விஜய் போன பிறகு கரூர் எல்லையில் இரவு முழுக்க காத்திருந்தோம்.. போலீஸ்தான் எங்களை அனுமதிக்கல- ஆதவ் அர்ஜூனா
சென்னை: கரூரில் துயரம் நடந்தபோது அன்று இரவு முழுக்க பாதிக்கப்பட்டோரைச் சந்திக்க மாவட்ட எல்லையிலேயே காத்திருந்ததாகவும் போலீசாரே தங்களுக்கு அனுமதி மறுத்துவிட்டதாகவும் தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் தவெக அமைதியாக இருந்தபோது பல பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டதாகவும் தவெகவை மொத்தமாக முடக்க திமுக திட்டமிட்டதாகவும் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.
கரூர் துயரம் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் என்றும் உத்தரவிட்டது.

ஆதவ் அர்ஜுனா
இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சில முக்கிய கருத்துகளைக் கூறினார். அதாவது சம்பவம் நடந்த அன்று கரூர் போலீசாரே தங்களைப் பேச அனுமதித்ததாகவும் பிரச்சினை என்றால் போலீசார் தங்களுக்கு அனுமதி மறுத்திருக்கலாம் என்றனர். மேலும், பாதிக்கப்பட்டோரைக் காண அன்று இரவு முழுக்க கரூர் எல்லையில் தாங்கள் காத்திருந்ததாகவும் இருப்பினும் போலீசார் தங்களை அனுமதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
கரூர் எல்லையில் காத்திருந்தோம்
இது தொடர்பாக ஆதவ் அர்ஜுனா மேலும் பேசுகையில், "எங்களுக்குத் தமிழக அரசின் மீதும் தமிழக அரசின் விசாரணை மீதும் நம்பிக்கை இல்லை. ஏனென்றால் இந்தச் சம்பவம் நடந்த பிறகு நாங்கள் ஓடிவிட்டதாக எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் எங்கும் ஓடவில்லை. கரூர் மாவட்ட எல்லையில் நான், நிர்மல் குமார், அருண் ராஜ் உள்ளிட்டோர் காத்திருந்தோம். இதை எங்கள் செல்போன் சிக்னலை வைத்து செக் செய்யலாம்.
நாங்கள் உள்ளே வந்தால் கலவரம் வரும், பிரச்சினை வரும் என்று சொல்லி வர வேண்டாம் என போலீசார் தான் தடுத்து நிறுத்தினார்கள். இதையும் நாங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம். இந்தச் சம்பவம் நடந்தபோதே திட்டமிட்டு எங்கள் மாவட்ட செயலாளர்கள், கட்சியினர் மீது தடியடி நடத்தியுள்ளனர். தீவிரவாதிகள் போல எங்களைச் சித்தரித்தனர். இது தொடர்பாகவும் நாங்கள் பதிவு செய்வோம்.
வெளியே வராதது ஏன்?
நாங்கள் 60, 70 வருடங்களாகக் களத்தில் இருக்கும் அரசியல் தலைவர்கள் இல்லை. நாங்கள் முதலில் மனிதர்கள்.. அதன் பிறகே அரசியல்வாதிகள். இந்தச் சம்பவம் நடந்த பிறகு எங்களுக்கு முதல் 3, 4 நாட்கள் என்ன செய்வதென்றே தெரியாது. ஏனென்றால் எங்களுக்குள் மனிதாபிமானம் இருக்கிறது. நமது வீட்டில் உறவுகளை இழந்தால் நாம் மீடியா முன்பு பேச மாட்டோம். அப்படித் தான் நாங்கள் இருந்தோம்.
முடக்கத் திட்டம்
அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அன்று முழுக்க நாடகம் போட்டார்கள். அந்த ஒரு வாரம் நீதிமன்றம் விடுமுறையில் இருந்ததால் எங்களால் சட்ட ரீதியாகவும் முறையிட முடியவில்லை. உண்மையில் என்ன நடந்தது என யாராவது பேட்டி கொடுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்! இந்தச் சம்பவத்தை வைத்து தவெக கட்சியை மொத்தமாக முடக்க திமுக திட்டமிட்டனர்" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடக்கும்போதே, தலைமைச் செயலாளர், சுகாதாரச் செயலாளர் செய்தியாளர்களைச் சந்தித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications