அடையாறு முதல் சோழிங்கநல்லூர் வரை.. தென் சென்னை மக்களுக்கு மாநகராட்சி முக்கிய அறிவிப்பு
சென்னை: நெம்மேலியில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அடையாறு, சோழிங்கநல்லூரில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் முக்கிய ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வரும் நிலையில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் தான் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கணிசமாக கைகொடுத்து வருகிறது. சென்னை நெமிலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல லட்சம் மக்கள் இந்த திட்டத்தால் பயன்பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை மாநகர குடிநீர்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் அன்று காலை 9 மணியில் இருந்து மறுநாள் (புதன்கிழமை) காலை 9 மணி வரை 1 நாள் மட்டும் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இதனால் 13-வது மண்டலமான அடையாறு பகுதியில் உள்ள திருவான்மியூர், பள்ளிப்பட்டு, கோட்டூர் ஆர்.கே.மடம் தெரு, இந்திராநகர், 14-வது மண்டலமான பெருங்குடியில் உள்ள கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிகள், 15-வது மண்டலமான சோழிங்கநல்லூரில் உள்ள ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, எழில்நகர், கண்ணகி நகர், காரப்பாக்கம், வெட்டுவாங்கேணி, சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, ஒக்கியம்- துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் குடிநீர் வராது.
எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக போதுமான அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in/என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications