கிராம நிர்வாக அலுவலர் இதயக்கனி போட்ட ஸ்கெட்ச்.. நெல்லையில் ஃபைல் ஓகே ஆனதும் காத்திருந்த செம ட்விஸ்ட்
சென்னை: அரசு அலுவலகங்களில் இன்னும் 3 மாதங்களில் லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்படும் என தவெக அரசு முழங்கி வரும் வேளையில், நெல்லையில் அரங்கேறியுள்ள லஞ்சப் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதி நிறுவன உரிமத்தைப் புதுப்பிக்க 10000 ரூபாய் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக பெண் அலுவலர், லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வியூகத்தில் சிக்கியுள்ளார். தவெக அரசின் லஞ்ச ஒழிப்பு எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும், அரசு ஊழியர் ஒருவர் துணிச்சலாக லஞ்சம் வாங்கி கையும் களவுமாக கைதாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அரசு அலுவலகங்களில் நிலவும் லஞ்சம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் உள்ள அரசுத் துறை அலுவலகங்களில் இன்னும் 3 மாதங்களில் (90 நாட்களில்) லஞ்சம் முழுமையாக ஒழிக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஊழல் இல்லாத தவெக ஆட்சி
மேலும், தவெக அரசு "ஜீரோ கரப்ஷன்" என்ற கொள்கையில் மிக உறுதியாக இருப்பதாகவும், முதலமைச்சரின் பெயரைச் சொல்லி தவெக கட்சிக்காரர்கள் யாரும் அரசு அலுவலகங்களில் தலையிடக் கூடாது என அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், மக்கள் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூடத் தொடமாட்டேன் என முதலமைச்சர் கூறியுள்ளதாகவும் ஆதவ் அர்ஜூனா அந்தச் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல 4 நாட்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் லஞ்ச ஊழல் ஒழிப்பு குறித்துப் பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய், ஒரே நாளில் லஞ்சத்தையும் ஊழலையும் சமூகத்திலிருந்து முற்றிலும் ஒழித்துவிட முடியாது என்று யதார்த்தத்தை குறிப்பிட்டார்.
நெல்லை மூக்காண்டி ஷாக்
இருந்தாலும் தவெக அரசு தொடர்ந்து எடுத்து வரும் தீவிர முயற்சிகளின் மூலம், நிச்சயம் ஒரு நாள் தமிழ்நாட்டில் லஞ்சமில்லாத, ஊழலற்ற ஒரு தூய்மையான மற்றும் நேர்மையான ஆட்சியைத் தனது கட்சி மக்கள் முன்னிலையில் வழங்கும் என்று மிக உறுதியாகத் தெரிவித்தார்.
இப்படி தவெக அரசின் லஞ்ச ஒழிப்பு முழக்கங்களும் தீவிர முயற்சிகளும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள இதே சூழ்நிலையில், நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக கைதாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் சிக்கினார்
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பாரதிதாசன் தெருவைச் சேர்ந்த இசக்கி முத்துவின் மகன் மூக்காண்டி, நிதி நிறுவனம் நடத்தி பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். தனது நிறுவனத்திற்கான உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக சேரன்மாதேவி கிராம நிர்வாக அலுவலரான இதயக்கனியிடம் அவர் விண்ணப்பித்திருந்தார்.
இந்நிலையில், அந்த உரிமத்தைப் புதுப்பித்துத் தருவதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று இதயக்கனி கேட்டுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த மூக்காண்டி, லஞ்சம் கொடுக்க விரும்பாமல் நெல்லை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் உடனடியாகப் புகார் அளித்தார்.
2 பேரிடமும் துருவி துருவி விசாரணை
போலீசாரின் அறிவுறுத்தலின்படி, நேற்று ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் பணத்தை வாங்கிக்கொண்டு கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்ற மூக்காண்டி, அங்கிருந்த இதயக்கனியின் உதவியாளரான வெங்கடேசனிடம் அந்தப் பணத்தைக் கொடுத்துள்ளார்.
அப்போது, அங்கு ரகசியமாக மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக விரைந்து சென்று, கிராம நிர்வாக பெண் அலுவலர் இதயக்கனி மற்றும் அவரது உதவியாளர் வெங்கடேசன் ஆகிய இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து, பல மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்தனர். தமிழக அரசு லஞ்ச ஊழலுக்கு எதிராகக் கடும் எச்சரிக்கை விடுத்து வரும் வேளையில், நெல்லையில் பெண் விஏஓ லஞ்சம் வாங்கி கைதாகியுள்ள இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications