மது குடிக்கும்போது ஒருவரின் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் என்ன! எவ்வளவு மது குடிப்பது பாதுகாப்பானது?
சென்னை: இந்தக் காலத்தில் மது குடிப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் பலரும் வார இறுதி நாட்களில் மது குடிப்பதை வழக்கமாகவே வைத்துள்ளனர். இதற்கிடையே மது குடிக்கும்போது ஒருவரது உடலிலும் மூளையிலும் என்ன நடக்கும் என்பதை மருத்துவர்கள் விளக்கியுள்ளனர். மேலும், எந்தளவுக்கு மது குடிப்பது பாதுகாப்பானது என்ற கேள்விக்கும் பதிலளித்துள்ளனர்.
இந்தக் காலத்தில் புகையிலை பயன்படுத்தும் பழக்கம் குறைந்தாலும் கூட இன்னொரு பக்கம் மதுப் பழக்கம் கணிசமாக அதிகரித்து வருகிறது. வீக் எண்ட் ஆனாலே ஐடி இளைஞர்கள் மது பார்ட்டிகளை நடத்துகிறார்கள். இதனால் ஒவ்வொரு வாரமும் இளைஞர்கள் தொடர்ந்து மது குடிக்கிறார்கள்.

சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் தினசரி கூட மது குடிக்கிறார்கள். ஆனால், இப்படி மது குடிப்பது மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
மது பழக்கம்
மது குடிக்கும்போது அது நமது மூளை, முதுகுத்தண்டு மற்றும் முழு நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது. இது மூளையின் செயல்பாட்டைக் கூட குறைப்பதாகவும் இதனால் தான் தளர்வு அல்லது லேசான மயக்கம் பலருக்கும் ஏற்படுவதாகவும் மனிப்பால் மருத்துவமனை புவனேஸ்வரில் உள்ள ஆலோசகர் நரம்பியல் நிபுணர் டாக்டர் அம்லான் தபன் மோஹாபத்ரா தெரிவித்துள்ளார்.
அடிக்கடி அல்லது அதிகளவில் மதுவை எடுத்துக் கொள்ளும்போது அது நரம்பு செல்களை சேதப்படுத்தி, அவை தொடர்பு கொள்வதையே சீர்குலைக்கிறது. இது தொடர்பாக டாக்டர் அம்லான் தபன் மோஹாபத்ரா மேலும் கூறுகையில், "ஒருவர் தொடர்ந்து மது குடித்து எடுத்து வந்தால் நினைவாற்றல் இழப்பு, ஒருங்கிணைப்பு, மனநிலை பாதிப்பைக் கூட ஏற்படுத்தலாம்" என்கிறார்கள்.
மூளை பிரச்சனைகள்
நரம்பியல் நிபுணர்கள் ஆல்கஹால் தொடர்பான மூளைப் பிரச்சனைகளை உடனடி பாதிப்பு மற்றும் நீண்ட நாட்கள் தொடரும் பாதிப்பு என இரண்டு வகைகளாகப் பிரிக்கின்றனர்.. உடனடி பாதிப்பைப் பொறுத்தவரை உடலில் வைட்டமின் பி1 (தியாமின்) குறைபாட்டால் ஏற்படும் வெர்னிக்கின் என்செபலோபதி ஏற்படும். இது குழப்பம், மோசமான ஒருங்கிணைப்பு மற்றும் அசாதாரணக் கண் அசைவுகளுக்கு வழிவகுக்கிறது. இது தொடர்ந்தால் மனநோய், நினைவாற்றல் இழப்பு, குழப்பம், வலிப்பு கூட ஏற்படும். இவை எல்லாம் குறுகிய காலப் பாதிப்புகள்.
நீண்ட கால பாதிப்பு
ஒருவர் தொடர்ச்சியாக மது அருந்தும்போது நாட்பட்ட நரம்பியல் கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்றும் டாக்டர் அம்லான் தபன் மோகபத்ரா தெரிவித்தார். ஆல்கஹாலிக் நியூரோபதி என்பது நரம்புகளைப் பாதிக்கும் ஒரு நிலை. இதனால் கைகளிலும் கால்களிலும் எரிச்சல், உணர்வின்மை ஏற்படும். பலருக்கு நடப்பதில் சிரமம், சமநிலை இழப்பு மற்றும் சிறிய பொருட்களைப் பிடிப்பதில் கூட தடுமாற்றம் ஆகியவை ஏற்படுமாம். மது அருந்துவது தசை நார்களையும் சேதப்படுத்தும். சில நேரம் பெருமூளை சிதைவைக் கூட ஏற்படுத்துமாம்.
எந்தளவு மது பாதுகாப்பானது?
நான் ரொம்ல லைட்டாக தான் மது குடிப்பேன் என சிலர் சொல்லலாம். இருப்பினும், கொஞ்சம் மது குடித்தாலும் கூட அது ஆபத்தானது தான் என எச்சரிக்கிறார் மருத்துவர் அம்லன் தபன் மோகபத்ரா.. சிறியளவில் மது அருந்துவது கூட தூக்கம், கவனச்சிதறல் உள்ளிட்டவற்றை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார். காலப்போக்கில் மூளையின் ஆற்றலையே இது குறைப்பதாகவும் நரம்பியல் குறைபாடுகளுக்கும் வழிவகுப்பதாகவும் கூறுகிறார்கள். எனவே, மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க மதுவை முழுமையாக நிறுத்துவதே ஒரே வழி என்கிறார்கள்!












Click it and Unblock the Notifications