சர்க்கஸ்ல இருக்கோம்.. ‘ரிஸ்க் எடுப்போம்’.. அடுத்த 7 மாதங்களுக்கு நோ ரெஸ்ட்.. அண்ணாமலை பேசியது என்ன?
சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில், அடுத்த 7 மாதங்களுக்கு யாருக்கும் ரெஸ்ட்டே கிடையாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணி முறிவு: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதிமுக - பாஜக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டது. திமுகவை விமர்சிப்பதற்கு இணையாக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுகவையும் அண்ணாமலை விமர்சித்து அதிமுகவினரை சீண்டி வந்தார். அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களை அவர் நேரடியாக தாக்கிப் பேசியதால் இனியும் பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதில் நியாயமில்லை என அதிமுக திட்டவட்டமாக முடிவெடுத்தது.

அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பாஜக உடனான கூட்டணி முறிவை உறுதிபடுத்தியதுடன் 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தார். அதிமுக தலைவர்களும் அண்ணாமலையை விமர்சித்து பேசி வருகின்றனர். ஆனால், பாஜக தரப்பு மவுனம் காத்தது.
டெல்லி சென்ற அண்ணாமலை: இந்த நேரத்தில் தான் அண்ணாமலை உடனடியாக டெல்லி வருமாறு பாஜக தேசிய தலைமை அழைப்பு விடுத்தது. பாதயாத்திரையில் இருந்த அவர், அதனை ஒத்திவைத்துவிட்டு உடனடியாக டெல்லி சென்றார். அங்கு நிர்மலா சீதாராமனிடம் பேசிய அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர்களையும் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது கூட்டணி குறித்து ஏதும் பேசக்கூடாது என்று தேசிய தலைவர் அண்ணாமலைக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் இருந்து திரும்பிய அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் சென்றதுடன் உடனடியாக தனது பாதயாத்திரையையும் ஒத்திவைத்துவிட்டார்.
அதிமுகவுடன் கூட்டணி முறிந்ததால் டெல்லி மேலிட தலைவர்களிடம் விளக்கம் அளிக்கச் சென்ற அண்ணாமலை சென்னை திரும்புவதில் தாமதம் ஏற்பட்டதால், அக்டோபர் 3ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
பாஜக ஆலோசனை கூட்டம்: இந்தக் கூட்டத்தில் பங்கேற்க மாவட்ட தலைவர்கள், மாவட்ட பார்வையாளர்கள், மாநில நிர்வாகிகள் 32 பேர், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் 30 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், எம்.எல்.ஏ.க்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சரஸ்வதி ஆகியோரும் மாநில நிர்வாகிகள் கரு.நாகராஜன், கே.பி.ராமலிங்கம், தினா, சக்கரவர்த்தி, கருப்பு முருகானந்தம், கனகசபாபதி, கார்த்தியாயினி, மலர்க்கொடி, ஏ.பி.முருகானந்தம் உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு அண்ணாமலை வர தாமதமானதால், வந்தே மாதரத்துடன் கூட்டம் தொடங்கியது. பின்னர் தாமதமாக கூட்டத்துக்கு வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மண்டப வாசலில் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றார்கள். பின்னர் அண்ணாமலை கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் அண்ணாமலை.
அண்ணாமலை பேசியது இதுதானா?: அடுத்த 7 மாதங்களுக்கு திமுக அரசுக்கு எதிராக பாஜக போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். அடுத்த 7 மாதங்களுக்கு யாருக்கும் ஓய்வு கிடையாது. தீவிரமாக உழைக்க வேண்டும். பெண்களை அதிக அளவில் பூத் கமிட்டிகளில் சேர்க்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களால் பயன் அடைந்த மக்களை அழைத்துப் பேச வேண்டும் என பாஜகவினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம். சர்க்கஸில் ஒரு கம்பியை பிடித்து தொங்கி விளையாடும்போது ரிஸ்க் எடுத்து இன்னொரு கம்பியை பிடித்து விளையாடி வெற்றி பெறுவது உண்டு. நம்மை பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களாகிய மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அதுபோலான முடிவைத்தான் இப்போது எடுத்திருக்கிறோம் என அண்ணாமலை பேசியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.












Click it and Unblock the Notifications