தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு 8 இடங்களில் வெற்றியாமே.. பரபர லோக்சபா சர்வே.. "அந்த" இடங்கள் எவை எவை?
சென்னை: தமிழ்நாட்டில் 4-8 இடங்களை பாஜக - அதிமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் பிடிக்கும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இப்போதே தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் வெளியாக தொடங்கி உள்ளன. பல்வேறு அமைப்புகள் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

ஆனால் இந்த கருத்து கணிப்புகள் எல்லாமே அப்படியே நடக்கும் என்றும் சொல்ல முடியாது. காரணம் தேர்தலுக்கு இன்னும் பல காலம் உள்ளது. கிட்டத்தட்ட 8 மாதங்கள் உள்ளன. அப்படி இருக்க என்ன வேண்டுமென்றாலும் அரசியல் களத்தில் நடக்கலாம்.
8 மாதங்கள் என்பது தேர்தல் அரசியல் களத்தில் மிக நீண்ட காலம் ஆகும். அதனால் கருத்து கணிப்புகள் அப்படியே நடக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் அரசியல் ரீதியாக கருத்து கணிப்புகள் ஒரு பிம்பத்தை உருவாகும். முக்கியமாக அரசியல் ரீதியாக தேர்தல் இப்படி செல்ல வாய்ப்பு உள்ளது என்று கணிப்பை உருவாக்கும்.
அரசியல் கட்சிகளும் கூட தயாராவதற்கு இது போன்ற கருத்து கணிப்புகள் உதவும். உதாரணமாக ஒரு கட்சிக்கு எதிராக கணிப்பு வருகிறது என்றால் அந்த கட்சி தேர்தல் பணிகளை தீவிரமாக செய்து கணிப்புகளை பொய்யாக்கவும் முடியும். இந்த நிலையில்தான் நேற்று அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் குறித்து டைம்ஸ் நவ் இடிஜி சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தப்பட்டு ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்கும் எனவும், 26 கட்சிகளின் ‛‛இந்தியா'' கூட்டணி பின்னடைவை சந்திக்கும் எனவும் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 296 முதல் 326 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
26 கட்சிகள் இணைந்த எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி 160 முதல் 190 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் 4-8 இடங்களை பாஜக - அதிமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் பிடிக்கும் என்று இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
என்ன தொகுதிகள்?: இந்த நிலையில் பாஜக - அதிமுக வெற்றிபெற இத்தனை தொகுதிகளில் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பாஜக தரப்பில் இது பற்றி விசாரிக்கையில், பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் காரணமாக கண்டிப்பாக தேர்தல் நிலவரம் மாறும்.
திமுக ஆட்சி மீதி அதிருப்தி உள்ளது. அதோடு இது லோக்சபா தேர்தல். பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல் என்பதால் மக்கள் திமுகவை பெரிதாக ஆதரிக்க மாட்டார்கள். அதானால் 4- 8 இடங்களை நாங்கள் வெல்வோம். வேலூர், திருநெல்வேலி, கள்ளகுறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய நான்கு தொகுதிகளில் கண்டிப்பாக நாங்கள் வெல்வோம்.
மதுரை, சென்னை, ராமநாதபுரத்தில் வெற்றிக்கு குறி வைத்துள்ளோம் என்று கூறுகின்றனர். ஆனால் திமுக தரப்போ.. நாங்கள் 40க்கு 40 இடங்களை புதுச்சேரியோடு சேர்த்து வெல்வது உறுதி. அதில் மாற்றம் இல்லை.
கடந்த தேர்தலுக்கு முன்பும் இப்படித்தான் சொன்னார்கள். நாங்கள் 39 இடங்களில் வெல்வோம் என்ற கணிப்பை யாரும் வெளியிடவில்லை. ஆனால் நாங்கள் வென்று காட்டினோம். அதேபோல் நாங்கள் இந்த முறையும் வெல்வோம் என்று திமுக தரப்பினர் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications