நெல்லையில் போட்டு தாக்கிய அப்பாவு: 287 வாரிசுகளுக்கும் பாஜக பதவி தந்துட்டு, திமுகவை குறை சொல்லுதே?
நெல்லை: திமுகவில் வாரிசு அரசியல் உள்ளது என பாஜக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.. வாரிசு அரசியல் இப்போது தோல்வியடைந்து விட்டது, அது தமிழ்நாட்டிலும் இனி தொடரும் என்று பாஜக கருத்து கூறியிருப்பதற்கு, சபாநாயகர் அப்பாவு பதிலடி தந்துள்ளார். அத்துடன் தேர்தல் ஆணையத்தின் மீதும் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
பீகார் தேர்தலுக்கு முன்பு வரை ஆளும்கட்சி, எதிர்க் கட்சிகளுக்கு மாற்றான அரசியல் சக்தியாகவும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது யார்? என்பதை முடிவு செய்யும் கட்சியாகவும் பிரசாந்த் கிஷோரின் கட்சி இருக்கும் என்று கூறப்பட்டது., அதேபோல தேர்தல் பிரசாரத்திலும் பிரசாந்த் கிஷோர் கடுமையாக எதிர்க்கட்சிகளை விமர்சித்து வந்தார்.

பிரசாந்த் கிஷோர்
தன்னுடைய கட்சி 150 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறி வந்த நிலையில், அவரது கட்சி படுதோல்வியை சந்தித்துவிட்டது. 236 தொகுதிகளில் வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர். இதன்மூலம் பிரசாந்த் கிஷோரை முழுமையாக அம்மக்கள் புறக்கணித்து இருப்பது தெரியவந்துள்ளது.
ஆனால், தேர்தல் பிரசாரத்தின்போது பாஜக தலைவர்களும், இந்தியா கூட்டணி தலைவர்களும் யாருமே பிரசாந்த் கிஷோர் பற்றி ஒருவார்த்தை கூட பேசவில்லை. எனவே இதுவும் பிரசாந்த் கிஷோர் கட்சி தோல்விக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
தமிழகத்தில், திமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் தேர்தல் உத்தி வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் பணியாற்றி உள்ள நிலையில், அக்கட்சிகள் எதிர்கொண்ட தேர்தல்களில் வெற்றி பெற்றதால் தேசிய அளவில் மிகவும் பிரபலமான அரசியல் நிபுணராக பிரசாந்த் கிஷோர் உருவெடுத்தார்.ஆனால் சொந்த கட்சிக்கு அவரது யுக்தி பலனளிக்காமல் போய்விட்டது. இதை பலரும் விமர்சித்தபடியே உள்ளனர்.
நெல்லை சபாநாயகர்
இந்நிலையில், நெல்லை மாவட்டம் பணகுடி திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை சபாநாயகர் அப்பாவு இன்று தொடங்கி வைத்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, பீகார் தேர்தல் பற்றி விரிவாக பேசினார்..
சபாநாயகர் பேசும்போது, "பணகுடி, வள்ளியூர், கூடங்குளம், திசையன்விளை உள்ளிட்ட ராதாபுரம் தொகுதியில் நடத்தப்பட்ட 15 நலம் காக்கும் முகாம்களிலும் காலை சிற்றுண்டி முதல் மதிய உணவு, மாலை தேநீர் வரையிலும் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. முகாமில் பங்கேற்றோருக்கு முழு உடல் பரிசோதனை செய்து அவர்களின் உடல்நிலையை பதிவு செய்த தனிப்பட்ட ஃபைல் கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக அரசு
இந்த வகை பரிசோதனைகளுக்கு வழக்கமாக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் இங்கு மக்கள் ஒரு ரூபாயும் செலவில்லாமல் சேவையைப் பெற்றுள்ளனர்.பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் சன் சுராஜ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. அவர் முக்கிய கட்சிகளுக்கு ஆலோசனை வழங்குபவர்தான். ஆனால் அவருக்கு களப்பணியில் உள்ள உண்மையான நிலைமை தெரியாது. அவர் யோசனை மட்டுமே சொல்லக்கூடியவர்.. ஆனால் அது அவர் சொந்த ஊரிலேயே செல்லுபடியாகவில்லை. அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? பீகார் தேர்தலால் தேர்தல் ஆணையத்தின் தரம் குறைந்துவிட்டது.
பாஜகவின் 287 வாரிசுகள்
பீகார் தேர்தலால் வாரிசு அரசியல் தோல்வியடைந்து விட்டது. அது தமிழ்நாட்டிலும் தொடரும் என பாஜக கருத்து தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் இன்று என்ன செய்கிறார்? ராணுவ மந்திரியின் மகன் என்ன செய்கிறார்?. பாஜகவில் 287 வாரிசுகள் பதவியில் இருக்கிறார்கள்..
ஆனால், இத்தனை வாரிசுகளை வைத்திருக்கும் பாஜக, ஒரே ஒரு வாரிசு வைத்திருக்கும் திமுகவை குறை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" என்று கடுமையாக சாடினார்.












Click it and Unblock the Notifications