சீமானுக்கு சிக்கல்? புகார் மீது நடவடிக்கை என்ன? பட்டாபிராம் போலீசுக்கு பட்டியலின ஆணையம் நோட்டீஸ்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான் புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து பட்டாபிராம் காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க வேன்டும் என்று பட்டியலின ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான். இவர் அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது சாட்டை துரைமுருகன், முன்னாள் கருணாநிதி குறித்து இழிவாக பேசியது தொடர்பாக கைது செய்யப்பட்டது குறித்து பேசினார். அப்போது சாட்டை துரைமுருகன் கைதுக்கு காரணமான குறிப்பிட்ட அந்த சொல்லை, சீமான் பிரஸ் மீட்டில் பேசினார்.

மேலும், அது ஏற்கனவே இருந்த பாடல் என்றும் அந்த பாடலை தான் எழுதவில்லை எனவும் சீமான் விளக்கம் அளித்து இருந்தார். இதற்கிடையே, சீமானுக்கு எதிராக பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த அஜேஸ் என்பவர் கடந்த 16.07. 2024 அன்று, காவல் நிலையத்தில் புகாரளித்து இருந்தார். அவர் தனது புகார் மனுவில், சீமான் செய்தியாளர் சந்திப்பில், மறைந்த தலைவர் கருணாநிதி குறித்துப்பாடிய பாடல் தீண்டாமையை வலியுறுத்தும் தடைசெய்யப்பட்ட வார்த்தைகளைக் கொண்டிருந்ததால், எனது தலைவரான கருணாநிதியை இழிவுபடுத்தியுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு சீமான், இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், குறிப்பிட்ட அந்த வார்த்தை இழிவுபடுத்தும் சொல் என்றும் தனது படத்தில் பயன்படுத்தியது தவறு எனவும் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளர். எனவே நன்கு தெரிந்தே கருணாநிதியை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு மீண்டும் பாடலாக பாடியும் பேசியும் இருக்கிறார் சீமான். இது எனது மனதை புண்படுத்துவதாக உள்ளது. எனவே சீமான் மீது குற்றநடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரளித்துள்ளார்.
இந்த புகாரை பெற்றுக்கொண்டு CSR அளித்துள்ள காவல்துறை 22.07.2024 வரை சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், இது தொடர்பாக மாநில பட்டியலின ஆணையத்திற்கு புகாரை அனுப்பியுள்ளார் அஜேஸ். இந்த புகாரை பரிசீலித்த பட்டியலின ஆணையம் பட்டாபிராம் காவல் நிலைய ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- மனுதாரர் (ஆஜேஷ்) கொடுத்துள்ள புகார் மனுவில், சீமான் வேண்டும் என்றே அந்த வார்த்தையை பயன்படுத்தியது நன்கு தெரிகிறது.
மேலும் வன் கொடுமை சம்பந்தபட்ட வழக்குகளில் பிரிவு 18 A படி முன் விசாரணை எதுவும் தேவையில்லை என்று சட்டம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மனுதாரர் கொடுத்துள்ள புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் சிஎஸ் ஆர் மட்டும் கொடுத்துள்ளார். வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருந்தும் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பது ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே, மனுதாரர் அளித்த புகாருக்கு பட்டாபிராம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? என்பது பற்றி நிலை அறிக்கை ஒன்றினை 12.08.2024க்குள் ஆணையத்திற்கு வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்" என்று அந்த நோட்டீஸில் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications