எடப்பாடி அனுமதித்தால் தான் பிரசாரம் என்றால் நான் கூட போக மாட்டேன்.. புகழேந்தி ஆவேசம்
நாங்கள் யாருக்கும் அடிமைகள் இல்லை என்றும் எவர் பேச்சையும் கேட்க வேண்டிய நிலைமைக்கு ஜெயலலிதா எங்களை ஆளாக்கவில்லை என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
சென்னை: நாங்கள் யாருக்கும் அடிமைகள் இல்லை. எவர் பேச்சையும் கேட்க வேண்டிய நிலைமைக்கு ஜெயலலிதா எங்களை ஆளாக்கவில்லை. எடப்பாடி அனுமதித்தால் தான் பிரசாரம் என்றால், நான் கூட போக மாட்டேன் என்று ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.
அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளரை அறிவித்தன. இதனால், இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சு எழுந்தது. இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்ய வேண்டும் என்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் ஒப்புதல் கடிதங்களை தேர்தல் ஆணையத்திடம் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஒப்படைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக
இதையடுத்து பொதுக் குழு உறுப்பினர்களுக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் படிவம் அனுப்பி வைக்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த தகவல்களை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் டெல்லி சென்றுள்ளார். இதற்கிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப.கிருஷ்ணன், ஈரோடு கிழக்குத் தொகுதியிலிருந்து ஓபிஎஸ் வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

புகழேந்தி விளக்கம்
உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் செயல்பட்டுள்ளதாக நேற்று ஓபிஎஸ் தரப்பு அளித்த பேட்டியில் குற்றம் சாட்டியிருந்தது. இந்த நிலையில் இன்று வேட்பாளரை வாபஸ் பெற்றது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், ஓபிஎஸ் இந்த முடிவை ஏன் எடுத்தார் என்பதை ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விளக்கியுள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், கூறியதாவது:-

இப்படி தான் அண்ணாமலை சொன்னார்
இபிஎஸ் நிறுத்தியதுதான் பலமான வேட்பாளர் என்று அண்ணாமலை சொல்லவில்லை. எல்லோரும் ஒற்றுமையாக போக வேண்டும் என்றுதான் அண்ணாமலை சொன்னார். ஒரு வேட்பாளரை நிறுத்தினால் வெற்றியை காண முடியும் என்றுதான் அண்ணாமலை சொன்னார். நாங்கள் யாருக்கும் அடிமைகள் இல்லை. எவர் பேச்சையும் கேட்க வேண்டிய நிலைமைக்கு ஜெயலலிதா எங்களை ஆளாக்கவில்லை.

தவறான தகவலை அளிக்கிறார்
நாங்கள் எவர் பின்னால் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. உச்ச நீதிமன்றம் பெரும்பான்மை அடிப்படையில் வேட்பாளரை தேர்வு செய்ய சொல்லியிருக்கிறது. யாருடைய பெயரையும் குறிப்பிட சொல்லவில்லை. ஆனால், எல்லாவற்றையும் குப்பையில் போட்டுவிட்டு நீதிபதியாக இருந்து தேர்தலை நடத்த வேண்டிய ஆணையாளர் (அவைத்தலைவர்) ஒருவர் பெயரை மட்டுமே முன்மொழிந்து அதை இங்கே இருந்து எடுத்துக்கொண்டு டெல்லிக்கு சென்று தேர்தல் ஆணையத்தில் தவறான தகவலை அளிக்கிறார். இன்னும் பலருக்கு கடிதங்கள் போகவில்லை.

சர்வாதிகாரியின் கைக்கு போய்விடக்கூடாது
ஆதரவு கொடுப்பது போல் கொடுத்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என்று செம்மலை கூறுகிறார். ஓபிஎஸ் பிரசாரம் செய்வதாக இருந்தால் இபிஎஸ் முடிவு செய்ய வேண்டும் என்று செம்மலை கூறுகிறார். இபிஎஸ் முடிவு செய்வதாக இருந்தால் புகழேந்தியின் கால் கூட தேர்தல் பிரசாரம் முடியும் வரை ஈரோட்டில் பதியாது. மானமுள்ள சுயமரியாதை உள்ளவனாக இதை நான் சொல்கிறேன். யார் வேண்டும் என்றாலும் எப்படி வேண்டும் என்றாலும் எடுத்துக்கொள்ளட்டும். இபிஎஸ் ஆணையிடுவதாக இருந்தால் எங்கள் தலைவர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்று நூறு சதவீதம் நம்புகிறேன். அதிகாரம் சர்வாதிகாரியின் கைக்கு போய்விடக்கூடாது என்றுதான் இந்த போராட்டம். இந்த நீதியின் போரட்டம் வெற்றி பெறும் என்றுதான் ஒவ்வொரு தொண்டனும் இங்கே பாடுபடுகிறார்கள். இவ்வாறு புகழேந்தி கூறினார்.












Click it and Unblock the Notifications