கிராம உதவியாளர் ஓய்வூதியம் தொடர்பான வழக்கு.. சென்னை ஐகோர்ட் பிறப்பித்த முக்கிய உத்தரவு
சென்னை: தற்காலிக கிராம உதவியாளராக பகுதி நேரமாக பணிபுரிந்து பின்னர் பணி நிரந்தரம் செய்யப்பட்டு ஓய்வு பெற்ற இளங்கோவன் என்பவர், தனக்கு ஓய்வூதியம் பணி நிரந்தரம் செய்யப்பட்டதில் இருந்து மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது. பகுதி நேரமாக பணிபுரிந்த காலங்களுக்கு ஓய்வூதியம் தரப்படவில்லை. எனவே அதை சேர்த்து வழங்க உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது சென்னை ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
கிராம உதவியாளர்கள் பதவி என்பது கிராம நிர்வாகத்தின் அடித்தளமாக செயல்படுகிறது. ஒரு கிராமத்தில் அரசு மற்றும் பொதுமக்கள் இடையிலான முக்கிய இணைப்பாக கிராம உதவியாளர்களே இருக்கிறார்கள். ஒரு கிராமத்தில் வருவாய் பதிவுகள் பராமரிப்பு, நில விவரங்கள் சேகரிப்பு, அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தல், அலுவலக உதவி போன்ற பல்வேறு பணிகளை கிராம உதவியாளர்களே மேற்கொண்டு வருகின்றனர்.

பகுதி நேர கிராம உதவியாளர் பணி
இதில் கடந்த 1995 ஆம் ஆண்டுக்கு முன்பு ஒரு சில இடங்களில் கிராம உதவியாளர்கள் பகுதி நேர அடிப்படையில் பணியாற்றி வந்தனர். அப்போது தான் தமிழக அரசு சார்பில் வெளியான அறிவிப்பில் பகுதி நேர கிராம உதவியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டது. கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அந்த காலக்கட்டத்தில் பகுதி நேர கிராம உதவியாளராக இருந்து பணி நிரந்தரம் ஆகி பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற இளங்கோவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "தனது ஓய்வூதியத்தை கணக்கிடும் போது பகுதி நேர உதவியாளராக பணியாற்றிய காலத்தை கணக்கில் கொள்ளவில்லை. எனவே அதையும் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இரு வேறு மாறுபட்ட தீர்ப்புகள்
இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு, "இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஹைகோர்ட் டிவிஷன் பெஞ்சுகள் இரு வேறு மாறுபட்ட தீர்ப்புகளை கூறியிருக்கிறது. எனவே இந்த வழக்கினை மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிடுகிறேன்" என்று கூறியது. இதன் பிறகு நீதிபதிகள் ஜி ஜெயச்சந்திரன், எம் தண்டபாணி, கே குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
ஓய்வூதியம் வழங்க முடியாது
அப்போது இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறுகையில், தற்காலிக அடிப்படையில் பணியாற்றிய ஊழியர்களின் பணிக்காலத்தினை ஓய்வூதியத்திற்காக கணக்கில் கொள்ளலாம் என்று ஹைகோர்ட் ஏற்கனவே தீர்ப்பு கூறி இருக்கிறது. ஆனால் பகுதி நேரம் அடிப்படையில் பணியில் பணி செய்த ஊழியர்களுக்கு இந்த சலுகையினை வழங்க முடியாது. எனவே அந்த தீர்ப்பின் அடிப்படையில் மனுதாரரின் இந்த கோரிக்கையினை நாங்கள் நிராகரிக்கிறோம். மேலும் இந்த வழக்கினையும் தள்ளுபடி செய்கிறோம்" என்று தீர்ப்பு கூறினர்.












Click it and Unblock the Notifications