்சில் தடுமாற்றம் ஏற்பட்டது.

விஜயகாந்த் ஓய்வு
உடல்நலம் தேறிய பின்னரும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வந்தார். தேமுதிக பொதுக் கூட்டங்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை விஜயகாந்த் பெரும்பாலும் தவிர்த்து வந்த நிலையில், கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடனான சந்திப்பில் மட்டும் பங்கேற்றார். திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் நேரில் சென்று விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விசாரித்து வந்தனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம்
சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்தார். கடந்த சட்டசபைத் தேர்தலின் போது சென்னையில் பிரச்சாரம் செய்த போதும் சைகையிலேயே ஓட்டு கேட்டார் விஜயகாந்த். ஆகஸ்ட் 25ஆம் தேதி அவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தன்னை யாரும் நேரில் வந்து சந்திக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் விஜயகாந்த்.

விஜயகாந்த் பயணம்
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வெளிநாட்டு பயணங்களைத் தவிர்த்து வந்தார் விஜயகாந்த். தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த மாதம் 30 ஆம் தேதி காலை விமானத்தில் துபாய் சென்றாா். விஜயகாந்த் உடன் அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் 2 உதவியாளா்கள் சென்றனா்.

விஜயகாந்துக்கு சிகிச்சை
அவருக்கு துபாயில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சையை லண்டன் டாக்டா் ஒருவா் வந்து அளிப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையே விஜயகாந்த் மனைவி பிரமலதா விஜயகாந்த் இம்மாதம் 3 ஆம் தேதி அதிகாலை விமானத்தில் துபாய் சென்றாா்.

துபாயில் சினிமா
சிகிச்சைக்கு இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் குணமடைந்து நல்ல நிலையில் மருந்துவமனையில் சத்ரியன் படம் பாா்த்து கொண்டிருப்பது போலவும்,அவா் அருகே அவருக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியா்கள் அமா்ந்திருப்பதுபோலவும் புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானதால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.

சென்னை திரும்பிய விஜயகாந்த்
இந்த நிலையில் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுடன் இன்று அதிகாலை 2.30 மணிக்கு துபாயிலிருந்து வரும் எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானத்தில் சென்னை வந்தாா்.அதன்பின்பு காா் மூலம் வீட்டிற்கு புறப்பட்டு சென்றாா். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் பழைய பன்னீர் செல்வமாக ஆரோக்கியத்துடன் திரும்பி வர வேண்டும் என்று அவரது கட்சித் தொண்டர்கள் மட்டுமல்ல சினிமா ரசிகர்களும் வேண்டிக்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications