இனியும் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையில்லை.. தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.. ஓபிஎஸ் தரப்பு பேட்டி!
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இனியும் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையில்லை என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: இனியும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திருந்துவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று கூறிய அவர், அதிமுகவினர் பொதுச்செயலாளர் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பை, அதிமுக துணைப் பொதுச்செயலாளரும், தேர்தல் ஆணையாளருமான நத்தம் விசுவநாதன், கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளரும், தேர்தல் ஆணையாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.
அதில், அதிமுக சட்ட திட்ட விதி 20 (அ) பிரிவு-2ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு "கட்சியின் பொதுச் செயலாளர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்" என்ற விதிமுறைக்கு ஏற்ப கட்சியின் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி மனுதாக்கல்
இந்த பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். நாளை பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 26ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறு உள்ளது. அதேபோல் மார்ச் 27ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு
இந்த நிலையில் சென்னையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், எதிர்பாராத வகையில் திடீரென அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, தேர்தலை அறிவிப்பது அதிமுகவை கொச்சைப்படுத்துவது போலாகும். நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தில் புகார்கள் இருக்கும் போது தேர்தல் நடத்தலாமா?

அழிவுப்பாதையில் அதிமுக
தேர்தல் என்றால் முறைப்படி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு பல்வேறு முறைகளுடன் நடைபெற வேண்டும். கட்சி விதிகளின் படி தேர்தல் அறிவிக்கப்படவில்லை. மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் இறுதி வரை உடன் இருந்தவர்கள் நாங்கள் தான். அதிமுக பொதுச்செயலாளருக்கு தேர்தல் அறிவித்துள்ளது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. அதிமுகவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பு அழிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

திருந்துவார்கள் என்ற நம்பிக்கையில்லை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை சட்டரீதியாக சந்திப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் புகட்டிய பாடத்தை கூட எடப்பாடி பழனிசாமி தரப்பு புரிந்து கொள்ளவில்லை. இனியும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் திருந்துவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த பொதுச்செயலாளர் தேர்தலை அதிமுகவினர் புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications