"அயோத்தி ராமர் கோயில்.." வந்து விழுந்த கேள்வி.. நடிகர் மன்சூர் அலிகான் தடாலடி பதில்.. என்ன சொன்னார்
சென்னை: அயோத்தி ராமர் கோயில் குறித்த கேள்விக்கு இரண்டு நிமிடம் யோசித்த நடிகர் மன்சூர் அலிகான், அடுத்துக் கூறிய பதில் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நடிகர் மன்சூர் அலிகான் தனது அரசியல் கட்சி பெயரை 'இந்திய ஜனநாயக புலிகள்' என்று மாற்றுவதாக அவர் அறிவித்துள்ளார். இது தொடர்பாகச் சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

மன்சூர் அலிகான்: செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், "இந்த இந்திய ஜனநாயக கட்சி தேசியளவில் இயங்கும். இது அனைவருக்குமான கட்சியாகவும் அனைவருக்குமான சம உரிமையைப் பெற்றுத் தரும் கட்சியாக இது இருக்கும். எளியவர்களை ஆட்சியில் அமர வைப்போம்.. சீமானுக்கு முன்பே அரசியலுக்கு வந்தவன் நான்.. 1999இல் புதிய தமிழகம் சார்பில் போட்டியிட்டுள்ளேன். 2019இல் நாம் தமிழர் சார்பில் போட்டியிட்டேன்.
இப்போது 2024இல் எனது கட்சி சார்பில் கட்சி பல தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தப்பட உள்ளனர். எங்களுக்கு கப் தான் முக்கியம்.. விஜய் அரசியலுக்கு வருவது குறித்துக் கேட்கிறார்கள். அவர் இன்றும் படத்தில் தான் நடித்து வருகிறார். அவர் வரும் காலத்தில் தொடங்கப்போகும் கட்சி குறித்துக் கேட்கிறீர்கள். ஆனால், நாங்கள் இன்றே மக்கள் பணியைச் செய்து வருகிறோம்.
பெரியாரின் பணிகள்: பெரியார் ஆரம்பித்த இயக்கத்தை திமுக பொறுப்பு எடுத்துச் செய்தாலும், அவர்கள் அதை இந்தியா முழுக்க எடுத்துச் செல்லவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது. இப்போது பெரியார் சீடர்களாக நாங்கள் இருக்கிறோம். அரசியலுக்கான தேவைப்படும் நிதி குறித்து எல்லாம் எனக்குத் தெரியாது. ஆண்டவனை நம்பி இறங்கி விட்டோம். மக்களிடம் கேட்டுப் பெறுவோம்.
தேர்தலுக்கு நாங்கள் மிக பெரிய கூட்டணி அமைப்போம். சீமான் நல்லவர் தான்... அவர் கூட்டணி வைக்க மாட்டேன் தனித்துத்தான் போட்டியிடுவேன் என்கிறார். அவருக்கு வாழ்த்துகள்.. எங்களுக்கு வேண்டியது மக்களுக்கான உரிமை தான். கடந்த 5 ஆண்டுகளாக 40 எம்பிக்களை வைத்து இவர்கள் என்ன செய்தார்கள்.. விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் உண்மையில் பாராட்டுக்குரியது தான். ஆனால் அவர்களை எங்களுடன் ஒப்பிட வேண்டாம். அவர்கள் வேறு, நாங்கள் வேறு" என்று அவர் தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோயில்: தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு மன்சூர் அலிகான், "அது ராம ராஜ்யம். என்னுடையது ராவண ராஜ்யம்.. ராவணன் இல்லாமல் ராமாயணம் முழுமை பெறாது. நாங்கள் தான் என்றும் கதாநாயகர்கள். அது கதை, புராணம், இதிகாசம் என்று எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் மதிக்கிறோம்.
அந்த ராம ராஜ்யத்தை இந்த ராவண ராஜ்யம் வாழ்த்துகிறது. ராவணன் சீதையைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டார். இந்தியாவைக் காக்க இனி ராவணன்களால் தான் முடியும். ராவணனும் ராமனும் சேரலாம் அதில் தவறு எதுவும் இல்லை" என்று தடாலடியாக மன்சூர் அலிகான் பதிலளித்தார்.
முன்னதாக, இன்று குடியரசு தின விழாவை முன்னிட்டு அவரது தனது கட்சி வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். மேலும், இசைஞானி இளையராஜா மகள் பவதாரிணி மறைவுக்கு 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications