"நல்ல சேலை எடுத்துப்பேன்.. ஸ்டாலின் ஐயா".. வைரல் "சிரிப்பு பாட்டி" வேலம்மாவின்.. உருக்கமான பின்னணி!
சென்னை: நேற்று இணையம் முழுக்க கையில் பணத்தோடு.. கொள்ளை சிரிப்போடு வைரலான பாட்டி வேலம்மாள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. முதல்வர் ஸ்டாலினுக்கு இவர் நன்றி தெரிவித்து முக்கியமான கோரிக்கை ஒன்றையும் வைத்து இருக்கிறார்.
Recommended Video
தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் கட்டமாக கடந்த மாதம் 2000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்டமாக இந்த மாதமும் 2000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. 2000 ரூபாயுடன் கூடிய 14 உணவு பொருட்கள் அடங்கியத் தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று இந்த பணத்தை பெற்றுக்கொண்டு பலர் சந்தோசமாக வீடு திரும்பிய புகைப்படங்கள் வைரலானது. அதில் முக்கியமான வேலம்மாள் என்ற பாட்டியின் சிரிக்கும் புகைப்படம் இணையம் முழுக்க கவனம் ஈர்த்தது.

சிரிப்பு
கள்ளங்கபடம் இன்றி.. கொள்ளை அழகுடன்.. முகம் முழுக்க சிரிப்போடு அந்த பாட்டியின் "கேன்டிட்" போட்டோ வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்தடுத்து. முதல்வர் ஸ்டாலின் மற்ற சில அமைச்சர்களும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தனர். முதல்வர் ஸ்டாலின் தனது சிரிப்பில் இந்த ஏழைத்தாய்மார்களின் சிரிப்பே, நமது அரசின் சிறப்பு, என்று குறிப்பிட்டு இருந்தார்.

யார்
இணையத்தில் வைரலாகி வரும் வேலம்மாள் பாட்டி நாகர்கோவிலை சேர்ந்தவர். இவர் மிகவும் வறுமையான பின்னணியை கொண்டவர். உறவினர் யாரும் இல்லாத நிலையில், உதவியின்றி கஷ்டப்பட்டு குடிசையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று 2000 ரூபாய் வாங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய வேலம்மாள் பாட்டி.. ஸ்டாலின் ஐயா ரொம்ப நன்றி. காசு இல்லாமல் இருந்தேன்.

வறுமை
ரொம்ப வறுமையில் இருந்தேன். இப்போது 2000 ரூபாய் கொடுத்து இருக்கீங்க நன்றி. எனக்கு வீடு இல்லை, கஷ்டமாக இருக்கு. மழை பெஞ்சா ஒதுங்க கூட இடமில்லை. வந்து பாருங்க ஐயா, என்று உருக்கமாக குறிப்பிட்டு இருக்கிறார். இதையடுத்து அங்கிருந்த செய்தியாளர் ஒருவர்.. பாட்டி இந்த 2000 ரூபாயை வச்சு என்ன பண்ண போறீங்க என்று கேட்டு இருக்கிறார்.

சிரிப்பு
அதற்கு முகம் முழுக்க சிரிப்போடு.. கட்டிக்க என்கிட்டே நல்ல சேலை இல்லை.சேலை எடுத்துப்பேன்.. சமைக்க சாமான் வாங்கிப்பேன், என்று "நாரோயில்" தமிழில் அழகாக பதில் அளித்து இருக்கிறார். முதல்வர் ஸ்டாலினுக்கு பேட்டியின் முடிவில் நன்றி சொல்லிவிட்டு அந்த பாட்டி சிரித்தபடி சென்று இருக்கிறார். இந்த புகைப்படத்தை எடுத்தவர் தனியார் செய்தி நிறுவன புகைப்பட நிருபர் ஜாக்சன்.

ஜாக்சன்
இவரின் புகைப்படம் நேற்று வைரலான நிலையில் தமிழ்நாடு அரசால் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்ட 5000 ரூபாய் நிவாரணத் தொகையில் இருந்து 2000 ரூபாயை இந்த பாட்டிக்கு கொடுத்துள்ளார். முதல்வர் தொடங்கி பலரும் இந்த போட்டோவை பகிர்ந்து நிலையில், பாட்டிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக புகைப்பட நிருபர் ஜாக்சன் 2000 ரூபாய் வழங்கி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications