"குண்டு வைப்போம்”.. அதிர வைத்த கர்னல் பாண்டியன் யார்? முன்னாள் வீரர் மட்டுமல்ல.. பாஜக நிர்வாகியாம்
தமிழ்நாடு அரசை மிரட்டும் வகையில் குண்டு வைப்போம் என்று பேசிய முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொறுப்பில் உள்ளார்.
சென்னை: ராணுவ வீரர் பிரபு கொலையை கண்டித்து சென்னையில் பாஜக சார்பில் முன்னாள் ராணுவ வீரர்கள் கலந்துகொண்ட உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு அரசை மிரட்டும் வகையில் குண்டு வைப்போம் என்று பேசிய முன்னாள் ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொறுப்பில் இருப்பது தெரியவந்து இருக்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக கிருஷ்ணகிரியில் பிரபு என்ற ராணுவ வீரர் திமுக கவுன்சிலரால் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை கண்டித்து சென்னை சிவானந்த சாலையில் நேற்று காலை 9:30 மணியளவில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகள் கலந்துகொள்ளும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

மிரட்டல் பேச்சு
அந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், பாஜக தலைவர்கள் உள்ளிட்ட பலர், தமிழ்நாடு அரசையும், திமுகவையும் கண்டித்து பேசினர். அதில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தமிழ்நாடு அரசுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல
அவர் பேசுகையில், "நான் தமிழ்நாடு அரசை ஒரு விசயத்தில் எச்சரிக்கிறேன். உலகத்திலேயே 2 வது பெரிய ராணுவம் இந்திய ராணுவம். உலகத்திலேயே ஒழுக்கமான ராணுவமும் கூட. ஒழுக்கத்துக்கு பெயர்போனது நமது ராணுவம். அப்படிப்பட்ட ராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாடு அரசுக்கும் நல்லதல்ல.

குண்டு வைக்க தெரியும்
எந்த விசயத்தை செய்தாலும் ஒழுக்கமாகவும் உத்வேகத்துடன் செய்து காட்டுபவர்கள் நாங்கள். அப்படிப்பட்ட எங்களுக்கு நீங்கள் பரிட்சை வைத்து பார்க்க வேண்டும் என்று நினைத்தால் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பாக இருக்காது. இங்கே அமர்ந்து இருக்கின்ற அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களும் குண்டு வைப்பதில் கெட்டிக்காரர்கள். சுடுவதில் கெட்டிக்காரர்கள். சண்டையிடுவதில் கெட்டிக்காரர்கள்.

செய்தியாளர்கள் சரமாரி கேள்வி
எங்களுக்கு இந்த வேலைகள் எல்லாம் நன்றாகவே தெரியும். ஆனால், நாங்கள் இதை எல்லாம் செய்வதாக இல்லை. எங்களை செய்ய வைத்து விடாதீர்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்." என்று பேசினார். இந்த போராட்டத்துக்கு பிறகு அவரது பேச்சு குறித்து அங்கிருந்த செய்தியாளர்கள் சரமாரி கேள்வி எழுப்பினார்கள்.

மிரட்டல் தான்
குண்டு வைப்பது தீவிரவாத செயல் இல்லையா? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நாங்கள் மிரட்டவில்லை. எச்சரிக்கிறேன் என்று கூறி அவர், "இனிமேல் நீங்கள் செய்தால் நாங்கள் செய்வோம். இது மிரட்டல்தான். இது மிரட்டல்தான். தமிழ்நாடு அரசை எச்சரிக்கிறேன்." என்று மாற்றி பேசினார்.

யார் இந்த முன்னாள் ராணுவ வீரர்?
குண்டு வைப்போம் என்று பாஜக போராட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை விடுத்த இவரது பெயர் கர்னல் பாண்டியன். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பாண்டியன், முன்னாள் ராணுவ வீரர் பாண்டியன், பாஜகவிலும் முக்கிய பொறுப்பில் உள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு பாஜக முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாநில தலைவராக இருந்த அவர், தற்போது அக்கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார்.












Click it and Unblock the Notifications