3 அபாயங்கள்.. கால் வைக்கிற இடம் எல்லாம் "கன்னிவெடி".. விஜயபாஸ்கருக்கு இவ்வளவு சிக்கல்களா? போச்சே!
சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு 3 முக்கியமான சிக்கல்கள் உருவாகி உள்ளன. ஜெயலலிதா மரண வழக்கு தொடங்கி குட்கா வழக்கு வரை பல்வேறு சிக்கல்களில் விஜயபாஸ்கர் சிக்கி உள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளியாகி இருக்கும் ஆறுமுகசாமி ஆணைய ரிப்போர்ட் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த ரிப்போர்ட் 600 பக்கங்களுக்கும் மேல் உள்ளது. இதில் பல அதிர்ச்சி அளிக்கும் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் சசிகலா. கேஎஸ் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேரை குற்றம் செய்தவர்களாக கருதி விசாரிக்க வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்த ரிப்போர்ட் காரணமாக ஏற்கனவே பல்வேறு சிக்கலில் மாட்டி உள்ள விஜயபாஸ்கருக்கு கூடுதல் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

அபாயம் 1 - கைதாகும் வாய்ப்பு
விஜயபாஸ்கருக்கு காத்திருக்கும் பெரிய அபாயம் என்னவென்றால் அது ஜெயலலிதா மரண விசாரணை. இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது. குற்றம் செய்யப்பட்ட நபர்களில் ஒருவராக இருக்க வாய்ப்பு உள்ளவர் என்று விஜயபாஸ்கர் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இவர் மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இதுதான் விஜயபாஸ்கருக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கல்.

சிக்கல் ஏன்?
இந்த அறிக்கையின்படி ஏற்கனவே தலைமை செயலாளர் இறையன்பு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். சில குறிப்பிட்ட நபர்களின் பெயர்கள் இந்த ஆணைய அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை செய்ய வேண்டும். சட்ட வல்லுனர்களின் ஆலோசனைக்கு பின் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.

விஜயபாஸ்கர்
இதில் விஜயபாஸ்கர் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்கப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 2017ல் சென்னையில் மார்ச் மாதம் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய ஓ பன்னீர்செல்வம்.. ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அதிகம் பேசியது அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்தான். ஜெயலலிதா இருந்த அப்போலோ 2வது மாடியை அவர்தான் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார் என்று புகார் வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் அந்த வழக்கில் விஜயபாஸ்கர் விசாரணைக்கு உள்ளாக அதிக வாய்ப்புகள் உள்ளன.

அபாயம் 2 - ரெய்டு
முன்னதாக விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் வீட்டில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீரென ரெய்டு நடத்தியது. முன்னதாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2021 ஏப்ரல் மாதம் வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது வழக்கு பதியப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக வழக்கு பதியப்பட்டது. சி.விஜயபாஸ்கர் மனைவி மீதும் வழக்கு பதியப்பட்டது.

வழக்கு
ஊத்துக்கோட்டையில் கட்டப்பட்டு வந்த வேல்ஸ் மருத்துவ கல்லூரிக்கு, அது கட்டப்படும் முன்பே முழுமையாக செயல்படும் சான்றை கொடுத்துள்ளதாக இவர் மீது புகார் வகுக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில்தான் விஜயபாஸ்கர் சிக்கி உள்ளார். இதில் ரெய்டு நடத்தப்பட்டு முக்கியமான பல ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் அல்லது வழக்கு விசாரணை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அபாயம் 3 - சிபிஐ - குட்கா
இது போக ஏற்கனவே குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணாவிற்கு எதிராக சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசும் அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கிலும் விரைவில் சிபிஐ வழக்கு பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்று விஷயங்களும் விஜயபாஸ்கருக்கு எதிராக திரும்பி உள்ளதால், அவர் இதை எப்படி எதிர்கொள்வார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications