4 புது அமைச்சர்களின் ஜாதி என்ன? எந்தெந்த தொகுதிகள்? தமிழக அமைச்சரவை மாற்றத்தின் பின்னணி இதுதான்
சென்னை: தமிழக அமைச்சரவை இன்று மாலையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்கிறார். அதேபோல் செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ள அவர்களின் ஜாதி உள்பட சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட உள்ளது. இன்று மாலைய 3.30 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அமைச்சரவை மாற்றம் நடைபெற உள்ளது.

அப்போது தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். அதேபோல் 4 பேர் புதிதாக அமைச்சரவையில் இணைய உள்ளனர்.
அதன்படி செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர். மேலும் 3 பேர் இன்று அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளனர். பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சர் கே ராமச்சந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் கைவிட்டுள்ளார்.
இதில் செந்தில் பாலாஜி ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செயல்பட்டவார். அமலாக்கத்துறை கைதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோல் ஆவடி நாசரும் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். அதன்பிறகு அவரிடம் பதவி பறிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அமைச்சராக உள்ளார்.
இன்று அமைச்சராகும் செந்தில் பாலாஜி கரூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அவர் கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர். அதேபோல் கோவி செழியன் திமுகவில் நீண்டகாலமாக செயல்பட்டு வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ள இவர் பட்டியலினத்தை சமுதாயத்தை சேர்ந்தவர். ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த இவர் தற்போது தமிழக அரசு தலைமை கொறடாவாக செயல்பட்டு வந்த நிலையில் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
அதேபோல் ஆர் ராஜேந்திரன் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். பனமரத்துப்பட்டி ஆர் ராஜேந்திரன் என அழைக்கப்பட்டு வுரும் இவர் சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இவர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். மேலும் ஆவடி நாசர் இஸ்லாமியர். தற்போது அமைச்சரவையில் உள்ள இஸ்லாமியர் செஞ்சி மஸ்தான் நீக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதில் ஆவடி நாசர் அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். ஆவடி நாசர் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.












Click it and Unblock the Notifications