ரெடி.. தேர்தலுக்கு தமிழ்நாடு தயார்! 99% மக்களுக்கு எஸ்ஐஆர் படிவம், 98.23% ஆன்லைன் சார் பதிவேற்றம்
சென்னை: தமிழகத்தில் மொத்தம் உள்ள 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்களில் 99 புள்ளி 81 சதவீதம் பேருக்கு, அதாவது, 6 கோடியே 39 லட்சத்து 95 ஆயிரத்து 854 படிவங்கள் விநியோகிக்கப்பட்டுவிட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரத்யேக அறிவிப்பையும் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
பீகாரை தொடர்ந்து தேர்தலை சந்திக்க உள்ள தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் 4-ந் தேதி முதல் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கின. இந்தப் பணிகள் வரும் 11-ந் தேதியுடன் நிறைவடைகின்றன.

சார் பணிகள்
தமிழகம் முழுவதும் இதற்காக 68 ஆயிரத்து 470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்தவகையில், சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்த பணி கடந்த மாதம் 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அனைத்து வாக்காளர்களுக்கும் இதற்கான படிவங்கள் 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வழங்கி அதனை மீளப்பெற்று தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
வாக்குச்சாவடி முகவர்கள்
இதனை தவிர, வாக்குச்சாவடி முகவர்களாலும் படிவங்கள் வாக்காளர்களிடமிருந்து மீளப் பெறப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்கி, மீளப்பெறப்பட்ட படிவங்கள் தேர்தல் ஆணையத்தின் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேபோல ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தற்போதைய வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும்கூட, அந்த பகுதிகளில் வசிக்காதவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்களின் பெயர்கள் கணக்கீடு செய்யப்பட்டு, அவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலானது வாக்குச்சாவடி வாரியாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் சேகரிக்கப்பட்டுள்ளது.
இந்த பெயர் பட்டியலை, சென்னை மாவட்டத்தில் உள்ள 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி முகவர்களிடம் வழங்கும் பணியும் நேற்று நடைபெற்றது.. இந்த லிஸ்ட்டை வாக்குச்சாவடி முகவர்கள் தங்களது வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட பகுதிகளில் சரிபார்த்து விரைவில் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் வழங்குவார்கள்..
வாக்குச்சாவடி முகவர்கள் தரும் தகவல்களின் அடிப்படையில் அதில் ஏதாவது மாற்றமிருந்தால், இந்த பட்டியலினை வாக்குச்சாவடி நிலை அலுவலரால் மீண்டும் களஆய்வு செய்து சரிபார்க்கப்பட்டு வரும் 16ம் தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 கோடியே 39 லட்சத்து 95854 படிவங்கள்
இந்நிலையில், தமிழ்நாட்டில் மொத்தமாக 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் நேற்று வரை 6 கோடியே 39 லட்சத்து 95 ஆயிரத்து 854 பேருக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது 99.81 சதவீதம் ஆகும். வழங்கப்பட்ட படிவங்களில் 6 கோடியே 29 லட்சத்து 79 ஆயிரத்து 208 படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இது 98.23 சதவீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல் புதுச்சேரியில் மொத்தம் 10 லட்சத்து 21 ஆயிரத்து 578 வாக்காளர்கள் உள்ளனர். அங்கு 10 லட்சத்து 20 ஆயிரத்து 815 கணக்கீட்டு படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இது 99.93 சதவீதம் ஆகும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications