பாதுகாப்பா இருக்கோம்.. பீகார் அதிகாரிகளிடம் சொன்ன ஊழியர்கள்.. தமிழ்நாடு அரசுக்கு நன்றி சொன்ன டீம்
பொய்யான செய்திகளை பரப்பிய பீகார் பாஜக நிர்வாகிகள் பிரசாந்த் உமாரா, தன்வீர் ஆகியோரை போலீசார் பிடிக்க டெல்லி விரைந்துள்ளனர்.
சென்னை: தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக பீகார் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அதோடு இவர்கள் தமிழ்நாடு அரசுக்கும் இதற்காக நன்றி தெரிவித்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் இரண்டு வீடியோக்கள் வேகமாக பரவின. பீகாரில் இந்த வீடியோ பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதாவது ஈரோடு, நாமக்கல், கோவையில் வேலை பார்க்கும் வடஇந்தியர்கள் தாக்கப்படுவதாக பொய்யான செய்திகள் பரவி வருகின்றன.
வட இந்தியர்களை தமிழர்கள் குறி வைத்து தாக்குவதாகவும், கொலை செய்வதாகவும் பொய்யான புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

பீகார்
பீகார் மாநில எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜகதான் இந்த விவகாரத்தில் முதலில் பிரச்னையை கிளப்பியது. தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படுகிறது என்று அம்மாநில சட்டசபையில் அமளி செய்தது. இதற்கு பொய்யான வீடியோக்களையும் ஆதாரமாக காட்டியது. இதனை தடுக்காமல் பீகார் மாநில அரசு, தமிழ்நாடு அரசுடன் கைகோர்த்து வேடிக்கை பார்க்கிறது என்றும் பொய்யான வீடியோக்களை பாஜக காட்டி அமளி செய்தது. இதையடுத்து தமிழ்நாட்டில் வட இந்தியர்கள், முக்கியமாக பீகார் மக்கள் தாக்கப்படுவதாக வைக்கப்படும் பொய்யான புகார்கள், வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.

தமிழ்நாடு
இந்த இரண்டு வீடியோவில் ஒன்று, பீகார்-ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் மோதல் சம்பவம். அது இங்கே நடக்கவே இல்லை. மற்றொன்று தமிழ்நாட்டு மக்கள் அவர்களுக்குள் நடத்திக்கொண்ட சண்டை. இதைத்தான் பொய்யாக தமிழ்நாடு சம்பவம் என்று இவர்கள் பரப்பி வருகிறார்கள். முக்கியமாக பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி தமிழ்நாடு வந்த நிலையில், அவருக்கு அழுத்தம் தர வேண்டும் என்று பாஜக சார்பாக அம்மாநில சட்டசபையில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. அவர் விளக்கம் அளித்தும் கூட அம்மாநில பாஜக இந்த விவகாரத்தில் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. தேசிய அளவில் ஸ்டாலின் கூட்டணி அமைக்க வேண்டும், ஸ்டாலின் பிரதமர் ஆக வேண்டும் என்ற குரல்களுக்கு இடையே தமிழ்நாடு குறித்த தவறான பிம்பம் வடஇந்தியர்கள் இடையே பரப்பப்பட்டு வருகின்றன.

பிரதமர்
இந்த நிலையில்தான் பீகார் அதிகாரிகள் தமிழ்நாட்டில் வந்து ஆய்வு செய்தனர். பீகார் - ஜார்கண்ட் அதிகாரிகள் சார்பாக நேற்று சென்னையில் ஆய்வு செய்யப்பட்டது. 8 பேர் கொண்ட அதிகாரிகள் ஆய்விற்கு பின் தமிழ்நாடு அரசு குறித்து பாராட்டு தெரிவித்தனர். அதில், தமிழ்நாடு அரசு எங்களுக்கு உறுதுணையாக இருந்தது. நாங்கள் சுதந்திரமாக ஆய்வு மேற்கொண்டோம். வெளியே பரவும் வதந்திகளை போல இங்கே வடஇந்தியர்களுக்கு எதிராக எந்த விதமான தாக்குதலும் நடக்கவில்லை. ஊழியர்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். பொய்யான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்டனர்.

ஆய்வு
இந்த நிலையில் இன்று திருப்பூர், கோவையில் வடஇந்திய ஊழியர்களிடம் அதிகாரிகள் பேசினர். அவர்களிடம் பேசிய வடஇந்தியர்கள், நாங்கள் எல்லோரும் பாதுகாப்பாக இருக்கிறோம். எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. எங்களை இங்கே பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறார்கள். தமிழர்கள் எங்களிடம் நட்பாக இருக்கிறார்கள். எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கருத்து தெரிவித்து உள்ளனர். இந்த விவகாரத்தில் பொய்யான செய்திகளை பரப்பிய பீகார் பாஜக நிர்வாகிகள் பிரசாந்த் உமாரா, தன்வீர் ஆகியோரை போலீசார் பிடிக்க டெல்லி விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications