வாட்ச் விவகாரம்.. அண்ணாமலைக்கு கர்நாடகாவில் எழுந்த ஆதரவு குரல்.. சீனில் சிடி ரவி..திமுக மீது அட்டாக்
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாட்ச் விவகாரம் பெரும் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. இதுதொடர்பாக, பாஜக மற்றும் திமுக தலைவர்கள் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் அண்ணாமலைக்கு ஆதரவாக கர்நாடகாவில் இருந்து குரல் எழுந்துள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருப்பவர் அண்ணாமலை. இவர் தற்போது திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும் திமுகவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்தி வருகிறார்.
மேலும் அண்ணாமலையின் விமர்சனத்துக்கு திமுக கட்சியில் இருப்பவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும் தினமும் சமூக வலைதளத்தில் பாஜக, திமுக தலைவர்கள் இடைமே கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருவது வாடிக்கையான ஒன்றாக மாறிப்போய் உள்ளது.

விவாதத்துக்கு உள்ளான வாட்ச்
இந்நிலையில் தான் அண்ணாமலை தனது கையில் கட்டியிருந்த வாட்ச் தற்போது விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. ரபேல் எனும் அந்த வாட்சின் விலை ரூ.3.50 லட்சம் என கூறப்படுகிறது. இந்த வாட்ச் ரபேல் விமானத்தின் பாகங்கள் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்த வாட்ச் தொடர்பாக வழக்கம்போல் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் இடையே கருத்து மோதல் உருவானது.

செந்தில் பலாஜி விமர்சனம்
செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பதிவில், பிரான்ஸ் நிறுவனத்தின் ரபேல் வாட்ச்சை வாங்கிய ரசீதை ஒரு மனிணநேரத்தில் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம் என கூறியதோடு ரூ. 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் அண்ணாமலை கட்டியிருக்கிறார் என விமர்சனம் செய்தார். இதையடுத்து அண்ணாமலை செந்தில் பாலாஜிக்கு பதில் அளித்தார்.

அண்ணாமலை பதிலடி
இதுதொடர்பாக அண்ணாமலை, ‛‛திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புகின்றனர். அதை எதிர்கொள்ள ஆவலாக இருக்கிறேன். நான் பாஜக தலைவராகும் முன்பு 2021 மே மாதம் ரபேல் கடிகாரம் வாங்கினேன். அதன் ரசீது, வருமான வரி அறிக்கை, 10 ஆண்டு வங்கி பணபரிவர்த்தனை, ஐபிஎஸ்ஆக ஈட்டிய வருமானம், சொத்து விபரங்கள் அனைத்தையும் தமிழக மக்களை சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன். நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார். இதேபோல் திமுகவின் சொத்து விபரங்களை வெளியிட தயாரா?'' என கேள்வி எழுப்பி இருந்தார்.

கம்பி கட்டும் கதை
இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, ‛‛சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் 'வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை' என்ற கேள்வியைத் தவிர்த்துவிடலாம் என 'புத்திசாலித்தனமாக' மே 2021-ல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?" என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகாவில் இருந்து வந்த ஆதரவு
இதேபோல் திமுக எம்பி செந்தில் குமார் உள்பட பல்வேறு பிரமுகர்கள் இதுபற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர். பாஜகவினரும் அண்ணாமலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் ட்விட்டரில் இருகட்சியினர் இடையே பெரிய மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் இதுபற்றி பாஜகவின் தேசிய செயலாளரும், தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளராளரும், கர்நாடகா எம்எல்ஏவுமான சிடி ரவி, அண்ணாமலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

திமுக வெற்றி பெறாது
அண்ணாமலையின் தலைமையின் கீழ் தமிழக பாஜகவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை கண்டு ஊழல் திமுக அதிர்ந்துபோய் உள்ளது. அண்ணாமலையையும், நம் கட்சியையும் இழிவுப்படுத்துவதில் திமுக தங்களால் இயன்றவரை முயற்சி செய்யலாம். ஆனால் அத்தகைய முயற்சியில் அவர்கள் வெற்றி பெறமாட்டார்கள்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications