விஷாலுக்கு மனசுல வைராக்கியம்! 9 வருஷ தவம்.. வரமாய் வந்த சாய் தன்ஷிகா! மனுஷன் சொன்னதை செஞ்சுட்டாரே!
சென்னை: விஷாலுக்கு எப்போது திருமணம் என பல ஆண்டுகளாகவே கேட்கப்பட்டு வரும் நிலையில் ஒரு வழியாக திருமண தேதியை அறிவித்திருக்கிறார். நடிகை சாய் தன்ஷிகா உடன் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு திருமணம் என சொல்லிய நிலையில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டிய பிறகு திருமணம் செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்சன் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஷால். 2004 ஆம் ஆண்டு செல்லமே படத்தின் மூலம் நாயகன் அவதாரம் எடுத்த அவர் அதற்குப் பிறகு சண்டக் கோழி, திமிரு, தீராத விளையாட்டுப் பிள்ளை போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தார்.
இடையில் அவர் நடித்த படங்கள் படுமோசமாக சொதப்பியதால் வெற்றி தேவைப்பட்ட நிலையில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி, 13 ஆண்டுகள் கிடப்பில் கிடந்த மத கஜ ராஜா ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று விஷாலுக்கும் கம் பேக் கொடுத்துள்ளது.

தொடர்ந்து பல படங்களில் தற்போது விஷால் நடித்து வரும் நிலையில், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். விஷால் மட்டுமல்ல அவரது குடும்பத்தினரும் திரையுலகிலும் தொழில் துறையிலும் கொடி கட்டி பறந்து வருகின்றனர்.
அவரது அண்ணன் கிருஷ்ணா, அண்ணியார் ஸ்ரேயா ரெட்டி, தந்தை ஜிகே ரெட்டி என குடும்பமே திரைத் துறையில் தான் இருக்கிறது. தற்போது விஷாலுக்கு 47 வயதாகி இருக்கும் நிலையில் இதுவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இடையில் அவர் நடிக்கும் படங்களின் ஹீரோயின்களுடன் காதலில் இருப்பதாகவும், திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் அடிக்கடி செய்திகள் அடிபடும். இடையில் நிச்சயதார்த்தம் நடைபெற்று திருமணம் நின்றது தனி கதை.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே விஷால் திருமண செய்து குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களிலும் திரையுலகினர் இடையேயும் பரபரப்பாக பேசப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நடிகையை அவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என கூறப்பட்டது. இந்த நிலையில் நேற்று யோகி டா படத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விஷாலும் சாய் தன்ஷிகாவும் கலந்து கொண்டனர். அதே மேடையில் தங்கள் திருமணம் குறித்த தகவலை இருவரும் தெரிவித்ததோடு அன்பை பரிமாறிக் கொள்ளும் விதமாக முத்தத்தை பரிமாறினர்.
வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி இருவர் திருமணமும் நடைபெற இருக்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். தொடர்ந்து பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். சமூக வலைதளங்களில் நடிகர் நடிகைகளும், விஷாலின் நலம் விரும்பிகளும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்
இது ஒரு புறம் இருக்க மற்ற நடிகர்கள் போல் அல்லாமல் விஷால் வைராக்கியத்தோடு செயல்பட்டு இருக்கிறார் என பாராட்டும் குவிகிறது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னால் நடிகர் சங்க பொறுப்பை விஷால் ஏற்ற போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறி இருந்தார். தொடர்ந்து 9 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்து வரும் விஷால், தனது பட பணிகளை கவனித்துக் கொண்டே மறுபுறம் நடிகர் சங்க கட்டிடப் பணிகளையும் கவனித்து வந்தார்.
பல்வேறு கலை நிகழ்ச்சிகள், ஸ்டார் கிரிக்கெட், பிரபலங்களிடம் நன்கொடை என உதவி பெற்று தற்போது நடிகர் சங்க கட்டிடப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா நடைபெற உள்ளது. அது முடிந்து 14வது நாளில் விஷாலின் திருமணம் நடைபெற உள்ளது. சொன்னது போலவே நடிகர் சங்கத்தை கட்டி முடித்துவிட்டு அதற்குப் பிறகு விஷால் திருமணம் செய்ய உள்ளார். குறிப்பாக விஷாலின் வைராக்கியமும் நடிகர் சங்கத்தை கட்ட வேண்டும் என்ற தவமும் தான் சாய் தன்ஷிகாவை அவருக்கு தந்திருக்கிறது என்கின்றனர் திரையுலகினர்.












Click it and Unblock the Notifications