விநாயகர் சிலை ஊர்வலம்: உங்க மிரட்டல் உருட்டலுக்கு பயப்பட மாட்டோம்.. பாஜகவிற்கு சேகர்பாபு பதிலடி!
சென்னை: விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி தரப்படாது, பாஜகவின் மிரட்டல் உருட்டலுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதில் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா பரவலை முன்னிட்டு தமிழ்நாட்டில் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த தமிழ்நாடு அரசு தடை விதித்து இருக்கிறது. கேரளாவில் ஓணம் பண்டிகைக்கு பின் கொரோனா கேஸ்கள் புதிய உச்சம் தொட்டது. மக்கள் மொத்தமாக வெளியே வந்ததால் கேஸ்கள் அதிகரித்தது.
இதை குறிப்பிட்ட தமிழ்நாடு அரசு விநாயகர் சிலை ஊர்வலம் நடத்த தடை விதித்துள்ளது. பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், நீர் நிலைகளில் சென்று கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட விரும்பும் நபர்கள் வீட்டிலேயே கொண்டாட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

மூன்றாம் அலை
மூன்றாம் அலை கொரோனா பரவல் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பாஜக தரப்பு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும். இந்து பண்டிகைகளுக்கு எதிராக திமுக செயல்படுகிறது.

டாஸ்மாக்
டாஸ்மாக் கடைகள் எல்லாம் இயங்குகிறது. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு தடை விதிக்கும் அரசு, எதற்காக டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும்?. அங்கு மட்டும் கொரோனா பரவாதா? விநாயகர்தான் திமுகவின் ஆட்சிக்கு முடிவு கட்ட போகிறார். விநாயகர் சிலை ஊர்வலத்தில் கை வைத்தால் திமுகவின் ஆட்சி கலையும். எந்த அரசு தடுத்தாலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தே தீரும் என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.

பதில்
இதற்கு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்துள்ளார். அதில், கேரளாவில் பண்டிகை கொண்டாட்டங்கள் காரணமாக கேஸ்கள் அதிகரித்தன. அதேபோல் தமிழ்நாட்டில் நடக்க கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மக்கள்
மனித உயிர்கள்தான் முக்கியம். அதை கருத்தில் கொண்டே ஆட்சி நடக்கிறது. மக்கள் கூட்டமாக கூட கூடாது என்பதால்தான் இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. தடையை மீறி சிலை வைக்கப்படும் என்று கூறுவதை ஏற்க முடியாது. பாஜக விடுக்கும் மிரட்டல் உருட்டலுக்கு எல்லாம் பயப்படும் ஆட்சி இங்கே நடக்கவில்லை, என்று சேகர் பாபு குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications